
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் (Tangedco) வசூலிக்கப்படும் இதர கட்டணங்களை உயர்த்தியுள்ளதால், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் நுகர்வோர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
TNERC மின் கட்டணங்களை 4.83 சதவீதம் உயர்த்தியிருந்தாலும், 2022 முதல் உயர்த்தப்பட்ட கட்டணங்களின் ஒட்டுமொத்த விளைவாக மொத்த தொகை இரட்டிப்பாகியுள்ளது. வீட்டுக்கான சிங்கிள் அல்லது த்ரீ பேஸ் இணைப்புக்கு விண்ணப்பித்தால், திருத்தப்பட்ட இதர கட்டணங்களின் கீழ் நுகர்வோர் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கட்டணம் மற்றும் வைப்புத்தொகையாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய இதர கட்டணங்களின் கீழ், ஐந்து கிலோவாட் தேவைக்கு த்ரீ பேஸ் வீட்டு இணைப்பைக் கோரும் ஒரு நுகர்வோர், 2021 ஆம் ஆண்டில் ரூ.19,050 செலவிட்ட நிலையில், தற்போது ரூ.35,570 வரை செலவழிக்க வேண்டியுள்ளது. புதிய மின்சேவை இணைப்புக்கு விண்ணப்பிக்கும் நுகர்வோருக்கு கட்டண உயர்வு பெரும் சுமையை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதலின்படி தாழ்வழுத்த வீட்டு மின் நுகர்வோருக்கு, சிங்கிள் பேஸ் மின் இணைப்புக்கு, 1,070 ரூபாயும், த்ரீ பேஸ் மின் இணைப்புக்கு 1,610 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டண உயர்வுக்கு முன்பாக இதற்கான கட்டணம் சிங்கிள் பேசுக்கு ரூ.500 ஆகவும், த்ரீ பேசுக்கு ரூ.750 ஆகவும் இருந்தது.
தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கான மேம்பாட்டு கட்டணம் ஒரு மின் இணைப்புக்கு ரூ.1,400-ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. த்ரீ பேஸ் இணைப்புக்கு, ஒரு கிலோவாட்டுக்கு ரூ.1,000 லிருந்து ரூ.2,145 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், தாழ்வழுத்த கேபிளுக்கான மேம்பாட்டு கட்டணம் ஒரு மின் இணைப்புக்கு ரூ. 5,000-ல் இருந்து ஒரு இணைப்புக்கு ரூ. 7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. த்ரீ பேசை பொறுத்தவரை, இது ஒரு கிலோவாட்டுக்கு ரூ. 2,500லிருந்து ரூ. 5,355 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சிங்கிள் பேஸ் பாதுகாப்பு வைப்புத்தொகையைப் பொறுத்தவரை, ஒரு இணைப்புக்கு ரூ.200 லிருந்து ரூ.320 ஆகவும், த்ரீ பேஸ் பாதுகாப்பு வைப்புத்தொகை ஒரு கிலோவாட்டுக்கு ரூ.600 லிருந்து ரூ.965 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குடிசை தவிர தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கான பதிவு மற்றும் செயலாக்கக் கட்டணம் ஒரு மின் இணைப்புக்கு ரூ.100-ல் இருந்து ரூ.215 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு மற்றும் மின் சேவையை பெறுவதற்கான கட்டணங்களை பெருமளவு உயர்த்தி இருப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry