மகனுக்கோ, மகளுக்கோ திருமண பேச்சை ஆரம்பித்தவுடன் பெற்றோரைப் பாடாய்ப்படுத்தும் விஷயம் செவ்வாய் தோஷம்தான். திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்தான் இதற்கு காரணம். செவ்வாய் தோஷம் என்ற ஒற்றை காரணத்துக்காகப் பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருவதை நாம் காண்கிறோம்.
செவ்வாய் தோஷம் விளக்கம் :
செவ்வாய் தோஷம் என்றவுடன் பயம், பீதி அடைகிறார்கள். உண்மையில் செவ்வாய் தோஷம் என்பது உயிர் போகும் அளவிற்கு கொடுமையான விஷயம் இல்லை. ரத்தத்தின் காரக கிரகம் செவ்வாய். செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்களுக்கு, மற்றவர்களை விட சற்றே கூடுதலான உணர்ச்சி இருக்கும். அது சிலருக்குக் கோபமாகவும், சிலருக்கு வேகமான செயல்பாடுகளாகவும், சிலருக்கு காம உணர்ச்சியாகவும் இருக்கும். செவ்வாய் ஆதிக்கம் உடையவர்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து காணப்படுவார்கள். காரணம் செவ்வாய் போர் குணம் கொண்ட கிரகம். பிரச்னை என்று வந்துவிட்டால், செவ்வாய் ஆதிக்கம் கொண்டவர்கள் அடித்துவிட்டுதான் பேசவே தொடங்குவார்கள்.
செவ்வாய் தோஷம் பார்க்கும் முறை :
ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் இருந்தால் தோஷம் என்று சொல்வார்கள். அதேபோல், சந்திரன் (ராசி) மற்றும் ஆணாக இருந்தால் சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும்போதும் தோஷமாகும். செவ்வாய் தோஷத்தை லக்னத்திலிருந்தும், சந்திரனிலிருந்தும், சுக்கிரனிலிருந்தும் பார்க்க வேண்டும் என ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது. ஆனாலும் லக்னத்திலிருந்து பார்க்கும் தோஷத்திற்கே வலு அதிகம்.
Also Read : திருமணத்திற்கு எத்தனைப் பொருத்தம் தேவை? பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிப்பது சரியா? Part – 2
செவ்வாய் தோஷ விதி விலக்கு :
ஜாதகத்தில் லக்னம், சந்திரன் (ராசி), சுக்கிரன் (ஆணாக இருந்தால்) 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், தோஷம். தோஷமோ, யோகமோ ஜோதிடத்தில் இல்லாத விஷயத்தை சொல்லமாட்டார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு விதி இருந்தால் அதற்கு ஏராளமான விதி விலக்குகள் உண்டு. நம்மில் பலர் விதிகளை மட்டும் கெட்டியாகப் பிடித்து கொள்கிறார்களே தவிர, விதி விலக்குகளைக் கணக்கில் கொள்வதே இல்லை. செவ்வாய் தோஷத்திற்கு விதி விலக்குகளும், தோஷ நிவர்த்திக்கு நிறைய காரணங்களும் இருக்கின்றன.
• கடகம், சிம்ம லக்னம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கே இருந்தாலும் தோஷம் இல்லை.
• மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் இந்த லக்னங்கள், ராசிகளுக்கு செவ்வாய் தோஷம் இல்லை.
• செவ்வாயை குரு பார்த்தாலோ அல்லது செவ்வாய் குரு இணைந்து இருந்தாலோ தோஷம் இல்லை. செவ்வாய் குருவுடன் சேர்ந்திருப்பது குருமங்கள யோகம் ஆகும்.
• சந்திரனுக்கு கேந்திரங்களில் செவ்வாய் இருந்தாலும் தோஷ நிவர்த்தி.
• செவ்வாயை பாவ கிரகங்கள் பார்த்தாலோ அல்லது செவ்வாயுடன் பாவ கிரகங்கள் சேர்ந்தாலோ தோஷம் இல்லை.
• செவ்வாய் நின்ற ராசி நாதன் கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10, திரிகோண ஸ்தானங்களான 1, 5, 9-ல் இருந்தால் தோஷம் இல்லை.
அனைத்தையும் விட மேலாக செவ்வாய் தசா வரவில்லையென்றால், தோஷம் குறித்து கவலை வேண்டாம். செவ்வாய் தோஷத்திற்கு பல விதி விலக்குகள், தோஷ நிவர்த்திகள் இருக்கும் போது தோஷம் குறித்து வீணாக குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.
தொடர்புக்கு :- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry