ஆருத்ரா தரிசனம்! தில்லையில் கொடியேறியது! 10 நாட்கள் திருவிழா கோலம் – ஜனவரி 3ல் நடராஜரின் பேரானந்தத் தாண்டவம்!

0
68
chidambaram-natarajar-temple-arudra-darshan-2026-festival-schedule
The Margazhi Arudra Darshan festival started at Chidambaram Natarajar Temple today. Key events include the Chariot festival on Jan 2 and the grand Arudra Darshan on Jan 3, 2026. Get the complete 10-day schedule here.

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்று விழா இன்று நடைபெற்றது. ஜன.2ம் தேதி வெள்ளிக்கிழமை தேர் திருவிழாவும், ஜன.3ம் தேதி சனிக்கிழமை ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ விழாவுக்கான கொடியேற்றம் இன்று (டிச.25) காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, தேவாரம் திருவாசகம் ஓதிட, வேத மந்திரங்கள் முழங்கிட கோயில் கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சதர் கொடியேற்றினார்.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பஞ்சமூர்த்தி கோயில் உட்பிரகாரத்தில் உலா வந்தது. முன்னதாக கொடியேற்றத்தை முன்னிட்டு சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை காட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து நாளை (டிச.26) வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், டிச.27ம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், டிச.28ம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், டிச.29-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், டிச.30-ம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், டிச.31-ம் தேதி தங்க கைலாச வாகனத்தில் சுவமி வீதி உலாவும் நடக்கிறது.

ஜன.1-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வெட்டுக் குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது. ஜன.2ம் தேதி வெள்ளிக்கிழமை தேர்த் திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சாமிகளுக்கு ஏக கால லட்சார்ச்சனை நடைபெறும். ஜன.3-ம் தேதி சனிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும்.

பின்னர் காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜன.4-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதி உலாவும், ஜன.5-ம் தேதி திங்கள் கிழமை ஞானப் பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். உற்சவம் நடைபெறும் 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித் சபை முன்பு மாணிக்க வாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry