சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் பலமுறை பெரிதாக பேசப்பட்டுள்ளன. அப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன் ஓதுவார் ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட அனுமதிக்காதது பெரும் பிரச்சனையாக உருவெடுத்து, மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று இறுதியில் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
அதன் பின்னர் கோயிலுக்குள் மிகப்பெரிய அளவில் அலங்காரங்கள் செய்யப்பட்டு பட்டாசு ஆலை அதிபர் இல்ல திருமணம் நடத்த அனுமதித்தது, கோயிலுக்குள்ளேயே காருக்குள் செல்ல அனுமதித்தது என தீட்சிதர்களின் சில செயல்கள் கண்டனத்துக்கு உள்ளாகின.
இந்த நிலையில் கரோனாவை காரணம் காட்டி நடராஜர் கோயிலுக்குள் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக கனகசபை மீது ஏறி வழிபடுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் தமிழகம் முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகும், கனகசபை மீது ஏறி வழிபட பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.
கனகசபை மீது பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. அதன் விளைவாக கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடலாம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கோவிலுக்கு வந்து அந்த கனகசபையில் பக்தர்களை அனுமதித்து அரசாணையை நிறைவேற்றினர்.
இந்த நிலையில், கோயில் நிர்வாகத்தை சீரமைக்கும் விதமாக, கோவில் வரவு – செலவு மற்றும் நிர்வாக முறைகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அறநிலையத்துறை குழு ஒன்றை கோயிலுக்கு அனுப்பியது. ஆனால் அக்குழு ஆய்வு செய்ய தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.
அதனையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்த தங்களது கருத்துக்களை அறநிலையத்துறை குழுவிடம் தெரிவிக்கலாம் என்று நாளிதழ்களில் அரசு விளம்பரப்படுத்தியது. அதன்படி 20 மற்றும் 21 தேதிகளில் அறநிலையத்துறை குழுவினர் சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றனர்.
இதனூடே, தீட்சிதர்கள் மீது சட்டப்படியான சில நடவடிக்கைகளை அறநிலைத்துறை எடுக்கத் தொடங்கியுள்ளது. குழந்தைத் திருமணம் செய்து வைத்ததாக கோயில் தீட்சிதர்கள் மீது கடந்த 20-ம் தேதியன்று இரவு சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து 21-ம் தேதியன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தேவாரம் திருவாசகம் பாட அனுமதித்து அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.
முதல் கட்டமாக கனகசபை மீது ஏறி வழிபட அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு தேவாரம் திருவாசகம் பாடலாம் என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை திருமண வழக்கு, கனகசபை மீது ஏறி வழிபட அனுமதி, கனகசபை மீது தேவாரம் திருவாசகம் பாட அனுமதி என்று ஒவ்வொன்றாக தீட்சிதர்கள் மீதான தனது பிடியை அறநிலையத்துறை இறுக்கி வருகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry