
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு, மகப்பேறு விடுப்பு காலமும் பதவி உயர்வுக்கான தகுதிகாண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை தருவதாக, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சங்கர் தெரிவித்தார். சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சலுகை அளித்ததை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிவிப்புகள் எல்லாமே எங்களிடம் இருந்து பணம் பெற்று செய்யக்கூடியவை. ஊதிய மாற்றத்தின்போது வழங்காத 21 மாத ஊதிய நிலுவைத் தொகை, கடந்த ஆட்சிக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பு நிலுவைத் தொகை வழங்கப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று, தேர்தல் வாக்குறுதியில் கூறியதை அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

பெண்களுக்கான மகப்பேறு விடுப்பை ஓராண்டாக நீட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியருக்கு பதிலி ஆசிரியர்கள் நியமிக்க அறிவிப்பு இல்லை.
அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில்லை. உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக மாற்றுவது, நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்து, பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை,” என்று அவர் கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry