அங்கீகாரமற்ற மனைகள், வீடுகளை பதிந்து தள்ளும் பொறுப்பு சார்பதிவாளர்! பத்திரப்பதிவுக்கு டோக்கன் விநியோகிக்கும் திமுக நிர்வாகி?

0
60
Madurai Melur Sub Registrar Office | File Image

கள்ளச்சாராயமோ, பத்திரப்பதிவோ எதுவானாலும், பிரச்னைக்கு மூல காரணமாகவும் அமைவதுடன், நடவடிக்கை எடுப்பது போல நாடகம் நடத்துவது திமுகவின் வாடிக்கையாகிவிட்டது என்றே கூறுகின்றனர். சில தினங்களுக்கு முன் மேலூர் மேற்கு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பொறுப்பு சார் பதிவாளராக பணிக்கு வந்த பானுமதி, காலை தொடங்கி இரவு 10.30 மணி வரை 56 பத்திரங்களை பதிவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதிலென்ன தவறு என்பதுதானே உங்கள் கேள்வி? மேலூர் மேற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிரந்தர சார்-பதிவாளர் விடுப்பில் செல்லும்போது அல்லது செல்ல வைக்கப்படும்போது பொறுப்பு சார்பதிவாளராக வரும் பானுமதி, அங்கீகாரம் பெறாத மனை அல்லது வீடுகளை அதிகளவில் பத்திரப் பதிவு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மேலூர் மேற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரு நாள் மட்டும் பொறுப்பு சார்பதிவாளராக பணியாற்றிய பானுமதி, முப்பதுக்கும் மேற்பட்ட அங்கீகாரமற்ற மனைப் பிரிவுகளை பதிந்ததாக பத்திரப்பதிவு உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து சனிக்கிழமை சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில், மதுரை பத்திரப்பதிவு ஏஐஜி விஜயலட்சுமி தலைமையில், டிஐஜி லதா மற்றும் மாவட்ட தணிக்கை அதிகாரி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் பதியப்பட்ட பத்திரங்களில், அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகள் எத்தனை என்பதை அவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

இதில் முறைகேடு நடந்திருப்பதாக தெரியவந்ததன் அடிப்படையில், சார் பதிவாளர் பானுமதியை விசாரணைக்காக மதுரை ஏஐஜி அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் படி உத்தரவிட்டதுடன், சில ஆவணங்களையும் பத்திரப்பதிவு உயர் அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. முழுமையான விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று பதிவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுமட்டுமல்லாமல், மேலூர் மேற்கு பத்திரவுப்பதிவு அலுவலகத்தில் நடைபெறும் அத்தமீறல்கள் குறித்து, அடையாளத்தை மறைத்துப்பேசும் பதிவுத்துறை ஊழியர்கள் சிலர், இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய அலுவலகத்தில் டோக்கன் வாங்கத் தேவையில்லை. மேலூர் நகர திமுக தகவல் தொழில் நுட்ப நிர்வாகி முத்தையா இளவரசனிடமும், தங்கநாச்சியார் கணேஷ் பாண்டியனிடமும், அவருக்கு தொடர்புடைய தங்கநாச்சியார் ஜுவல்லரியிலும் தான் டோக்கன் வாங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

பத்திரப் பதிவுத்துறையில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பத்திரம் பதிவு செய்வதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கியதெல்லாம் நடந்திருக்கிறது. இந்தத் தகவல்கள் வெளிவந்தபிறகு, நடவடிக்கை எடுக்கிறோம் பேர்வழி என்று திமுக நாடகமாடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன்னர், மேலூர் அடுத்த கருங்காலக்குடி பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் அங்கு சார் பதிவாளராக பணியாற்றிய அருள்முருகன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில், சுமார் ரூ.3 லட்சத்திற்கும் மேல் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்கதையாகி வரும் நிலையில், மேலூரில் ஆய்வு நடந்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry