காவல்துறை Vs போக்குவரத்துத்துறை! வலுக்கும் ஈகோ யுத்தம்! மவுனமாய் வேடிக்கைப் பார்க்கும் தமிழக அரசு!

0
116

22 buses in no-parking zones opposite Kalaignar Centenary Bus Terminus (KCBT) in Kilambakkam have been fined.

நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் சீருடையுடன் ஏறிய காவலர், பயணச்சீட்டை எடுக்க மறுத்து நடத்துநரிடம் வாக்குவாதம் செய்யும் காணொளி இணையத்தில் வைரலாகப் பரவியது. இறுதியில் உடனிருந்த பயணிகள் சமாதானப்படுத்தியதால் அந்தக் காவலர் பயணச்சீட்டை வாங்கினார். இப்போது இந்த விவகாரம் போக்குவரத்துத்துறை – காவல்துறை இடையேயான ஈகோ மோதலாக உருவெடுத்துள்ளது.

சென்னையில் பரங்கிமலை ஆயுதப்படையில் ஆறுமுகப்பாண்டி என்பவர் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் புழல் சிறையில் இருந்து கைதி ஒருவரை நெல்லை மாவட்டம் நாங்குநேரி கிளைச் சிறைக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று, கடந்த 21ஆம் தேதி ஒப்படைத்துள்ளார். பின்னர் நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசுப் பேருந்தில், திருநெல்வேலி செல்வதற்காக ஏறியுள்ளார். நடத்துநர் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு, தாம் பணியில் இருப்பதால் பயணச்சீட்டு வாங்க முடியாது என மறுத்து அவர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சனையை அடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது. நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்துத் துறை செயலாளர் கே.பணீந்திர ரெட்டி கூறும்போது, “தமிழ்நாடு அரசின் சார்பில் அரசுப் பேருந்துகளில் காவல்துறையினரை பயணச் சீட்டு இன்றி ஏற்றிச் செல்லலாம் என்ற அரசாணை இதுவரை வெளியிடப்படவில்லை, அதிகாரபூர்வமாக அரசாணை வெளியானவுடன் அதைச் செயல்படுத்துவோம். அதுவரை காவலர்கள் அரசுப் பேருந்துகளில் எப்படி பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதை போக்குவரத்துத் துறை தெளிவுபடுத்தியுள்ளது,” எனக் கூறியுள்ளார். அதாவது காவல்துறையினர் டிக்கெட் எடுத்துதான் பயணிக்க வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Also Read : தப்பு செஞ்சா சாமி கண்ண குத்துமா? முன்னோர்கள் சொன்னதுல இவ்ளோ அர்த்தம் இருக்கா?

இந்த நிலையில், சென்னை – புதுச்சேரி பேருந்து தாம்பரத்தில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக தாம்பரம் போக்குவரத்து போலீசார் அரசுப் பேருந்துக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்தனர். தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் ஒரு அரசுப் பேருந்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் நோ பார்க்கிங்-ல் நிறுத்தப்பட்ட அரசு பேருந்திற்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிக பயணிகளை ஏற்றி வரும் அரசு பேருந்துகளுக்கும் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிறுத்தம் இல்லாத பகுதிகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றினாலும் அபராதம் விதிக்கப்படுகிறது.

இதேபோல் சென்னையில் ‘நோ பார்க்கிங்’-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், தமிழகம் முழுவதும் விதிகளை மீறும் அரசுப் பேருந்துகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதன்மூலம் விதி மீறும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் இந்த நடவடிக்கை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அரசுப் பேருந்துக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீஸார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் டிஜிபி நட்ராஜ், “காவலர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்வது தொடர்பாக ஏற்கனவே பல பிரச்னைகள் வந்துள்ளன. அதுபோன்ற பிரச்னைக்கு மீண்டும் வழிவகுக்காமல், பேருந்தில் சீருடையில்லாமல் வரும் காவலர்களுக்கு மட்டும் பயணச் சீட்டை வாங்கச் சொல்லலாம், பணிக்குச் செல்லும் காவலர்கள் அடையாள அட்டையைக் காட்டினால் விலக்கு அளிக்கலாம்.” என்று கூறியுள்ளார்.

அதேநேரம், கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாததே இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். “2021 செப்டம்பர் மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல்துறை மானியக்கோரிக்கையின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 44 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பணிசெய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பும் அடங்கும். இந்த அறிவிப்பை 99 சதவிகிதம் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியலிலேயே திமுக அரசு வைத்திருந்தது. ஆனால், பிரச்சனை ஏற்பட்டவுடன் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது” என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

“காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டையைக் காண்பித்து பேருந்தில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பயணம் செய்யலாம். இதற்காக ‘நவீன அடையாள அட்டை’ (Smart Identity Card) வழங்கப்படும்” எனவும் முதலமைச்சர் அப்போது குறிப்பிடப்பட்டிருந்தார். இதுவும் அறிவி்ப்போடு இருக்கும் நிலையில், ஆட்சியாளர்கள் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியலுக்கு இதையும் கொண்டுபோய்விட்டார்கள். காவல்துறை – போக்குவரத்துத்துறை இடையே ஈகோ யுத்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு இனியாவது விழித்துக்கொண்டு உரிய தீர்வு காண வேண்டும். தமிழக அரசு விரைந்து தலையிட்டு பிரச்சனைக்குத் தீர்வுக் காண வேண்டும் என்பதே போக்குவரத்து  ஊழியர்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry