வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தன்னைச் சந்திக்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளையும், காட்டுமன்னார்கோயில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வனையும் நிற்க வைத்துப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தந்தை எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தியின் நினைவு நாள், கடந்த சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே முட்டம் பகுதியில் உள்ள வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வீட்டிற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும், காட்டுமன்னார்கோயில் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச்செல்வன் கட்சி நிர்வாகிகளுடன் சென்றுள்ளார். அப்போது சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோரை அமர வைக்காமல், அமைச்சர் பன்னீர்செல்வம் நிற்க வைத்துப் பேசியதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிந்தனைச் செல்வன் உள்ளிட்ட சிலரை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்து பேசியிருக்கிறார். அவர் அமர்ந்த இடத்தில் இருந்து தொலைவில், வரிசையாக பிளாஸ்டிக் நாற்காலிகளை போட்டு சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோரிடம் பேசியிருக்கிறார்.
இதனூடே, அமைச்சரின் மருமகனுக்கு சிந்தனைச் செல்வன் புத்தர் சிலை ஒன்றை ஒன்றை பரிசளித்துள்ளார். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், சிலையைப் பெறும் அவரது மருமகனும் காலனி அணிந்தபடி நிற்கின்றனர். விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் மற்றும் நிர்வாகிகள் காலனி இல்லாமல் நிற்கும் புகைப்படமும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படங்களை எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வனுடன் சென்றி விசிக-வின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் எல்.கே. மணவாளன் தனது செல்போனில் எடுத்துள்ளார்.
இதுதான் திமுக கட்டிக்காக்கும் சமூகநீதியா? இதுதான் திராவிடம் வளர்த்தெடுத்த சுயமரியாதையா? என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக சிந்தனைச் செல்வன் நீண்ட விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருமாவளவன் எம்.பி.யாக வெற்றி பெற்றதற்கே அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்தான் காரணம் என்று தொடங்கி பல நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளார்.
தனிப்பட்ட வாழ்வில் தனக்கு அவர் செய்த உதவிகளை என் உயிருள்ளவரை மறவேன் என்று குறிப்பிட்டுள்ள அவர், எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை சந்தித்து விடைபெற்ற நிகழ்வின் ஒரு பகுதியை மட்டும் பதிவு செய்து அவதூறாக பதிவிட்டு இருக்கிறார்கள். எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனக்கு மட்டுமல்ல, விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கும், தமது தலைவருக்கும் கிடைத்த தூய்மையான தோழமை என்று கூறியுள்ளார்.
கடந்த ஜுலை மாதம், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தன்னைச் சந்திக்க வந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளையும் ஜமாத் நிர்வாகிகளையும் நிற்க வைத்துப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதுதொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப்பொருளானது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry