“60% அதிகரித்த குற்றங்கள்! – கஞ்சா போதையில் சீரழியும் தமிழகம்! – ஸ்டாலினின் ‘மாய உலகம்’ அம்பலம்! – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!”

0
7
anbumani-slams-dmk-women-safety-failure-tn-2026
Dr. Anbumani Ramadoss reveals shocking statistics on crimes against women in Tamil Nadu under DMK rule. With a 60% increase in crimes and a surge in POCSO cases, is the DMK's 'Dravidian Model' failing to protect women? Read the full analysis.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் மணிப்பூர் மாநிலத்தில் கூட பெண்களுக்கு எதிராக இவ்வளவு அதிகக் கொடுமைகள் இழைக்கப்படவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என்றும், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையில் தான் போட்டி என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வலுவானக் கூட்டணியை அமைத்த பிறகு, தோல்வி பயத்தில் தூக்கத்தைத் தொலைத்து விட்ட முதல்வர் ஸ்டாலின், அதனால் ஏற்பட்ட மயக்கத்தில் வெளிப்படுத்திய உளறல்களாகத் தான் இவற்றையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கே திமுகவுக்கு தகுதி இல்லை. தமிழ்நாடு என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் என்ற அவப்பெயரைத் தேடித் தந்தது மட்டும் தான் திமுகவின் சாதனை. புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை திமுகவைச் சேர்ந்த மனித மிருகம் ஒன்று வேட்டையாடியதை மறுக்க முடியுமா?

அந்த மிருகத்துக்கும், திமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி வந்த முதல்வர் ஸ்டாலின், திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் அந்த மிருகம் இருக்கும் புகைப்படங்கள் வெளியான பிறகு அந்த மிருகம் திமுகவின் அபிமானி என்று சப்பைக்கட்டு கட்டியதை மறக்க முடியுமா? பல்கலைக்கழக வளாகத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத கஞ்சா போதை அரசின் முதல்வருக்கு, பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது?

கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற காவியா என்ற ஆசிரியை கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி ராமேஸ்வரத்தில் 12ம் வகுப்பு மாணவி ஷாலினி, காதலிக்க மறுத்த காரணத்திற்காக அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற மனித மிருகத்தால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

Also Read : வேங்கைவயல் முதல் நாங்குநேரி வரை: நீதிக்காகக் காத்திருக்கும் 3 ஆண்டுகள்! 2026 தேர்தலில் கிழியும் திமுகவின் ‘சமூக நீதி’ பிம்பம்!

கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி கோவை விமான நிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் 3 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமையை நாம் எவரும் மறந்து விட முடியாது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி, கஞ்சா போதையில் திரிந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர இளம்பெண், அவரது தாயின் கண் எதிரிலேயே இரு காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது. 2024ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் திம்மாவரம் என்ற ஊரில் பால் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று பால் விற்பனை செய்துவிட்டு வந்த இளம் பெண், மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

முதல்வரால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் மணிப்பூர் மாநிலத்தில் கூட இவ்வளவு அதிகக் கொடுமைகள் பெண்களுக்கு இழைக்கப்பட்டதில்லை. இதைவிடக் கொடுமை என்னவென்றால் இவ்வளவுக்கு பிறகும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான்.

2020ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 4,338 ஆக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021ம் ஆண்டில் 6,064 ஆகவும், 2022ம் ஆண்டில் 6,580 ஆகவும், 2023ம் ஆண்டில் 6,968 ஆகவும் அதிகரித்திருக்கிறது. திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 60.66% அதிகரித்திருக்கிறது.

அதேபோல், போக்சோ சட்டத்தின்படி 2024ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 6,975 ஆக அதிகரித்திருக்கிறது. 2023ம் ஆண்டு இதே சட்டத்தின் கீழ் பதிவான 4,581 வழக்குகளுடன் ஒப்பிடும் போது இது 52.30% அதிகம் ஆகும். திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் மட்டும் 217 பெண் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படனர்.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இந்த அளவுக்கு அதிகரித்திருக்கும் நிலையில், அது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல், தமிழ்நாடு தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார் என்றால், அவர் எந்த அளவுக்கு மாய உலகில் வாழ்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்த பிறகும், அதன்பின் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு பிறகும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக புதிய உற்சாகமும், மகிழ்ச்சியும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் எங்கள் பக்கம் திரண்டிருக்கிறது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் முதல்வர் ஸ்டாலின் அண்மைக் காலமாக அதிகமாக புலம்பத் தொடங்கியுள்ளார்; தோல்வி பயத்தில் எங்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்.

அழுத்தங்களுக்கு அடிபணிவது திமுகவின் மரபணுக்களில் ஊறிப்போன ஒன்றாகும். 1970-களில் திமுக அரசின் மீது எம்.ஜி.ஆர் அளித்த ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தால் காவிரி நீர் உரிமைகளை அன்றைய முதல்வர் கருணாநிதி தாரை வார்த்ததையும், கச்சத்தீவு உரிமைகளை தாரை வார்க்கத் துணை போனதையும் தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக தலைமை அலுவலகத்தின் முதல் மாடியில் சிபிஐ குழுவை அனுப்பி சோதனை நடத்திக் கொண்டே, தரைத் தளத்தில் திமுகவுடன் காங்கிரஸ் தலைவர்கள் தொகுதிப் பங்கீட்டு பேச்சுகளை நடத்தியதும், 2 ஜி வழக்கு ஸ்டாலின் மீதும் பாய்ந்து விடுமோ ? என்ற அச்சத்தில் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 64 தொகுதிகளை வாரி வழங்கி அன்றைய திமுக தலைமை மண்டியிட்டது வரலாறு. இத்தகைய அடிமை வரலாறு கொண்ட ஸ்டாலின் வீர வசனங்களை பேசக்கூடாது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியால் கடந்த 5 ஆண்டுகளாக ஏற்பட்ட சீரழிவுகளுக்கு கணக்குத் தீர்க்க தமிழக மக்கள் காத்துக் கிடக்கின்றனர். இன்னும் இரு மாதங்களில் அவர்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவார்கள். அதனால், வரும் தேர்தலில் தமிழகத்திற்கு துரோகம் செய்த திமுக கூட்டணி மண்ணைக் கவ்வப் போவது உறுதி” என்று அன்புமணி கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry