
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு(SIR – Special Intensive Revision) ஆதரவாகவும், திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்றுப் பேசிய, அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், திமுக அரசையும், சென்னை மாநகராட்சி ஆணையரையும் கடுமையாக விமர்சித்தார்.
“2002 இல் பாஜக ஆட்சியில் திமுக அவர்களோடு கூட்டணியில் இருந்தது. அப்போதும் தீவிர திருத்தத்தை நடத்தியிருந்தார்கள். இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் வாக்குள்ளவர்கள் என 49 லட்சம் பேரை பட்டியலிலிருந்து நீக்கினார்கள்.
அப்போதெல்லாம் ஸ்டாலின் அமைதியாகத்தான் இருந்தார். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த தீவிர திருத்தத்தை செய்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் அதை செய்ய தவறிவிட்டது. அதிமுக சார்பில் நாங்களும் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து ஓய்ந்துவிட்டோம். இறந்தவர்கள், விலாசம் மாறியவர்களின் பட்டியலை திமுக வைத்திருக்கிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுக்கு இறந்தவர்கள்தான் கைகொடுக்கின்றனர். திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதில் மேதமை வாய்ந்தவர்கள். அதனால்தான் அவர்களுக்கு SIR என்றால் கசக்கிறது. ஒரு பக்கம் SIR யை எதிர்ப்பது போல எதிர்த்துக் கொண்டு, இன்னொரு பக்கம் B.L.O க்களுடன் கட்சி ஆட்களை அனுப்பி வைக்கிறார் ஸ்டாலின்.
திருத்தத்தை எதிர்க்கும் நீங்கள் அதை புறக்கணிக்க வேண்டியதுதானே. சென்னை மாநகராட்சி ஆணையர் திமுக மாவட்டச் செயலாளரை போல செயல்படுகிறார். அலைபேசியில் தொடர்புகொண்டால் கூட எடுப்பதில்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர்களை B.L.Oக்களாக நியமித்து தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைத்து வருகிறார். அதிகாரிகள் நியாயமாக செயல்பட வேண்டும். இல்லையேல் இன்னும் 4 அமாவாசைதான். ஆட்சி மாறியவுடன் உங்களுக்கான தண்டணை கிடைக்கும்.” என்று எச்சரித்தார்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, எஸ்.ஐ.ஆர். முறைகேடுகளை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினார். நிர்வாகிகளும், தொண்டர்களும் முழக்கங்களை எழுப்பினார்கள். 8 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
