
அப்பாவின் சொத்தில், பெண்களுக்கும் முழு உரிமை உள்ளது. திருமணமான பெண்களானாலும் சரி, திருமணமாகாத பெண்களானாலும் சரி, தந்தை சுயமாக சம்பாதித்த சொத்தில் பெண்களுக்குப் பங்கு உள்ளது. ஆனால், திருமணமான பெண்ணின் அப்பா, தன்னுடைய சொத்தை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்துவிட்டால், அதை உரிமை கோர முடியாது. அப்பா உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், வாரிசு என்ற அடிப்படையில் மகள்களுக்கும், விதவை மனைவிக்கும் சொத்தில் முழு உரிமை உள்ளது.
தாயின் சொத்தைப் பொறுத்தவரை, திருமணமாகாத மகளுக்குத் தாயின் சொத்தில் உள்ள உரிமையைப் போலவே, திருமணமான மகளுக்கும் பரம்பரை உரிமைகள் உள்ளன. அதாவது, அவள் தன் சகோதரர்கள் மற்றும் பிற சட்டப்பூர்வ வாரிசுகளுடன் சமமாகச் சொத்தில் பங்கு பெறுவதற்கு உரிமையுடையவள். இருப்பினும், சொத்துப் பகிர்வானது 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டது. உயில் இருந்தால், உயிலின்படி சொத்துப் பகிர்வு செய்யப்படும்.
இந்து வாரிசு (திருத்தம்) சட்டம் 2005ன் படி, தாய் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் மகனுக்கு உள்ள அதே உரிமை மகளுக்கும், கணவருக்கும் உண்டு. அம்மா சுயமாக சம்பாதித்த சொத்துக்களை, அவர் இறப்பதற்கு முன்பாக, தனக்குப்பிறகு அத்தனை சொத்துக்களும் மகன்களுக்கு மட்டுமே என்று உயில் எழுதி வைத்திருந்தால் அதில் மகளுக்கு உரிமையில்லை. சொத்தினை தாமாக தர முன்வராத நிலையில், அதனை மகள்கள் சட்டப்படி உரிமை கோர முடியாது. அதே நேரத்தில் மகளுக்கு பங்குண்டு என்று எழுதியிருந்தாலோ அல்லது உயிலே எழுதாமல் இருந்தாலோ சொத்தில் ஒரு பங்கு மகளுக்கும் உண்டு.
திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னும் பின்னும் கையகப்படுத்தப்பட்ட இரண்டு சொத்துக்களுக்கும் இது பொருந்தும். தகராறு ஏற்பட்டால், நீதிமன்றத்தில் தீர்வு காண வேண்டியிருக்கும். ஆனால் மூதாதையர் நிலத்தினை, அவர்கள் காலமான பிறகு, வாரிசு என்ற அடிப்படையில் அம்மா அடைந்ததன் மூலம் உரிமை பெற்றிருந்தால், அவர் தாமாக தர முன்வராத நிலையில், அதனை மகள்கள் சட்டப்படி நீதிமன்றத்தை அணுகி உரிமை கோரலாம். எனவே, உயில் எழுதுவது குறித்த சந்தேங்களை, வழக்கறிஞர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுவதும், ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்லது.
ஒரு மகளுக்கு தன் தாயின் பரம்பரைச் சொத்தைப் பெற உரிமை உண்டு. 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி, மகளுக்கும் தன் தாயின் பரம்பரைச் சொத்தில் மகனுக்குச் சமமான வாரிசு உரிமை உண்டு. இருப்பினும், மகன்கள் மற்றும் மகள்கள் உட்பட அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் சொத்து சமமாகப் பிரிக்கப்பட வேண்டும். உயில் இருந்தால், அதன்படி சொத்துப் பங்கீடு இறுதியாகக் கருதப்படுகிறது.
விவாகரத்தாகி, மறுமணம் செய்து கொள்ளாத பெண்ணின் மகனுக்கு, முன்னாள் கணவரின் பூர்வீக சொத்திலும் பங்கு உள்ளது. அந்த முன்னாள் கணவர் மற்றொரு பெண்ணை மணந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலும்கூட, இந்த பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை உள்ளது. அதேபோல, முதல் மனைவிக்கு வாரிசுகள் இல்லாத பட்சத்தில், அதாவது உரிமையாளரின் மனைவி அந்த சொத்தை 2-ம் வாரிசுகளுக்கு, அதாவது மகனின் மகள் அல்லது மகன், மகளின் மகள் அல்லது மகள், சகோதரன், சகோதரி போன்றவர்களுக்கு சொத்தை பிரித்து தரலாம்.
Also Read : பாலும், பழமும் தவறான காம்பினேஷனா..? எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் 10 வகை ஃபுட் காம்பினேஷன்!
பெண் வாரிசுகள் தங்களுக்கு சொத்தில் பங்கு தேவையில்லை என்கிற பட்சத்தில், சொத்துக்களை மற்ற வாரிசுகள் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், திருமணமான பெண்களுக்கான சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அம்மாவின் சொத்தினை, தன் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். இதை உயில், செட்டில்மென்ட் போன்ற எந்த வழியில் வேண்டுமானாலும் எழுதித் தரலாம். ஒருவேளை, யாருக்கும் எழுதித் தராமல் அம்மா இறந்து விட்டால், தாயின் முதல் வாரிசாக பிறந்த பிள்ளைக்கு சேரும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் முதல் வாரிசுக்குத் தான் சேரும்.
மருமகளுக்கு தன் மாமியாரின் சொத்தில் எந்த உள்ளார்ந்த உரிமையும் கிடையாது. 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் அவர் சட்டப்பூர்வ வாரிசாகக் கருதப்படுவதில்லை. மேலும் சொத்தை தானாகப் பெறுவதற்கும் உரிமை இல்லை. இருப்பினும், மாமியார் தனது சொத்தை மருமகளுக்கு விட்டுவிட விரும்பினால், அவர் உயில் எழுதி வைக்கலாம். மாமியாரின் உயிலில் மருமகளை பயனாளி என்று குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே அவள் சொத்தை வாரிசாகப் பெற முடியும். மாமியார் உயில் எழுதாமல் இறந்துவிட்டால், மருமகளுக்கு சொத்தில் எந்தப் பகுதியையும் வாரிசாகக் கோர உரிமை இல்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 இன் விதிகளின்படி, மாமியாரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு சொத்து பிரிக்கப்படும்.
Also Read : தினசரி எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? உங்களுக்கான ஸ்லீப்பிங் கால்குலேட்டர்!
இதன் மூலம் சுருக்கமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் மகன்களைப் போலவே மகள்களுக்கும் சமமான பரம்பரை உரிமைகள் உள்ளன. இதன் பொருள், ஒரு மகள் தனது பெற்றோரின் சொத்தை தனது சகோதரர்களுடன் சமமாகப் பங்கிட்டுக்கொள்ள உரிமை உண்டு. இருப்பினும், மகன்கள் மற்றும் மகள்கள் உட்பட அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் சொத்து சமமாகப் பிரிக்கப்பட வேண்டும். உயில் இருந்தால், உயிலின்படி சொத்துப் பங்கீடு இறுதியாகக் கருதப்படுகிறது.
1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டம், மூதாதையர் சொத்தில் மகனுக்கு நிகரான பங்கு மனைவிக்கும் உண்டு. இருப்பினும், இந்த உரிமை மூதாதையரின் சொத்துக்களுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் கணவன் சொந்தமாக வாங்கிய சொத்துகளுக்கு அல்ல.கணவன் தன் வருமானத்தின் மூலம் வாங்கிய சொத்தை மனைவி பெயரில் பத்திரப் பதிவு செய்திருந்தாலும் அந்தச் சொத்தில் கணவருக்கு உரிமை இல்லை. அதே சமயம் சட்டப்படி அந்தச் சொத்தைப் பெற ஒரு வழி இருக்கிறது. அந்தச் சொத்து வாங்கியதற்காகச் செலுத்தப்பட்ட பணம் தன்னால் மட்டுமே அளிக்கப்பட்டது என்பதை உரிய ஆவணங்களுடன் நிரூப்பிக்கும்பட்சத்தில் இது சாத்தியம்.
கட்டுரையாளர் : இரா. புஷ்பலதா, வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம். தொடர்புக்கு : 9884332535
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry