ஆந்திரா மெஸ் சென்று மீல்ஸ் ஆர்டர் செய்தால் வாழை இலை போட்டு கூட்டு, ஊறுகாய், வடகம், கலர் அப்பளம் வைத்த பிறகு சுடச் சுட சாதம் வைத்த பிறகு பொடி வைப்பார்கள். ஆந்திரா மெஸ் மட்டுமல்ல ஆந்திராவில் எங்கு சென்றாலும் சூடான சாதத்தில் பருப்பு பொடி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடுவதை பார்க்க முடியும்.
பருப்பு பொடி என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது ஆந்திரா மெஸ் பருப்பு பொடிதான். ஆந்திரா மெஸ்ஸுக்கு பலர் சாப்பிட செல்ல முக்கிய காரணம் அங்கு வழங்கப்படும் பருப்பு பொடிதான். நான்வெஜ் பிரியர்கள்கூட வெஜிடேரியன் மீல்ஸ் சாப்பிடுகையில் பருப்பு பொடியை விருப்பி சாப்பிடுவர்.
Also Read : ஜவ்வரிசி போண்டா! சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்! Step-by-Step Guide to Making Delicious Javvasrisi Bondas!
இது தோசை, இட்லிக்கு தொட்டு சாப்பிடும் பொடியல்ல. இதன் ருசி அவ்வளவு அருமையாக இருக்கும். பொடியுடன் சாதம் சாப்பிடுவதா என நினைக்காதீர்கள். ஒரு முறை இந்த பருப்பு பொடியை சாப்பிட்டு பாருங்கள். ஆந்திராவில் இதற்கு கண்டி பொடி, கன் பவுடர் என பெயர்கள் உண்டு. ருசியான பருப்பு பொடியை வீட்டிலேயே சுலமாக செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- துவரம் பருப்பு
- கடலைப் பருப்பு
- பாசிப் பருப்பு
- சீரகம்
- வர மிளகாய்
- குண்டூர் மிளகாய்
- உப்பு
- பெருங்காயம்
- பூண்டு
பருப்பு பொடி செய்முறை
- கடாயில் எண்ணெய் எதுவும் ஊற்றாமல் அரை கப் துவரம் பருப்பு போட்டு குறைந்த தீயில் வறுக்கவும்.
- 8-10 நிமிடங்களில் நன்கு வறுபட்டு நிறம் மாறியவுடன் நறுமணம் வெளிப்படும். அடுப்பில் இருந்து எடுத்து சூடு ஆறவிடவும்.
- அடுத்ததாக கால் கப் கடலைப் பருப்பு போட்டு அதே போல குறைந்த தீயில் வறுக்கவும். இந்த பருப்பு ஐந்து நிமிடங்களில் வறுபட்டுவிடும்.
- இதன் பிறகு கால் கப் பாசிப் பயிறு போட்டு வறுக்கவும். இடையே ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் 12-15 வர மிளகாய் போட்டு வறுக்கவும். காரத்திற்கு ஏற்ப மிளகாய் பயன்படுத்தவும்.
- உங்களிடம் குண்டூர் மிளகாய் இருந்தால் அதை பயன்படுத்துங்கள். கூடுதல் சிறப்பு.
- சூடு ஆறிய பிறகு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கால் டீஸ்பூன் பெருங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பவுடராக அரைக்கவும்.
- ஆந்திராவில் கண்டி பொடிக்கு பெரும்பாலும் பூண்டு சேர்ப்பதில்லை. நீங்கள் சேர்ப்பதாக இருந்தால் கடாயில் பத்து பல் பூண்டு போட்டு ரோஸ்ட் செய்து அரைக்கும் முன் சேர்க்கவும்.
பருப்பு பொடியை அரைத்ததும் அதை ஒரு தட்டில் நன்றாக பரப்பி வைக்கவும், ஆறிய பின்னர் அதை ஒரு சுத்தமான காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் கொட்டி வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் அப்படியே இருக்கும். சாப்பிடும்போது சுடு சாதத்தில் சூடான உருக்கிய நெய் ஊற்றி சாப்பிட்டால் சுவை அப்படி இருக்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry