
புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு கடந்த மாதம் 19ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக நமச்சிவாயம், காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம், அ.தி.மு.க. வேட்பாளராக தமிழ்வேந்தன் போட்டியிட்டனர். அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 26 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அடுத்த மாதம் 4ந் தேதி முடிவுகள் வெளியாகிறது.
புதுச்சேரி அரசியல் களம் எப்பொழுதும் வித்தியாசமானது என்பதால், தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்பது குறித்து டீ கடை, ரியல் எஸ்டேட் அலுவலகம், வணிக நிறுவனங்கள், நண்பர்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சியினரிடையே விவாதம் நடந்து வருகிறது. இது ஒரு கட்டத்தில் சூதாட்டமாக உருமாறியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என ஒரு தரப்பினரும், பா.ஜ.க. வேட்பாளர் வெற்றிக் கனியை பறிப்பார் என இன்னொரு தரப்பினரும் பந்தயம் கட்டி வருகின்றனர். அதேபோல், மத்தியில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என ஒரு தரப்பும், இண்டி கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக மற்றொரு தரப்பும் பரஸ்பரம் விவாதிக்கின்றனர்.
Also Read : மைதா பற்றிய மாயை! உண்மையை உடைக்கும் மருத்துவர்கள்! ரவைக்கும், மைதாவுக்கும் என்ன வித்தியாசம்?
குறிப்பாக புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல் தொகுதி மக்களும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி சார்பில், பாஜகவின் தற்போதைய மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நீண்ட இழுபறிக்குப்பின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பி.யும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வைத்திலிங்கம் களம் கண்டார்.
ஆளும் கட்சி கூட்டணி, பாஜக அரசு ஆதரவு சுயேட்சைகள், நியமன எம்.எல்.ஏ.க்கள் என 24 எம்.எல்.ஏ.க்கள், ஒரு ராஜ்யசபா எம்.பி. என அசுர பலத்துடன் நமச்சிவாயம் களத்தில் இருந்தார். காங்கிரஸ் தனது கூட்டணி கட்சியான திமுகவுடன் சேர்த்து ஒரு ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. உடன் சேர்த்து 9 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் களம் கண்டார்.

கை மேல் வெற்றி என பாஜக நினைத்தது போன்று களம் எளிதாக இருந்திருக்கவில்லை. தேர்தல் களத்தில் பாஜகவினருக்கு திமுக கடும் சவாலாக அமைந்தது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் கெத்தாக மக்களை சந்தித்து வாக்கு கேட்டனர். ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதியில் ஆங்காங்கே எதிர்ப்பு இருந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு காணப்பட்டது.
அதற்கான முக்கிய காரணமாக கருதப்படுவது, திமுக எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் அரசு இயந்திரம் முழுமையாக இயங்கியது மட்டுமல்லாமல், பல்வேறு புதிய திட்டங்களும் தொகுதிகளுக்கு கிடைத்துள்ளது. இது பாஜகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுக மக்களை எளிமையாக எதிர்கொள்ள முடிந்ததற்குக் காரணம், தங்கள் தொகுதிகளுக்காக அவர்கள் கேட்ட அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் ரங்கசாமி செய்து கொடுத்ததுதான் என்று டெல்லி மற்றும் மாநில பாஜக தலைமை டென்ஷனில் உள்ளது.

ஆளும் கூட்டணியில் 24 எம்.எல்.ஏ.க்கள் உள்ளபோது, எதிர்க்கட்சியான திமுகவின் ஆறு எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை பாஜக தலைமை தற்போது ஆராயத் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி திமுகவுக்கு கொடுத்த சலுகைகள்தான் நமச்சிவாயத்தின் வெற்றியை கடினமாக்கியுள்ளது என்று பாஜக தேசியத் தலைமை திடமாக நம்புகிறது. மத்தியில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்தால், புதுச்சேரியில் கூட்டணி தொடர்பான தனது நிலைப்பாட்டை பாஜக மாற்றக்கூடும். இண்டி கூட்டணி ஆட்சி அமைத்தால் முதலமைச்சர் ரங்கசாமி கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வார் என உறுதியாகவே கூறப்படுகிறது. எனவே தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், ஜுன் மாதம் 4ந் தேதிக்குப் பிறகு புதுச்சேரி அரசியலில் பல திடீர் திருப்பங்கள், அரசியல் மாற்றங்கள் ஏற்படுவது உறுதி என டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry