150 ஆண்டுகள் பாரம்பரியமான ‘மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதி நிறுவனம்’ சர்ச்சையில் சிக்கியுள்ளது. சில மாதங்களாக இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதி நிறுவனத்தில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வைப்புத் தொகை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள். பல இடங்களில் கிளைகள் உள்ள இந்த நிதி நிறுவனத்தில் மக்களின் வைப்புத் தொகை மொத்தமாக ரூ.525 கோடி உள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் மத்திய சென்னையில் செயல்பட்டுவந்த இந்த நிதி நிறுவனத்தின் ஒரு கிளை அலுவலகம் திடீரென மூடப்பட்டதால் முதலீட்டாளர்கள் பலரும் தங்களுடைய வைப்பு தொகையைத் திரும்பப் பெற முயற்சித்துள்ளனர். ஆனால், ஒரே நேரத்தில் அதிகமானோர் தங்களின் பணத்தைக் கேட்டு வந்ததால் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகிறது. பணத்தைக் கேட்டு வரும் முதலீட்டாளர்களுக்கு பின் தேதியிட்ட காசோலைகளை வழங்கி அந்த நிறுவனம் சமாளித்து வந்துள்ளது. ஆனால் அவை பணமில்லாமல் திரும்பியுள்ளார்.
இதையடுத்து முதலீட்டாளர்கள் மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். இதுபற்றி கூறும் முதலீட்டாளர்கள், ஒவ்வொரு மாதமும் வட்டித் தொகை வங்கிக் கணக்கில் வந்துகொண்டிருந்தது. ஆனால், கடந்த ஜனவரியிலிருந்து வட்டித் தொகை வரவில்லை. அதேபோல் முதிர்வு தொகையையும் கொடுக்காமல் இருக்கின்றனர். சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட டி.தேவநாதன் யாதவ் தான் இந்த நிதி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். தேர்தல் செலவுக்காக நிதி நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தினாரா, அதனால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதா? என்பது சந்தேகமாக இருக்கிறது” என்கின்றனர்.
தமிழ்நாட்டில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு உள்ளவர்களில் மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் தலைவர் டி.தேவநாதன் யாதவ் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். “வாடிக்கையாளர்கள் பதற்றமடைந்து ஒரே நேரத்தில் பணத்தைக் கேட்டு குவிந்ததால்தான் இந்தப் பிரச்னை. நிலுவைத் தொகைகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என நிதி நிறுவனத்தின் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மயிலாப்பூர் நிரந்தர நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி மற்றும் தங்க அடமானக் கடன் போன்ற பல்வேறு வணிகங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த நிதி நிறுவனத்தில் வைப்பு திட்டங்களுக்கு சந்தையின் சராசரி வட்டியைவிட அதிகமாக வட்டி வழங்கப்படுவதால் மக்கள் பலரும் ஆர்வமுடன் இதில் பணத்தைச் செலுத்தி வந்துள்ளனர். தற்போது இந்த நிதி நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி வாடிக்கையாளர்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.
Also Read : தமிழக வீரர்களை தேர்வு செய்வதில் பிசிசிஐ பாரபட்சம்! தேர்வுக்குழு மீது முன்னாள் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு!
நிதி நிறுவனங்கள் தங்களின் மொத்த டெபாசிட்டுக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையைத் தங்களின் ரிசர்வில் வைத்திருக்க வேண்டும். அதேபோல், டெபாசிட் பணத்தை எதற்காகவெல்லாம் பயன்படுத்தலாம், எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதற்கும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் இருக்கின்றன.
மயிலாப்பூர் நிரந்தர நிதி நிறுவனம் இந்த விதிமுறைகளின்படி செயல்பட்டிருக்கிறதா? அப்படி செயல்பட்டிருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு என்ன காரணம்? என்று பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தங்களின் பணம் திரும்பக் கிடைக்குமா என்ற குழப்பத்தில் ஒவ்வொரு நாளும் நிதி நிறுவனத்தின் வாசலில் முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். இந்த பிரச்னை சில மாதங்களாக இருந்துவரும் சூழலில், இதுவரை எந்தவிதமான விசாரணையும் நடத்தப்படவில்லை என்பது சந்தேகத்தை உண்டாக்குகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry