
ஆசிரியர் பணி என்பது அடுத்த தலைமுறையைக் கட்டி எழுப்பும் அத்தியாவசியப் பணி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், இன்று சுமார் ஒன்றரை லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வாழ்க்கையை ஊசலாட்டத்தில் தள்ளிவிட்டுள்ளது உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு.
ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற அமர்வின் கறார் தீர்ப்பு, ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது மட்டுமல்லாமல், மாநில அரசின் நிர்வாக மெத்தனத்தையும் தோலுரித்துக் காட்டியுள்ளது. ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்விலிருந்து சலுகை அளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டுள்ளது.
சட்டமும், காலக்கெடுவும்
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE Act, 2009) மிகத் தெளிவாக டெட் தேர்ச்சிக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயித்தது. சட்டம் அமலுக்கு வந்த 01.04.2010 அன்று டெட் தேர்ச்சி பெறாத பணியில் உள்ள ஆசிரியர்கள், 5 ஆண்டுகள் அதாவது 31.03.2015-க்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்று சட்டம் சொன்னது.
இந்தக் காலக்கெடுவில் தேர்ச்சி பெறத் தவறியவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பாக 2017-ஆம் ஆண்டு RTE சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, மேலும் 4 ஆண்டுகள், அதாவது 2021-ஆம் ஆண்டு வரை டெட் தேர்ச்சி பெற இறுதி அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த இரு கால அவகாசங்களையும் பயன்படுத்தத் தவறிய ஆசிரியர்கள்தான் இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் சிக்கலைச் சந்தித்துள்ளனர். உச்ச நீதிமன்றமும், ஆசிரியரின் குறைந்தபட்சத் தகுதி என்பது டெட் தேர்ச்சி தான் என்று RTE சட்டத்தின் உட்கூறுகளை உறுதிசெய்துள்ளது.
திமுக அரசின் நிர்வாக மெத்தனமும் – துரோகமும்
இந்த விவகாரத்தில் சட்டச் சிக்கலைவிட, ஆட்சியாளர்களின் நிர்வாக மெத்தனமே பெரும் துரோகத்தை இழைத்துள்ளது என்ற குற்றச்சாட்டு வலுக்கிறது. 2021-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் கால அவகாசம் நீட்டிப்பில் இருந்தது. ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, RTE சட்டத்தின்படி டெட் தேர்ச்சி கட்டாயமாகிய நிலையில், அரசு விழிப்புணர்வு கொடுக்கவில்லை.
டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை, அல்லது ஆண்டுக்கு ஒருமுறையாவது டெட் தேர்வை நடத்தியிருக்க வேண்டும் என்ற அடிப்படை நிர்வாக நடைமுறையைப் பின்பற்றவில்லை. இதைவிடப் பெரிய தவறு, சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) இணையதளத்தில் சிறப்பு டெட் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, பின்னர் எவ்விதக் காரணமுமின்றி அதைத் திரும்பப் பெற்றதே ஆகும். RTE சட்டமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களும் சிறப்பு டெட் தேர்வு நடத்தலாம் என்று அறிவுறுத்தியும், இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

மறு ஆய்வு மனுவும் – கால விரயமும்
தற்போதுள்ள சூழலில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மறு ஆய்வு மனு (Review Petition) தாக்கல் செய்திருப்பது, ஓர் அரசியல் நகர்வாக மட்டுமே பார்க்கப்படுகிறது. மறு ஆய்வு மனு என்பது, நீதிபதிகள் தீர்ப்பளிக்கும்போது, சட்ட ரீதியாக ஒரு குறிப்பிட்ட முக்கிய அம்சத்தைப் பார்க்கத் தவறிவிட்டார்கள் என்று சுட்டிக்காட்டினால் மட்டுமே மறுபரிசீலனைக்குத் தகுதி பெறும்.
NCTE வரையறுத்துள்ளபடி, RTE சட்டம், குறைந்தபட்சத் தகுதியாக டெட் தேர்ச்சியைக் கட்டாயமாக்கியுள்ள நிலையில், மறு ஆய்வு மனு என்பது காலத்தைக் கடத்தும் செயலாகவே இருக்குமே தவிர, நீதி தேடித் தராது. ஒரு சில ஆசிரியர் சங்கங்களின் தவறான வழிகாட்டுதலைப் புறம்தள்ளி, லட்சக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தில் விளைவாடுவதை விட்டுவிட்டு, தமிழக அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.
தீர்வும் வலியுறுத்தலும்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உதாசீனப்படுத்தாமல், அதே சமயம் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும். மறு ஆய்வு மனுவைத் திரும்பப் பெற்று, எளிமையான முறையில் (சலுகைகள், பயிற்சி அளித்தல் போன்றவற்றின் மூலம்) உடனடியாக ஒரு சிறப்பு டெட் தேர்வை அறிவித்து, ஆசிரியர்கள் அதில் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் இனிமேல் ஆண்டுதோறும் டெட் தேர்வை நடத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும். ஆசிரியர்கள் இல்லையேல் மாணவர்கள் இல்லை; ஆசிரியர்களின் வாழ்வாதாரமே ஊசலாடினால், அடுத்த தலைமுறையை எப்படி நாம் வலிமையாகக் கட்டியெழுப்ப முடியும்? தமிழக அரசு உடனடியாக இதில் விழித்துக்கொள்ள வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
