மழைக்காலத்தில் கலைநிகழ்ச்சி தேவையா? மேலிடம் என்றால் அமைச்சரா, ஒன்றிய அரசா? கல்வித்துறைக்கு ஐபெட்டோ அழுத்தமான கேள்வி!

0
2084
AIFETO leader Annamalai seeks clarification from the school education department on whether cultural programs are suitable for primary students during the monsoon season, focusing on student engagement and safety concerns. | Insert Pic : Dr. M. Aarthi, IAS - State Project Director of Samagra Shiksha in Tamil Nadu.

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில், தமிழ்நாட்டில் பணியாற்றி வருபவர்களுக்கு ஒன்றிய அரசு ஊதியத்தை விடுவிப்பதில் காலதாமதப்படுத்தி வந்தாலும் 32,500 பேருக்கு 100 கோடி நிதியினை விடுவித்து தீபாவளிக்கு ஆசிரியர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற அக்கறை உணர்வுடன், செப்டம்பர் மாத ஊதியத்தினை வழங்கியுள்ள முதலமைச்சருக்கு நன்றி பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

AIFETO Annamalai

அன்றாடம் வானிலை அறிக்கையினை கேட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநர் ஆர்த்தி ஐ.ஏ.எஸ்., மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு 30.9.2024 அன்று ந.க.எண்.2183/ஆ8/கலைத்திருவிழா/ஒபக/2024 வழிகாட்டும் நெறிமுறைக் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அக்டோபர் மாதம் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடக்கக் கல்வி மாணவர்களை தேர்ந்தெடுத்து கலைத் திருவிழாவினை இணைய வழியில் அனுப்பினால் போதுமானது என்று கடிதம் மூலம் அறிவித்தார்கள்.

ஆனால் தற்போதோ, ‘இடி, மின்னல், பலத்த மழை பெய்தாலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களில், பள்ளியில் நடத்திய போட்டியிலிருந்து வெற்றி பெற்றவர்களை 14.10.2024 முதல் 16.10.2024 வரை மூன்று நாட்களும் குறுவள மையத்திற்கு அன்றாடம் அழைத்துச் செல்ல வேண்டும். பெற்றோர்களிடம் பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்கு விருப்பக் கடிதம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்.’

Also Read : பள்ளிக் கல்வி அமைச்சரின் நிலைப்பாட்டை எதிர்க்கும் இயக்குநர்! அமைச்சர் என்ன செய்யப்போகிறார் என ஐபெட்டோ கேள்வி?

மழையில் நனைந்து மாணவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டாலும் பெற்றோர்களே பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள் என பள்ளிக்கல்வித்துறை வாதிடுவதற்கான ஒப்புதல் கடிதம்தான் அது. பயணம், உணவுச் செலவு, செல்லும் போது மாணவர்களின் பாதுகாப்பு அனைத்தும் ஆசிரியர்களைச் சார்ந்ததாகும். 3 நாட்களில், 2 ஆசிரியர் பள்ளியில் ஓராசிரியர் சென்றுவிட்டால் மாணவர்களின் கற்பித்தல் பணி..? அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத கல்வித்துறை ஒன்று உண்டு என்றால் அது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையாகத்தான் இருக்கும்.

அடுத்து 22.10.2024 முதல் 24.10.2024 வரை வட்டார அளவிலான போட்டிகள். 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகளையும், திட்டமிட்டு நடத்திடும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அக்டோபர் மாதம் தொடங்கி தொடர் மழைக்காலங்கள் என்பதால், மாணவர்களை வெளியில் அழைத்துச் செல்ல முடியாது. மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், திட்ட இயக்குநர் முழுப் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாக பகிரங்க அறிக்கை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

ஆண்டு முழுவதும் எமிஸ் புள்ளி விவரப்பணி, கலைத்திருவிழாக்கள், விடைத்தாள் திருத்தும் பணி, பள்ளியில் சேர்ந்தே 3 மாதமேயானாலும், முதல் வகுப்பு மாணவனின் விடைத்தாள், வினாக்கள் வாரியாக மதிப்பெண் பதிவிட வேண்டுமாம். கேட்டால் மேலிடத்து கட்டளையாம். மேலிடம் என்றால் அமைச்சரா? ஒன்றிய அரசா? தெரியப்படுத்துங்கள்.

விண்வெளி ஆராய்ச்சியில் இருக்க வேண்டியவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் பொறுப்பில் வந்துவிட்டார்கள். அவர்களே உணர வேண்டும்.! அல்லது உணரும் காலம் வரும்.! அல்லது உணர வைப்போம்! இவ்வளவு மழைக்கிடையிலும் வாசிப்புத் திறனைக் கண்டறிய கண்காணிப்பு குழுக்கள் ஆய்வு செய்ய வருகிறார்கள். விடைத்தாள்களை திருத்திவிட்டார்களா ? என கண்டறிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் குழுவை அனுப்புகிறார்.

K. Tharpagaraj, IAS., District Collector, Tirupathur.

திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்துத் தலைமை ஆசிரியர்களுக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கிறார். கல்வித்துறை நுனிக்கொம்பு வரை ஏறிவிட்டது. ஆபத்து எங்களுக்கு இல்லை. நுனிக்கொம்பில் ஏறியவர்களுக்குத்தான் என்பதை உணர மறுக்காதீர்கள்.

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பிரச்சனையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் தனிக் கவனத்திற்கு கொண்டு சென்று மழைக்காலங்களில் மாணவர்களின் செயல்திட்டங்களை தடுத்துநிறுத்த வேண்டுகிறோம்.! வலியுறுத்துகிறோம்!” இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry