அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அண்மையில் அளித்த பேட்டியில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இல்லை என்று கூறுவது ஏற்புடையதில்லை. அனைத்து மருத்துவமனைகளிலும் பணியாளர்கள் உள்ளனர். காலிப் பணியிடங்களும் விதிகளின் படி நிரப்பப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு 2021ம் ஆண்டு வரை 6,000 புற நோயாளிகள் வந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டு மடங்குக்கும் மேலாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை புற நோயாளிகள் பயன் பெறுகின்றனர். அதுபோல இந்த மருத்துவமனையில் 1,002 மருத்துவர்கள் மற்றும் 709 செவிலியர்கள், 780 தூய்மை பணியாளர்கள் பணிபுரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று கூறும் அமைச்சர், அதற்கு ஏற்றார் போல மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரிப்பது தானே நியாயம். அதை ஏன் செய்யவில்லை?
பல மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உதாரணமாக, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 1,500 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு மகப்பேறு துறையில் 27 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், 5 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர் என்ற நிலையில், எந்த அளவு பற்றாக்குறை உள்ளது என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லை என்ற வகையில் அமைச்சருக்கு வெட்கமாக இல்லையா? இல்லை, மருத்துவமனை கட்டடத்தை மட்டும் ரிப்பன் வெட்டி திறப்பு விழா நடத்தினால் போதும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் நினைக்கிறார்களா?
போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க மாட்டார்கள். நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டார்கள். நெருக்கடி குறித்து, பற்றாக்குறை குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்தால், உண்மையை வெளிச்சம் போட்டு காட்டினால் அமைச்சருக்கு பிடிக்காது.
பொதுவாக சுகாதாரத் துறையின் Infrastructure என்றால் கட்டடமோ, கட்டட வல்லுநர்களோ, கருவிகளோ இல்லை. அங்கு உயிரைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் தான் Infrastructure. உயிர்காக்கும் மருத்துவர்கள் மகிழ்ச்சியோடு பணியாற்றிட வேண்டும் என்பதற்காக தான் அரசாணை 354 ஐ கருணாநிதி வெளியிட்டார் என்று சட்டமன்றத்தில் டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ. பேசியது தான் நினைவுக்கு வருகிறது.
இருப்பினும் இன்று வரை நம் அமைச்சர் அந்த அரசாணையை நடைமுறைப்படுத்த எதுவுமே செய்யவில்லை. எனவே அமைச்சர் அவர்கள் இனிமேலாவது மருத்துவர் பற்றாக்குறை இல்லையென்று உரக்க பேசுவதை விடுத்து, போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மேலும் போதிய செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும்.
ஊதியக் கோரிக்கைக்காக தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். அதுவும் இருக்கிற அரசாணையை அமல்படுத்த மறுத்து வருவது தான் வருத்தமளிக்கிறது. இந்த நிலையில், உண்மை வலிக்கும் என்றால், வேறுவழியில்லை. உயிர்காக்கும் துறையில் உண்மையை தொடர்ந்து உரக்க சொல்வோம். துறையில் இருக்கிற எந்த பிரச்சினையையும் தீர்க்க முன் வராத நிலையில், ஜனநாயக முறையில் தவறை சுட்டிக் காட்டினால் நடவடிக்கை என்றால் அதை சந்திக்க தயாராகவே உள்ளோம்.
ஏற்கனவே பணிச்சுமை, குறைவான ஊதியம் என கொந்தளிப்பில் இருக்கும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலையை அரசு நிச்சயம் ஏற்படுத்தாது என கருதுகிறோம். மேலும் முதலமைச்சர் தலையிட்டு மருத்துவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற நாம் வேண்டுகிறோம்.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry