கருணாநிதி முன்னிலையில் ஜெ. தாக்கப்பட்டார்! ஸ்டாலின் பொய் சொல்வதாக ஈபிஎஸ் கண்டனம்!

0
42
EPS met the media in Madurai

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுகவினரால் தாக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறினார். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், அந்த சம்பவம் ஜெயலலிதாவால் நடத்தப்பட்ட நாடகம் எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில், மதுரை வலையங்குளத்தில் வரும் 20-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டு பணிகளை அஇஅதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, ஆய்வு செய்தார். பின்னர் விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, 1989ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொடூரமாக தாக்கப்பட்டார். அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த நானும் ஜெயலலிதாவுடன் சட்டமன்றத்தில் இருந்தேன். அப்போதைய முதல்வர் கருணாநிதியின் முன்னிலையிலேயே திமுக அமைச்சர்களாலும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களாலும் அந்த கொடூர காட்சி அரங்கேற்றப்பட்டது.

பெண் என்றும் பாராமல் ஜெயலலிதா திமுகவினரால் தாக்கப்பட்டார். இப்போதைய மூத்த அமைச்சர் ஒருவர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தார். அதனை திருநாவுக்கரசு மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் தடுத்தனர். அந்த நாள் ஒரு கறுப்பு நாள். எதிர்க்கட்சி தலைவர், பெண் என்று பாராமால் அவரது சேலையையும் முடியையும் பிடித்து இழுத்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது? ஜெயலலிதாவுக்கு நடந்த கொடுமையை ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார். பொய்யான தகவலை கூறும் முதல்வர் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.” இவ்வாறு எடப்படி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Also Read : கெஜ்ரிவால் போல நிபந்தனை விதிக்காதது ஏன்? காவிரிப் பிரச்சனையைச் சுட்டிக்காட்டி மு.க. ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி!

முன்னதாக மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மணிப்பூர், டெல்லி, ராஜஸ்தான் போன்ற எந்தப் பகுதியிலும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த முழு சபைக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்.

அப்போது முதல்வர் ஆகாத ஜெயலலிதாவின் சேலை, தமிழக சட்டசபையில் இழுக்கப்பட்டது. அங்கு அமர்ந்திருந்த தி.மு.க-வினர் அவரைப் பார்த்துச் சிரித்தனர்… அந்த ஜெயலலிதாவை தி.மு.க மறந்துவிட்டதா? அன்றைய தினம் ஜெயலலிதா, தான் முதல்வராகும் வரை சட்டசபைக்கு வரமாட்டேன் எனச் சபதம் எடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார்.” என்று பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry