SIR திருத்தம்! உங்கள் பெயர் நீக்கப்படலாம் — அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

0
88
how-to-prevent-voter-list-deletion-tamilnadu-sir-vels-media
The Special Intensive Revision (SIR) of the TN voter list is underway (Nov 4 - Feb 7). What is SIR? Why are parties protesting, and what is the process? Complete guide for 6.36 crore TN voters, including document requirements.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision – SIR) தொடங்குகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெறுகின்றன.

பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் சர்ச்சைக்குள்ளானது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாட்டிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எஸ்.ஐ.ஆர். பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எஸ்.ஐ.ஆர். பணியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் நேர்மையாக நடைபெறுவதற்காக அதிமுகவும், பாஜகவும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர பணியை ஆதரிக்கின்றன. கடைசியாக 2025-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், எஸ்.ஐ.ஆர் பற்றி வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

Also Read : அடுத்து சிக்கப்போகும் அமைச்சர் எ.வ. வேலு! ஊழல் அதிகாரிகள் மீது DVAC வழக்குப் பதிய அனுமதி மறுப்பு! அதிரடியாக நுழையப்போகும் ED!

எஸ்.ஐ.ஆர். என்றால் என்ன?

வாக்காளர் பட்டியலைப் பொருத்தவரை தேர்தல் ஆணையம் இரண்டு விதமான பணிகளை மேற்கொள்கிறது. ஆண்டுதோறும் சிறப்பு சுருக்கத் திருத்தம் (Special Summary Revision – SSR) மேற்கொள்ளப்படுகிறது. எஸ்.எஸ்.ஆர் நடைமுறையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது, இறந்து போனவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது மற்றும் வாக்காளரின் சுய விவரங்களில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்வது போன்ற பணிகள் நடக்கின்றன.

எஸ்.ஐ.ஆர் என்பது தேவையைப் பொருத்து தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கை. தமிழ்நாட்டில் கடைசியாக 2002-2005 காலகட்டத்தில் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்பட்டது. எஸ்.எஸ்.ஆர். போல அல்லாமல் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்படுகிற போது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் விண்ணப்பம் சமர்ப்பிப்பது அவசியம்.

5 கட்டங்களாக எஸ்.ஐ.ஆர். பணிகள்

நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ஆம் தேதி முடிவடையும் எஸ்.ஐ.ஆர். பணிகள் 5 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தப் பணிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்படும். இதற்காக அவர்களுக்கு அக்டோபர் 27 முதல் நவம்பர் 3 வரை சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

  • வீடுதோறும் கணக்கெடுப்பு: 04.11.2025 – 04.12.2025
  • வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – 09.12.2025
  • பெயர்களை சேர்த்தல் மற்றும் ஆட்சேபம் தெரிவித்தல் – 09.12.2025 – 08.01.2026
  • விசாரணை மற்றும் சரிபார்த்தல் – 09.12.2025 – 31.01.2026
  • இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – 07.02.2026

Also Read : ”அமைச்சர் K.N. நேரு ராஜினாமா?” ஜாப் ராக்கெட் ஊழல் நெருக்கடி! – மோசடியை விரிவாக விளக்கியுள்ள அமலாக்கத்துறை!

பணிகள் எவ்வாறு நடக்கும்?

முதல் கட்டம்: வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவருமே புதிதாக கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்தப் படிவத்தை ஒவ்வொரு பாகத்திலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்(BLO – Booth Level Officer) வீட்டிற்கே வந்து வழங்குவார்கள். வாக்காளர்கள் அந்தப் படிவங்களை பூர்த்தி செய்து அவர்களிடம் வழங்க வேண்டும். படிவத்தை வழங்கியதற்கான அத்தாட்சி நகலும்(Acknowledgement) வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை செல்வார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் அதே முகவரியில் வசிக்கிறார்களா, யாரேனும் இறந்துவிட்டார்களா அல்லது நிரந்தரமாக வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டார்களா என்பதை அலுவலர்கள் சரிபார்ப்பார்கள். இது நவம்பர் 4 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும்.

இரண்டாம் கட்டம்: டிசம்பர் 4-ஆம் தேதி வரை வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டு, முந்தைய வாக்காளர் பட்டியலுடன் பொருந்திப் போகிறதா என்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆராய்வார்கள். ஏதேனும் முரண்பாடு இருந்தால் வாக்காளரிடம் விளக்கம் கேட்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்படும். முதல் மற்றும் 2ம் கட்டப் பணிகளின்போது புதிய வாக்காளர்களை பதிவு செய்ய முடியாது. இவை அனைத்தும் ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களுக்கு மட்டுமேயாகும்.

Also Read : பள்ளிக்கரணை சதுப்பு நிலம் – தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக இயங்கும் திமுக! – விளக்கம் விவகாரமானதால் தமிழக அரசு பதற்றம்!

மூன்றாம் கட்டம்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு(டிசம்பர் 9-ஆம் தேதி) புதிதாக வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும். வரைவுப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ, பழைய வாக்காளர்கள் வேறு இடத்தில் புதிதாக பதிவு செய்ய வேண்டுமென்றாலோ, அல்லது புதிதாக யாரேனும் இணைக்கப்பட்டதற்கு ஆட்சேபனை இருந்தாலோ அதற்கான விண்ணப்பம் மூலம் முறையீடு செய்யலாம். இதற்கு டிசம்பர் 9 தொடங்கி ஜனவரி 8-ஆம் வரை தேதி வரை தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கியுள்ளது.

நான்காம் கட்டம்: வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை வாக்காளர் பதிவு அலுவலர் (Electoral Registration Officer – ERO) ஆராய்வார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் துணை வாக்காளர் பதிவு அலுவலர் இருப்பார்கள். இவை ஆராயப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

ஐந்தாம் கட்டம்: இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியிடப்படும்.

வாக்காளர்கள் செய்ய வேண்டியவை

ஒரு வாக்காளர் அதே முகவரியிலேயே தொடர்ந்து வசிக்கிறார் என்றால் கணக்கெடுப்பு படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க வேண்டும். கணக்கெடுப்பு படிவத்தை சமர்ப்பிக்கின்ற போது எந்த ஆவணமும் உடன் சேர்த்து வழங்க வேண்டியதில்லை. டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் வழங்க முடியாதவர்கள் ஆட்சேபனை மனுக்கள் சமர்ப்பிக்கும் கட்டத்திலும் தங்களின் கணக்கெடுப்பு படிவங்களை வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

குடும்ப உறுப்பினர் வெளியூரில், வெளிநாட்டில் இருந்தால் என்ன செய்யலாம்?

கல்வி, வேலை நிமித்தமாக யாரேனும் வெளியூரில் இருந்து, நேரடியாக வர முடியாத சூழல் இருந்தால் குடும்ப உறவினர் ஒருவர் அவர் சார்பில் உத்தரவாதம் வழங்கி படிவத்தை பூர்த்தி செய்யலாம் எனத் தேர்தல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். படிவத்தில் அதற்கான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரே ஊரில் வேறு முகவரியில் வசித்தால் என்ன செய்யலாம்?

சில குடும்பங்கள் ஒரே ஊரில் வேறு பகுதிகளில் வசித்தால், கணக்கெடுப்பு நடக்கின்றபோது அவர்களின் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

யாருக்கு சிக்கல் ஏற்படும்?

நிரந்தர முகவரி அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியில், குடும்பத்தில் ஒரு உறுப்பினர் கூட வசிக்கவில்லையென்றால் அவர்களுக்கு சிக்கல் ஏற்படும். வாக்காளர்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டார்களா என்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பின்போது பதிவு செய்கிறார்கள். பல குடும்பங்கள் வேறு ஊர்களில் நிரந்தரமாக வசித்து வந்தாலும் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்க்கு சொந்த ஊர்களுக்குச் சென்று வருவார்கள்.

இந்தச் சூழலில் அவர்களால் முந்தைய முகவரியில் கணக்கெடுப்பு படிவத்தை வழங்க முடியவில்லையென்றால் அவர்கள் பெயர் அங்கிருந்து நீக்கப்படும். அவர்கள் தற்போது வசிக்கும் இடத்தில் உள்ள வாக்குச்சாவடியில் புதிதாக இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பத்தை வழங்கி தங்களின் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

how-to-prevent-voter-list-deletion-tamilnadu-sir-vels-media
Voter List SIR 2025–26: Home Verification, Deadlines & Required Documents

தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பும்

கணக்கெடுப்பு பணிகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பும் எனக் கூறப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெறப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

01.07.1987-க்கு முன்பு பிறந்தவர் என்றால் அவருடைய பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும்.

01.07.1987 – 02.12.2004 காலகட்டத்தில் பிறந்தவர்கள் என்றால், வாக்காளர் மற்றும் அவரின் தந்தை அல்லது தாயின் பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும்.

02.12.2004-க்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் வாக்காளர், அவரின் தந்தை மற்றும் தாய் என மூவரின் பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும்.

இவை அனைத்துமே கணக்கெடுப்பு படிவம் சமர்பித்து தேர்தல் அலுவலரால் விளக்கம் கேட்கப்பட்டவர்களுக்கு மட்டுமேயாகும்.

தேவைப்படும் ஆவணங்கள்

  • அரசு ஊழியர் அடையாள அட்டை அல்லது ஓய்வூதிய ஆணை
  • அரசாங்கம் அல்லது பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணம் (1987-ஆம் ஆண்டுக்கு முன்பு)
  • பிறப்பு சான்றிதழ்
  • பாஸ்போர்ட்
  • பள்ளி அல்லது கல்வி சான்றிதழ்
  • நிரந்தர இருப்பிடச் சான்றிதழ்
  • வன உரிமைச் சான்றிதழ்
  • சாதிச் சான்றிதழ்
  • மாநில அரசு/உள்ளாட்சி அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட குடும்ப பதிவேடு
  • அரசால் வழங்கப்பட்ட நிலம்/வீடு ஒதுக்கப்பட்ட சான்று
  • ஆதார் அட்டை

அரசியல் கட்சிகள் தங்களின் வாக்குச்சாவடி முகவர்களை எஸ்.ஐ.ஆர் பணிக்காக தயார்படுத்தி உள்ளன. வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலை முகவர்களின் தொடர்பு விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry