தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக் – TETO-JAC), தாங்கள் வலியுறுத்துகிற 31 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் முற்றுகைப் போராட்டத்தை சென்னை DPI அலுவலகத்தில் நடத்தி வருகின்றனர். இதன், முதல் நாளான நேற்று 13 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களும், இன்று 14 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களும், நாளை மீதமுள்ள மாவட்ட ஆசிரியர்களும் போராட்டத்தில் கலந்துக் கொள்கின்றனர்.
இவ்வாறு முற்றுகைப் போராட்டத்தில் கலந்துக்கொள்ள வந்த ஆசிரியர்களை அவர்கள் வந்த வாகனத்தை விட்டு இறங்கிய உடனே வலுக்கட்டாயமாக போலீஸார் தங்களின் வாகனங்களில் ஏற்றி கைது செய்தனர். பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதனைக் கண்டித்துள்ள ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான அண்ணாமலை, ஆசிரியர்களுக்கு கோரிக்கைகளை முன்வைத்து போராடக்கூட சுதந்திரம் இல்லையா என வினவியுள்ளார்.
முற்றுகைப் போராட்டம் தொடர்பாக பேசிய டிக்டோஜாக் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர், “கடந்த ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி, இதே DPI அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்துவதாக அறிவித்தோம். அதனைத் தொடர்ந்து முதலில் இயக்குநர் மட்டத்திலும், இரண்டாவதாக செயலாளர் அளவிலும், மூன்றாவதாக அமைச்சர் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடத்தி 12 நிதிசாரா நிர்வாக கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டதாக எங்களின் மேடையிலேயே 2 இயக்குநர்கள் உறுதியளித்தனர். ஆனால், அந்த 12 கோரிக்கைகள் இன்றுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய ஆசிரியர் ஒருவர், “ஆசிரியர்களாகிய நாங்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243ஐ கொண்டு வந்துள்ளது. இதனால் பெண் ஆசிரியைகளின் பதவி உயர்வு பெருமளவு பாதிக்கப்படும் நிலை உள்ளது. தங்களின் குடும்பத்தை விட்டு பெண் ஆசிரியைகள் வேறு மாவட்டத்திற்கு சென்று பணியாற்றுவது மிகவும் சிரமம்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய ஆசிரியர்கள் சிலர், `தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றும் ஒருவரை திருநெல்வேலி, மதுரை போன்ற மாவட்டங்களில் இடமாற்றும் நிலை ஏற்படும்போது வட்டார மொழி வேறுபடுவதால், மாணவர்களுக்கு பாடத்தை, பேச்சைப் புரிந்துக்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்படும், 10 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே இந்த அரசாணையை ஆதரிப்பதாகவும், 90 சதவீத ஆசிரியர்கள் இதை எதிர்க்கிறார்கள்.
கொரோனா பெருந்தொற்றினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, தற்போது முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை (வருடத்திற்கு 15 நாட்களுக்கான ஊதியம்) மீண்டும் வழங்க வேண்டும். நாங்கள் பல ஆண்டுகளாக முன்வைத்து வருகிற பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். திமுக எதிர்கட்சியாக இருந்தப்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக வெளியிட்டார்கள். ஆனால், அதை நம்பி வாக்களித்த எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள்.
Also Read : பற்களை எந்த பேஸ்ட்டில், எவ்வளவு நேரம், எப்படி துலக்க வேண்டும்? பல் துலக்கும் தெளிவான வழிமுறைகள்!
NHIS சிகிச்சைத் திட்டத்தின் மூலம் எங்களின் ஊதியத்திலிருந்து மாதம் தோறும் 300 ரூபாயை பிடித்துக்கொள்கிறது இந்த அரசு. இந்த திட்டத்தின்படி கட்டணமில்லா சிகிச்சையை அரசு உறுதிப்படுத்த வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும்.
மேலும், இதற்கு முன்பு இருந்த கற்றலின் இனிமை திட்டம், செயல்வழி கற்றல் ஆகிய அனைத்தும் கிராமத்தில் உள்ள களச் சூழுலைப் பொறுத்து அமையவில்லை. ஆசிரியர்களுடைய கருத்துக்களை கேட்டும் உருவாக்கப்படவில்லை. பாடப்புத்தகம், ஆசிரியர்களுக்கன கையேடு, மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகம் அகியவற்றினால் மாணவர்களுக்கு முழுமையான பாடத்தை சொல்லிக் கொடுப்பதற்கான நேரம் கிடைப்பதில்லை . EMIS போன்ற பல்வேறு நிர்வாகப் பணிளை ஆசிரியர்கள் மேற்கொள்வதால் மாணவர்களின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யக்கூட ஆசிரியர்களால் இயலவில்லை” என்கிறார்கள் ஆசிரியர்கள். அரசின் நடவடிக்கைகளால் கல்வி கற்பிக்கும் பணியில் ஆசிரியர்களால் கவனம் செலுத்த முடியாமல் போனால், மாணவர்களுக்கு மட்டுமல்ல நம் எதிர்காலத்துக்கே கேடு ஏற்படும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry With Input Vikatan