விந்தணுவிலும், கருமுட்டையிலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்: மனித இனப்பெருக்கத்திற்கு பேராபத்து!

0
25
reproductive-health/microplastics-human-fertility-vels-media
Groundbreaking research presented at ESHRE reveals microplastic fragments in human follicular and seminal fluids. Explore the potential implications for reproductive health and fertility. Image : Meta AI.

மனித முடியைவிட அளவில் குறைந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள், இப்போது மனித உடலில் பல எதிர்பாராத இடங்களில், இரத்த ஓட்டத்திலும் கண்டறியப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஐரோப்பிய இனப்பெருக்க மற்றும் கருவியல் சங்க கூட்டத்தில் வெளியான தகவல்கள், இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் மனித கருமுட்டையைச் சுற்றிய திரவத்திலும், விந்தணுவுடன் பயணிக்கும் திரவத்திலும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை ஸ்பெயினில் உள்ள நெக்ஸ்ட் ஃபெர்ட்டிலிட்டி மர்சியா நிறுவனம் நடத்தியது. டாக்டர் எமிலியோ கோமஸ்-சான்செஸ் தலைமையிலான குழு, 29 பெண்களின் கருமுட்டை திரவத்தையும், 22 ஆண்களின் விந்து திரவத்தையும் ஆய்வு செய்தது. அதில், பெண்களில் 69% பேருக்கும், ஆண்களில் 55% பேருக்கும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அளவுக்கு பரவலாக பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Also Read : தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! Microplastics Found in Human Breast Milk!

இந்த ஆய்வில், நாம் தினசரி பயன்படுத்தும் நான்-ஸ்டிக் பாத்திரங்கள், உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றில் இருக்கும் பாலி டெட்ராஃபுளூரோஎத்திலீன் (PTFE), பாலிப்ரோப்பிலீன் (PP) போன்ற பிளாஸ்டிக் வகைகள் கண்டறியப்பட்டன. இவை கருமுட்டை மற்றும் விந்தணு திரவங்களில் இருப்பது, இதுவரை கோட்பாடாக இருந்த ஆபத்தை, உண்மையான சாத்தியமாக்குகிறது.

2021-ல், இத்தாலிய மருத்துவர்கள் ஒவ்வொரு பிளாசென்டாவிலும் பன்னிரண்டு பிளாஸ்டிக் துண்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இது, ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான துகள்கள் தாய்-கரு எல்லையை கடக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தியது. இதேபோல், நுரையீரல் திசுக்களிலும், இரத்த மாதிரிகளிலும் பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், பிளாஸ்டிக் தூசியை நாம் சுவாசிப்பதும், குடிப்பதும், உண்பதும் உடலில் நுழைவதற்கான வழிகள் என்பதை அறிவியல் உறுதி செய்கிறது.

Also Read : சமைக்க வாங்கும் மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள்! பிளாஸ்டிக் கவர் உணவு, பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரால் பெரும் ஆபத்து!

பெரும்பாலான மக்கள் பிளாஸ்டிக் துகள்களை உணவு, தண்ணீர், காற்று மூலமாக உட்கொள்கிறார்கள். சமையல் பாத்திரங்கள் சூடானபோது, அல்லது உணவு பொட்டலங்கள் தேய்க்கப்படும்போது, கண்ணுக்குத் தெரியாத தூசி உருவாகிறது. அந்த தூசிகள் குடல் சுவர், நுரையீரல் வழியாக உடலில் ஊடுருவும். விலங்கு ஆய்வுகள், மிகச் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் செல்களில் நேரடியாக நுழைய முடியும் எனவும், பெரிய துகள்கள் திசுக்களில் சிக்கி உள்ளூர் எரிச்சலை ஏற்படுத்தும் எனவும் காட்டுகின்றன.

இவை, உடலில் உள்ள வழக்கமான கழிவுகளை வெளியேற்றும் முறைகளைத் தவிர்த்து, உடலில் நீண்ட காலம் தங்கிவிடும். மேலும், இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள், உடலில் உள்ள ஹார்மோன்கள் பயணிக்கும் கொழுப்பு பாதைகளில் கலந்து செல்வதால், இனப்பெருக்கத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற கவலையும் உள்ளது.

பாலிஸ்டிரீன் (Polystyrene) போன்ற பிளாஸ்டிக் துண்டுகள் எலிகளில் விந்தணுவை பாதிப்பதாகவும், டிஎன்ஏ சேதம், ஆக்சிஜனேற்ற அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன. 2024-ல் வெளியான ஆய்வுகள், இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் மனித இனப்பெருக்க ஹார்மோன் சுழற்சியையும், முட்டை வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கின்றன.

Also Read : விளை நிலங்களில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு! மனித உடலில் பிளாஸ்டிக் துகள்கள்: அச்சுறுத்தும் உயிரியல் பேரழிவு!

தற்போதைய தரவுகள், மாதிரி எடுத்த முட்டை திரவத்தில் 31% மற்றும் விந்து திரவத்தில் 41% PTFE இருப்பதை காட்டுகின்றன. உலகளவில் பிளாஸ்டிக் உற்பத்தியைப் பொறுத்தமட்டில், 70 ஆண்டுகளில் 230 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், பிளாஸ்டிக் துண்டுகள் சுற்றுச்சூழல் மற்றும் மனித உடலில் அதிகமாக சேர்ந்து வருகிறது.

பிளாஸ்டிக் பாட்டில்கள், நான்-ஸ்டிக் பாத்திரங்கள், பிளாஸ்டிக் வெட்டும் பலகைகள் போன்றவற்றை தவிர்த்து, கண்ணாடி அல்லது எஃகு பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகிறார்கள். உணவை பிளாஸ்டிக் பெட்டிகளில் சூடாக்காமல், குளிர வைத்து பிறகு மாற்றுவது நல்லது. HEPA(High-Efficiency Particulate Air) வடிப்பான்கள் கொண்ட காற்று சுத்திகரிப்பான்கள், பிளாஸ்டிக் தூசியைக் குறைக்க உதவும்.

Also Read : இந்தியாவில் விற்கப்படும் சர்க்கரை, உப்பில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தரும் உண்மை!

(HEPA என்பதை ”உயர் திறன் துகள் வடிகட்டி” என்று சொல்லலாம். இது மிகச்சிறிய துகள்களையும், மாசுக்களையும் காற்றில் இருந்து வடிகட்டும் ஒரு வகை வடிகட்டி ஆகும். இதை நாம் பொதுவாக, காற்று சுத்திகரிப்பான்கள் மற்றும் HVAC(Heating, Ventilation, and Air Conditioning) அமைப்புகளில் பயன்படுத்துகிறோம்.)

பொதுவாக, பிளாஸ்டிக் மாசுபாடு மனித இனப்பெருக்கத்திற்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்து வருகிறது. இது குறித்து மேலும் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், நமது அன்றாட பழக்கங்களை மாற்றி, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது நல்லது. இந்த ஆய்வு, மனித இனப்பெருக்கம் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சுருக்கமாக, நம்மை சுற்றியுள்ள பிளாஸ்டிக் தூசி, நம் உடலில், இனப்பெருக்க செல்களில் கூட நுழைந்து கொண்டிருக்கிறது. இதை குறைக்க, எளிமையான மாற்றங்கள் மற்றும் விழிப்புணர்வு அவசியம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry