
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கரூரில் நடந்த நடிகர் விஜய்யின் பிரசார கூட்டம் சரியான முறையில் நடக்கக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டுப் பிரச்சினை உருவாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அவர் இன்று (புதன்கிழமை) பேசினார்.
Also Read : புயல் வேகத்தில் எகிறும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.91,000 கடந்து வரலாற்று உச்சம்! இன்னும் உயரும் அபாயம்!
கரூர் சம்பவம்: சதிப் புகார்
அவர் பேசுகையில், “கரூரில் அண்மையில் நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். வேண்டுமென்றே திட்டமிட்டு, அந்தக் கூட்டம் சரியான முறையில் நடைபெறக்கூடாது என்பதற்காகப் பிரச்சினை உருவாக்கப்பட்டதாகத் தகவல். இது போன்ற ஜனநாயக விரோத செயல்களைச் செய்யும் திமுகவின் அரசியலை மக்கள் அறிவார்கள்,” என்று கூறினார்.
முதல்வர் மீதான கடும் விமர்சனம்
பெயர் மாற்றும் அரசியல்: “இனிமேல் மருத்துவமனையில் நோயாளிகளை மருத்துவப் பயனாளிகள் என்றுதான் சொல்ல வேண்டுமாம். ‘நோயாளி’ என்று சொல்லக்கூடாதாம். பெயர் வைக்கிறதுக்கு ஒரு விவஸ்தை வேண்டாம்? ஸ்டாலின் அவர்களே, இரண்டு பெயரை மட்டும் தயவுசெய்து மாற்றி விடாதீர்கள். அது உங்கள் அப்பா, அம்மா பெயர். விட்டால் அதையும் மாற்றிவிடுவார். எல்லாவற்றுக்கும் பெயர் மாற்றம், இரண்டாவது பெயர் வைப்பார். இப்படிப்பட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது.”
அதிமுக திட்டங்களுக்குத் திமுகவின் உரிமை கோரல்: “கோவையில் நாளை பாலம் திறக்கிறார்கள். அது தமிழ்நாட்டிலேயே 10 கிலோமீட்டர் நீளமான பாலம். அந்தப் பாலத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது அதிமுக ஆட்சியில். பாலத்துக்கு, நல்ல பெயர் வைங்க; உங்க அப்பா பெயர் மட்டும் வைக்காதீர்கள். எங்க பார்த்தாலும் நாம் போட்ட திட்டத்துக்கு அவருடைய அப்பா பெயர் வைக்கிறார்.”
பொய்யிலும் கடனிலும் சூப்பர் முதல்வர்: “இந்தியாவிலேயே சூப்பர் முதல்வர் ஸ்டாலின் என்று அவரே சொல்கிறார். ஆனால் எதில் சூப்பர் முதல்வர்? பொய் பேசுவதிலும், கடன் வாங்குவதிலும் சூப்பர் முதல்வர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலம். நம் எல்லோரையும் கடனாளியாக்கிவிட்டார். வரி போட்டுத்தான் இந்த கடனை அடைப்பார்கள்.”
அரசு ஊழியர் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம்
அரசு ஊழியர்கள் போராட்டம்: “ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தொடர்ந்து போராடுகிறார்கள். ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் அதிமுக அரணாகவும், துணையாகவும் நிற்கும். அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் துன்பப்படவில்லை, அவர்களைக் கட்டாயப்படுத்தி வரவைக்கவில்லை. ஆனால் திமுக ஆட்சி அமைந்த சில மாதங்களில் கொரோனா இருந்தபோது ஆசிரியர்களை, அரசு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி வரச்சொல்லியதால் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.”
கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா: “இப்பகுதியில் திமுக கவுன்சிலர் கள்ளச்சாராயம், போலி மதுபானம் காய்ச்சி, அதை அவரது அரசே கண்டுபிடித்தது. திமுக ஆட்சியில்தான் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம். அதற்கு திமுக நிர்வாகிகள் துணைபோகிறார்கள். கஞ்சா விற்பவர்களும் திமுக நிர்வாகிகள். அதனால் காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிமுக ஆட்சியில் கஞ்சா விற்பனை முழுமையாகத் தடை செய்யப்படும்,” இவ்வாறு அவர் பேசினார்.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
