3 Mins Read : அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விற்பனைத் துறையில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினை தவிர்த்து, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும், கொள்முதல் விலையை எப்போதும் ஒரே சீரான, நிலையான அளவில் வழங்குவதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பால் உற்பத்தி குறைவாகும் காலங்களில் அல்லது தங்களுக்கு கூடுதலாக பால் தேவைப்படும் சமயங்களில், பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கு பால் கொள்முதலில் லிட்டருக்கு வெறும் 50காசுகளை மட்டும் உயர்த்தி கொடுப்பார்கள். இதைத்தொடர்ந்து உடனடியாக பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வு எனக் காரணம் கூறி, பால் மற்றும் தயிர் உள்பட பால் பொருட்களின் விற்பனை விலையை லிட்டருக்கு 2.00 ரூபாய் முதல் 6.00 ரூபாய் வரை தன்னிச்சையாக உயர்த்தத் தொடங்கிவிடுவர்.
அதே சமயம் பால் உற்பத்தி அதிகரித்து தேவைக்கு அதிகமாக பால் வரத்து உள்ள காலங்களிலோ அல்லது, பால் மற்றும் தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனையில் கொஞ்சம் சரிவு ஏற்பட்டாலோ கூட விவசாய பெருமக்களுக்கான பால் கொள்முதல் விலையை தடாலடியாக குறைத்து விடுவார்கள். அப்போது விற்பனையில் உள்ள பால் மற்றும் தயிர் விற்பனை விலையை எக்காரணம் கொண்டும் குறைக்காமல் அப்படியே விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுவதிலேயே தனியார் பால் நிறுவனங்கள் குறியாக இருக்கின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் நடப்பாண்டில் பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் கோடை காலத்தை முன்னிட்டு, பெரும்பாலான மக்களின் வெளியூர் சுற்றுப்பயணம் போன்ற காரணிகளால் தினசரி பால் மற்றும் தயிர் விற்பனையில் சுமார் 10% முதல் 20% வரை சரிவடைந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த மே மாதம் பெய்த தொடர் கோடை மழை காரணமாக தற்போது தமிழ்நாட்டில் பால் உற்பத்தியும் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது.
பால் உற்பத்தி கணிசமாக அதிகரிப்பு, அதே சமயம் பால், தயிர் விற்பனையில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பால் நிறுவனங்கள் கடந்த மே மாதம் மழை பெய்வதற்கு முன்பு வரை ஒரு லிட்டர் பாலினை 40.00 ரூபாய் முதல் 42.00 ரூபாய் வரை கொடுத்து கொள்முதல் செய்து கொண்டிருந்தது. தற்போது தாங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை கடந்த மே மாதத்தை விட லிட்டருக்கு 10.00 ரூபாய் வரை குறைத்து (ஒரு லிட்டர் 30.00 ரூபாய் முதல் 32.00 ரூபாய் வரை) கொள்முதல் செய்கின்றன. இதனால் தமிழ்நாட்டில் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களை தவிர்த்து பிற லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் பால் கொள்முதல் விலையை தன்னிச்சையாக லிட்டருக்கு 10.00ரூபாய் வரை குறைத்துள்ள தனியார் பால் நிறுவனங்கள் அதன் பலனை நுகர்வோருக்கு வழங்கக் கூடிய வகையில் பால், தயிர் விற்பனை விலையை அதே அளவிற்கு குறைக்க முன் வராத தனியார் பால் நிறுவனங்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
நெல், கரும்பு, மஞ்சள், கொப்பரைத் தேங்காய் உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசே நிர்ணயம் செய்வது போல, தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் விவசாயம் சார்ந்த பாலுக்கான கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையையும், விற்பனைக்கு அதிகபட்ச ஆதார விலையையும் அரசே நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்” என சுமார் 16ஆண்டுகளாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தமிழ்நாடு அரசை தொடர்ந்து வலியுறுத்தி குரல் கொடுத்து வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, 2016 ஆகஸ்ட் 1ல், “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை அதிமுக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்” என அறிக்கை வெளியிட்டதை தற்போதைய திமுக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கி, நுகர்வோரான பொதுமக்களையும் வஞ்சிக்கும் தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைபடுத்தக் கூடிய வகையில், கருணாநிதி விரும்பிய சட்டதிருத்தத்தை அவரது மகனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல், தமிழ்நாட்டில் 85% பாலை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து வரும் சூழலில், தற்போது கொள்முதல் விலையை குறைத்துள்ளதால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, தனியார் நிறுவனங்களை அழைத்து எச்சரிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, “தமிழ்நாட்டில் தினசரி 2 கோடியே 10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிக் கொண்டிருக்கிறது. அதில் தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் 33 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்கிறது. அதாவது மொத்த உற்பத்தியில் 15% மட்டுமே. மீதமுள்ள 85 சதவீத பால் உற்பத்தியை 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வருகின்றன.
தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் கிடைக்கும்போது விவசாயிகளுக்கு லாபத்தில் பங்கும் கொடுப்பதில்லை, விலையும் கூடுதலாக கொடுப்பதில்லை. ஆனால், தற்சமயம் பால் பொருட்களின் விற்பனை குறைந்துள்ளது என்ற காரணத்தை சொல்லி கொள்முதல் விலையை குறைத்து விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகின்றன.
தமிழ்நாட்டின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவினுக்கு மட்டுமான அமைச்சராகவே செயல்பட்டு வருகிறார், பால்வளத்துறையும் அதே அடிப்படையில் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் 85% பாலை கொள்முதல் செய்து வரும் தனியார் நிறுவனங்கள், தற்போது கொள்முதல் விலையை குறைத்துள்ளன. இதனால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, தனியார் நிறுவனங்களை அழைத்து எச்சரிக்க வேண்டும். குறைக்கப்பட்ட பால் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், அந்த நிறுவனங்களை தமிழ்நாட்டில் செயல்பட அனுமதிக்க கூடாது என்கிற நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழ்நாட்டில் உள்ள 20 லட்சம் பால் விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக முதல்வரும், பால்வளத்துறை அமைச்சரும், பால் வளத்துறை உயர் அதிகாரிகளும் உடனடியாக இந்த பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான வாழ்வாதார சிக்கலில் உள்ள 20 லட்சம் பால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை, தலைமைச் செயலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry