சிலரை மட்டும் குறிவைத்து கொசுக்கள் கடிப்பது ஏன்? இரத்த வகை, நிறம், வாசனையை அறியும் திறன் கொசுக்களுக்கு உண்டா?

0
51
Here’s why mosquitoes are attracted to some people more than others | Mosquitoes can see humans from a distance of 5 to 15 meters | Getty Image

கொசுக்கள் அளவில் மிகச்சிறியதாக இருந்தாலும், மிகவும் கொடியவை. மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், கொசுக்களால் நிறைய நோய்கள் பரவத் தொடங்கியுள்ளன. நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, கொசுக்கள்தான் உலகிலேயே மிகவும் ஆபத்தான கொடிய விலங்கு ஆகும். கொசுக்கள் மனிதர்களை 5 முதல் 15 மீட்டர் (சுமார் 16 முதல் 49 அடி) தூரத்திலிருந்து பார்க்கும் திறன் கொண்டது.

கொசுக்களானது மிகவும் கொடிய மற்றும் உயிரைப் பறிக்கும் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை பரப்புகின்றன. அதில் சிக்குன்குனியா, மலேரியா, டெங்கு, ஜிக்கா, வெஸ்ட் நைல் வைரஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த வைரஸ் தொற்றுகளானது காலநிலை மாற்றத்தின் போது அதிகம் பரவும். அதில் சில முன்னெப்போதையும் விட அதிகமாக பரவவும் வாய்ப்புள்ளன.

மனிதர்களை கொசுக்கள் அதிகம் கடிக்க எது காரணம் என்று நீங்கள் யோசிக்கலாம். அதில் ஒருவரது இரத்த வகை, உடுத்தும் ஆடையின் நிறம் போன்றவைகள் காரணமாக இருக்கக்கூடும் என்று பலரும் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். இதைத்தாண்டி, கொசுக்களை மனிதர்களிடம் ஈர்ப்பது எது என்பதை தெரிந்துகொள்வோம்.

Also Read : ஆந்திர நீட்டு மிளகாயால் புற்றுநோய் ஆபத்து! அதிக அளவு சேர்க்கப்படும் பூச்சிக்கொல்லிகள், நிறமிகள்..! சர்க்கரை நோய், மலட்டுத்தன்மையும் ஏற்படலாம் என எச்சரிக்கை!

கொசுக்கள் மனிதர்களை எதன் அடிப்படையில் கடிக்கிறது என்பது குறித்த ஆய்வு ஒன்றில், கொசுக்களால் வாசனை மற்றும் நிறம் ஆகிய இரண்டையும் உணர்ந்து கண்காணிக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் நீங்கள் ஒரு குழுவாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, கொசுக்களானது உங்களை மட்டும் குறி வைத்து கடித்தால், அது நீங்கள் அணிந்திருக்கும் உடையின் நிறமோ அல்லது உங்களின் வாசனையோ காரணமாக இருக்கலாம்.

கொசுக்கள் குறிப்பிட்ட சில நிறங்களுக்கு ஈர்க்கப்படுகின்றன. வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் நடத்திய ஆய்வில், சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிப்பதற்கு பல காரணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதில் ஒன்று தான் நிறங்கள். அதுவும் சிவப்பு, கருப்பு போன்ற நிறங்கள் கொசுக்களை ஈர்ப்பதாகவும், பச்சை, வெள்ளை போன்ற நிறங்களை கொசுக்கள் விரும்புவதில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொசுக்கள் எப்படி குறிப்பிட்ட நிறங்களால் ஈர்க்கப்படுகிறதோ, அதேபோல் சில வகையான வாசனைகளாலும் ஈர்க்கப்படும். உங்கள் அருகில் இருப்பவர்களை கொசுக்கள் கடிக்காமல் உங்களை மட்டும் கொசுக்கள் அதிகம் கடிக்கிறது என்றால், அதற்கு உங்கள் மீதான வாசனையும் காரணமாக இருக்கலாம். குறிப்பாக இப்படி வாசனையைக் கொண்டு அதிகம் கடிப்பது பெண் கொசுக்கள் தான் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. முட்டை உற்பத்திக்கு மனித இரத்தத்தில் உள்ள புரதத்தை நம்பியிருக்கும் பெண் கொசு மட்டுமே கடிக்கிறது. ஆண் கொசுக்கள் ஊட்டச்சத்துக்காக தேனை உண்டு உயிர் வாழ்கின்றன.

Also Read : ஆட்சியரை பொய்சொல்ல வைத்த வசந்தம் கார்த்திகேயன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கள்ளச்சாராய சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பளீர் கேள்வி!

கொசுக்கள் மனித வியர்வையை மோப்பம் பிடிக்க முடியும் தன்மை கொண்டது. அதுவும் வியர்வையில் இருந்து வெளியேற்றப்படும் வாசம், கெமிக்கல்கள் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு போன்றவற்றின் வாசத்தைக் கொண்டு கொசுக்கள் மனிதர்களை குறி வைத்து கடிக்கின்றன. லாக்டிக் அமிலம், அம்மோனியா மற்றும் அதில் வெளிப்படும் பிற சேர்மங்களால் கொசுக்கள் ஈர்க்கப்படுகின்றன. இதன் பொருள், உங்களுக்கு வியர்க்க வாய்ப்பிருந்தால் அல்லது வெப்பமான நாட்களில் வெளியில் அதிக நேரம் செலவிட்டால் கொசுக் கடிக்கு நீங்கள் அதிகம் ஆளாக நேரிடலாம்.

முக்கியமாக கொசுக்களும் சிறப்பான கற்கும் திறனைக் கொண்டுள்ளன. இந்த ஆற்றலைக் கொண்டு தான், அவைகளால் நேர்மறை மற்றும் எதிர்மறை தொடர்புகளை வேறுபடுத்தி அறிய முடிகிறது. இதைக் கொண்டு தான் கொசுக்கள் மீண்டும் மீண்டும் ஒருவரை கடிக்கக் கற்றுக்கொள்கின்றன. இது தவிர, கொசுக்கள் பல வகையான சர்க்கரை மூலங்களாலும் ஈர்க்கப்படுகின்றன. குறிப்பாக பழங்களின் இனிப்புச் சுவையின் வாசனையால் ஈர்க்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆசிய புலி கொசு, அல்லது ஏடிஸ் அல்போபிக்டஸ் வகை கொசுக்கள் ‘ஓ’ இரத்த வகையை விரும்புகிறது. சதுப்பு நில கொசு அல்லது அனோபிலிஸ் கேம்பியா வகை கொசுக்கள் AB இரத்த வகையை விரும்புகின்றன. அதேபோல் B பாசிடிவ், B நெகடிவ் இரத்த வகைகளும் கொசுக்களை ஈர்க்கின்றன. கொசுக்களால் கார்பன் டை ஆக்சைடை குறிப்பிடத்தக்க தூரத்திலிருந்து உணர முடியும். நீங்கள் எவ்வளவு அதிகமாக சுவாசிக்கிறீர்களோ, அந்த அளவு கொசுக்களால் கவரப்படுவீர்கள்.

Mosquitoes kill more people than any other animal on Earth | Getty Image

2000ம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கர்ப்பிணி அல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, கர்ப்பிணிகளை இரண்டு மடங்கு கொசுக்கள் கடிப்பது தெரியவந்துள்ளது. கர்ப்பிணி அல்லாதவர்களை விட, கர்ப்பத்தின் பிற்பகுதியில் உள்ளவர்கள் 21% அதிக அளவு சுவாசத்தை வெளியேற்றுகிறார்கள். மேலும், கர்ப்பிணிகளின் வயிறு மற்றவர்களை விட ஒரு டிகிரி வெப்பமாக இருக்கும். இவை இரண்டுமே கொசுக்களை ஈர்க்கும்.

கொசுக்களுக்கு பீர் சுவை மிகவும் பிடிக்கும். இதுதொடர்பான ஒரு ஆய்வில், ஒரு லிட்டர் தண்ணீரை குடித்தவர்களைக் காட்டிலும் ஒரு லிட்டர் பீர் குடித்தவர்களை நோக்கி அதிகமான கொசுக்கள் மொய்த்து கடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சுருக்கமாகப் பார்த்தால், கொசுக்கள் ஒரு சிலரை அதிகம் குறிவைக்கின்றன.

அடர் வண்ண ஆடை, இரத்த வகை, வியர்வை, கார்பன் டை ஆக்சைடு, கர்ப்பம், தோலில் வாழும் பாக்டீரியா மற்றும் பீர் நுகர்வு ஆகியவை கொசுக்களை ஒருவரிடம் ஈர்க்க முனைகின்றன. எனவே கொசுக்களை ஈர்ப்பது என்னவென்பதை அறிந்து, அவற்றை விலக்கி வைத்தால், கொசுக் கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், பூச்சிகளை விரட்டும் குணம் கொண்ட லாவெண்டர், சாமந்தி, எலுமிச்சை புல், ரோஸ்மேரி, துளசி, புதினா உள்ளிட்ட செடிகளை வீட்டில் வளர்க்கலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry