
புதுடெல்லி/சென்னை, மார்ச் 12: மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர்ச் சூழலால் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது. வதந்திகளால் பொதுமக்கள் பீதியடைந்து பெட்ரோல் பங்குகளில் கூடுவதைத் தவிர்க்குமாறு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
சர்வதேச நெருக்கடியும் இந்தியாவின் வியூகமும்
உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் இதயமாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இந்தப் பாதை வழியாகத்தான் உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கிறது.
அல் ஜசீரா (Al Jazeera) நேரடித் தகவல்: மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஈரான் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானிய கடற்படையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. “உலகளாவிய விநியோகச் சங்கிலியை (Global Supply Chain) சீர்குலைப்பதே ஈரானின் வியூகம்” என அந்தத் தளம் எச்சரித்துள்ளது. இதை எதிர்கொள்ளவே இந்தியா தனது இறக்குமதிப் பாதைகளை மாற்றியுள்ளது.
மாற்றுப் பாதைகள்: இந்தியா இதுவரை 55% ஆக இருந்த மாற்றுப் பாதை விநியோகத்தை தற்போது 75% ஆக உயர்த்தியுள்ளது. அதாவது, ஹார்முஸ் ஜலசந்தியைச் சாராத மற்ற கடல் வழித்தடங்கள் (குறிப்பாக நன்னம்பிக்கை முனை வழியாக) மூலம் எண்ணெய் இறக்குமதி தடையின்றி நடைபெறுகிறது.
40 நாடுகளுடன் கரம் கோர்ப்பு: தனது தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியா ஒரே நாட்டை நம்பியிருக்காமல், அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 40 நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை உறுதி செய்துள்ளது.
Also Read : “காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மோடி அரசு காரணமா? அல்லது உலகப் போரின் விளைவா? – ஒரு ஆழமான பார்வை!”
முதன்மை சப்ளையராக ரஷ்யா
இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தராக ரஷ்யா தொடர்ந்து நீடிக்கிறது. பிபிசி (BBC India) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, மேற்கத்திய நாடுகளின் தடைகளையும் மீறி ரஷ்யாவிடமிருந்து இந்தியா தள்ளுபடி விலையில் அதிகப்படியான எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் நாளொன்றுக்கு 0.04 மில்லியன் பேரல்கள் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மொத்த விநியோகத்தில் 20 சதவீதமாகும்.
கையிருப்பு எவ்வளவு உள்ளது?
நாடாளுமன்றத்தில் பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி அளித்த தகவலின்படி:
1. அரசின் இருப்பு: 5.33 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இது 9.5 நாட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும்.
2. நிறுவனங்களின் இருப்பு: எண்ணெய் நிறுவனங்களிடம் 64.5 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன.
மொத்தத்தில், சர்வதேச அளவில் எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும், சுமார் 74 நாட்களுக்கு இந்தியாவிடம் தடையற்ற எரிபொருள் இருப்பு உள்ளது.
தமிழகத்தில் பீதி: பங்க்குகளில் குவியும் வாகன ஓட்டிகள்
இதற்கிடையே, பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்றும் அதன் விலை கணிசமாக உயரக்கூடும் என்றும் வதந்தி பரவியதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்குகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
சென்னை, திருச்சி உட்பட பல்வேறு நகரங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்பி வருகிறார்கள். சிலர், 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேன் போன்றவற்றை எடுத்துச் சென்று கூடுதலாக வாங்கிச் செல்கிறார்கள். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய வாடிக்கையாளர் ஒருவர், ‘‘ஏற்கனவே வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டருக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அடுத்ததாக, பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அதன் விலையும் வேகமாக உயரும் என்றும் பலரும் கூறி வருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி – பாரத் பெட்ரோலியம் விளக்கம்
மக்களின் இந்தப் பீதியைக் கண்டு பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளன:
அதில், “சமூக ஊடகங்களில் பரவும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்த செய்திகள் முற்றிலும் தவறானவை. இந்தியா ஹார்முஸ் ஜலசந்தி பாதையை மட்டும் நம்பி இருக்கவில்லை. எங்களிடம் போதிய இருப்பு உள்ளது. சர்வதேச அளவிலான எந்த ஒரு குறுகிய கால நெருக்கடியையும் எதிர்கொள்ள இந்தியாவால் முடியும். வதந்திகளை நம்ப வேண்டாம்.” எனக் கூறியுள்ளன.
போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், இந்தியாவின் விநியோகச் சங்கிலி (Supply Chain) மிகவும் வலுவாக உள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையற்ற சேமிப்பில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதே சந்தையில் செயற்கை தட்டுப்பாடு வராமல் தடுக்க உதவும்.
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களும், அரசாங்கமும், வீடுகளுக்கு இடையூறு இல்லாமல் சிலிண்டர்கள் சென்றடைவதை உறுதிசெய்ய தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. சரிபார்க்கப்பட்ட தகவல்களை நம்புவோம்; வதந்திகளைத் தவிர்ப்போம்.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
