அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்லும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் TOWER BLOCK 1 வாசலில், கடந்த 2019 ம் ஆண்டு அக்டோபர் 25 ம் தேதி முதல் ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ மேற்கொண்டோம். அப்போது தமிழகம் முழுவதும் 7 நாட்கள் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்தனர்.
அரசு மருத்துவர்கள் வரலாற்றில் முதன்முறையாக போராட்டம் நடந்த அந்த ஒரு வாரம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர். அப்போது எழுப்பிய முழக்கம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்துக் கட்சி தலைவர்களும் அப்போது நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக 28.10.2019 அன்று மாலை 6.30 மணியளவில், அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
உண்ணாவிரதம் இருந்த மருத்துவரின் அருகே வந்து அமர்ந்த நம் முதலமைச்சர், ‘மருத்துவர்கள் தங்களை இது போன்று வருத்திக் கொள்ள வேண்டாம். அதுவும் ஏற்கனவே கழக ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை (G.O. 354) தானே நீங்க கேட்கிறீங்க. அடுத்து அமையும் திமுக ஆட்சியில் நிச்சயம் நிறைவேற்றி தருவோம்’ என்று மருத்துவரின் கையை பிடித்து சத்தியம் செய்தார். உங்களுடைய உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் சொல்லி விட்டு சென்றதை நம்மால் மறக்க முடியவில்லை.
இருப்பினும் ஆட்சி அமைந்து தற்போது இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இன்னமும் மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றவில்லை. அடுத்த 10 நாட்களில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தெரிவித்த நம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் இரண்டரை வருடங்களாக செய்யவில்லை. 2021 தீபாவளியின் போது நம்மை முதல்வரிடம் அழைத்து செல்வதாக தெரிவித்த அமைச்சர், 2023 தீபாவளி நெருங்கி வரும் நிலையிலும் தான் சொன்னதை செய்யவில்லை.
உண்மையில் சுகாதாரத் துறை வரலாற்றிலேயே, தற்போது தான் இதுவரை இல்லாத அளவு அரசு மருத்துவர்களுக்கு மிகப்பெரிய வேதனையும், சோதனையும் மிகுந்ததாக உள்ளது. அதனால் தான் நீண்டகாலமாக அரசாணை 354 நிறைவேற்றக் கேட்டு போராடி வரும் அரசு மருத்துவர்களை அவமானப்படுத்தும் வகையில், அரசாணை 293ஐ நம் அமைச்சர் வெளியிட்டார். சுகாதாரத் துறையின் சாதனை என அமைச்சர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தடவை மார்தட்டி சொல்லியுள்ளார். ஆனால் இதற்கான பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்களின் நலனுக்காக, நம் அமைச்சர் எதையுமே செய்யவில்லை என்பது தான் வருத்தமான உண்மை.
28.10.2019 அன்று முதலமைச்சர் தெரிவித்த வார்த்தைகள் உதட்டில் இருந்து வந்ததாகத் தெரியவில்லை. அவரது உள்ளத்தில் இருந்து வந்ததாகவே பார்க்கிறோம். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில், அதுவும் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் இந்த நேரத்தில், இங்கு கருணாநிதியின் அரசாணைக்கு தடை போடப்படுவதை நாம் எதிர்பார்க்கவில்லை.
2023 அக்டோபர் 28ல், முதலமைச்சர் சத்தியம் செய்ததை நாம் நினைவுப்படுத்த விரும்புகிறோம். 19 ஆயிரம் அரசு மருத்துவர்களின் வலியையும், உணர்வுகளையும் புரிந்து கொண்டு, 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry