குளிர்காலம் தொடங்கிவிட்ட நிலையில், குழந்தைகள் பலரும் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். மற்ற மாதங்களை விட, குளிர்காலத்தில் குழந்தைகளுக்காக நிறைய மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். சளி, இருமல் மற்றும் பிற சுவாச பிரச்சனைகளால் குழந்தைகள் அதிகம் அவதிப்படுவார்கள்.
ஏனெனில் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளிடம் நோயெதிர்ப்பு சக்தி சற்று குறைவாகவே இருக்கும். மேலும் குளிர்காலங்களில் வைரஸ்கள் நீண்ட காலம் ஒரு மேற்பரப்பில் உயிருடன் இருக்கும். எனவே குளிர்காலங்களில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது பெற்றோருக்கு சவாலானதாக இருக்கும். குளிர்காலத்தில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது? எந்த மாதிரியான உணவுகளை கொடுக்கலாம்? என்பது குறித்து மருத்துவர்கள் தரும் டிப்ஸை தெரிந்துகொள்வோம்.
Also Read : பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா? பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் அறிவியல் ரகசியம்!
சுவாச நோய்த்தொற்றுகள்
குளிர்ச்சியான சூழலில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகம் என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில், ஏரோசோல்கள் (Aerosols) அதாவது திரவம் மற்றும் வாயுவின் சிறிய துளிகள் – குளிர்ந்த நிலைகளில் வைரஸ்களை பரப்புவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில், காற்றில் நீண்ட நேரம் நீடிக்கும் ஏரோசல் பரவல் அதிகரிக்கிறது. கூடுதலாக, குளிர்ந்த காற்று நாசி துவாரங்களின் பாதுகாப்பு புறணியை பலவீனப்படுத்துகிறது. இதனால் சுவாச தொற்றுநோய்களால் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.
குளிர்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான டிப்ஸ்கள்
1. அவ்வப்போது கைகளை கழுவ குழந்தைகளை அறிவுறுத்த வேண்டும். மேலும் அவர்கள் தும்மினாலோ அல்லது இருமினாலோ உள்ளங்கைகளை மறைக்கக் கற்றுக் கொடுத்தால், அது மற்றவர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்.
2. அருகில் யாரேனும் இருமினால் கைகளால் வாயையும் மூக்கையும் மறைக்க அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். மக்கள் நெரிசலான பொது இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க் அணிவியுங்கள்.
3. குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது, அவர்களை வீட்டிலேயே வைத்திருப்பது பள்ளியில் வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது. குழந்தைகள் குளிர்காலத்தில் வெளியில் செல்லும் போது குளிர்கால ஜாக்கெட், ஸ்வெட்டர், ஸ்கார்ஃப், சாக்ஸ் போன்றவற்றை அணிந்திருப்பதை உறுதி செய்யவும்.
4. பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்பட சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குதல், அவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் தினசரி உடல் செயல்பாடுகளை ஊக்குவித்தல் ஆகியவை அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை உறுதி செய்வதுடன், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் திறனை வலுப்படுத்துகிறது.
5. இன்ஃப்ளூயன்ஸா (Influenza) மிகவும் பொதுவான மற்றும் கடுமையான வைரஸ் தொற்றுகளில் ஒன்றாகும். ஃப்ளூ தடுப்பூசி மூலம் இதை எளிதில் தடுக்கலாம். இந்திய குழந்தை மருத்துவ அகாடமி, 6 மாதம் தொடங்கி, குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை போட பரிந்துரைக்கிறது. சற்று பெரிய குழந்தைகளுக்கு, ஆஸ்துமா அல்லது நாள்பட்ட நுரையீரல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால், வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசிகள் மிகவும் முக்கியம்.
குளிர்காலத்துடன் தொடர்புடைய கட்டுக்கதைகள்
சிலர் குழந்தைகளுக்குப் பழங்களைக் கொடுப்பதைத் தவிர்க்கிறார்கள். ஏனெனில் அவை சளியை உண்டாக்கும் என்று நம்புகிறார்கள். மற்றவர்கள் தயிர் வழங்குவதைத் தவிர்க்கலாம், ஏனெனில் அது “சளியை உண்டாக்கும்” என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அறிவியல் ரீதியாக இவை நிரூபிக்கப்படவில்லை.
உண்மையில், பழங்கள் மற்றும் தயிர் இரண்டும் ஆரோக்கியமான உணவின் முக்கிய கூறுகள். குளிர் காலநிலையிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய வைட்டமின்களை பழங்கள் வழங்குகின்றன. மேலும் தயிர் குடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் புரோபயாடிக்குகளின் (probiotics) நல்ல மூலமாகும்.
எனவே குளிர் காலத்தை அறிவியல் கண்ணோட்டத்தில் அணுகுவது மிகவும் முக்கியமானது. உண்மையிலே ஜலதோஷம் வைரஸ்களால் ஏற்படுகிறது, நாம் உண்ணும் உணவுகளால் அல்ல. இந்த கட்டுக்கதைகளை தள்ளிவைப்பதன் மூலம், குளிர்காலங்களில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தலாம்.
With input Boldsky. Image Source : Getty Image.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry