“மே 6-ஆம் தேதி வரை வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்” என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகரிக்கும். தருமபுரி, திருத்தணி, திருப்பத்தூர் உள்ளிட்ட 10 இடங்களில் 42 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகமாக பதிவாகும். கரூரில் இயல்பை விட ஏழு சதவீதம் அதிகமாக 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
எல்-நினோ காலகட்டத்தில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு இருந்ததால் வெப்பம் அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 – 40 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். கத்திரி வெயில் காலத்தில் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 5 நாட்கள் தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. பொதுவாகவே மே மாதம் என்பது வெயில் காலம் என்பதால் கோடை மழை வரும்போது வெயிலின் தாக்கம் சற்று குறையலாம். ஏப்ரல் தொடங்கி 27 நாட்கள் ஈரோட்டில் தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது. அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 44.3° செல்சியஸ் (இயல்பை விட +7.5° செல்சியஸ் அதிகம்) பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 10 இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 42° – 44° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
ஈரோட்டில் 44.0° செல்சியஸ், வேலூரில் 43.6° செல்சியஸ், திருச்சியில் 42.7° செல்சியஸ், தருமபுரியில் 42.5° செல்சியஸ், திருத்தணியில் 42.3° செல்சியஸ், சேலம் & திருப்பத்தூரில் 42.2° செல்சியஸ், மதுரை (நகரம்) & நாமக்கல்லில் 42.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 4 இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40° – 42° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39° – 40° செல்சியஸ், பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36° – 40° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 25° –30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 40.0° செல்சியஸ் (+2.9° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.9° செல்சியஸ் (+1.8° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே 6 ஆம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும். அதேவேளையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 03.05.2024 முதல் 06.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
08.05.2024 மற்றும் 09.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்குத் தொடங்கி அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry