காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது! சென்னையில் மழை நீடிக்கிறது! எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

0
103
Amid continuous heavy rainfall, Chennai faces severe water logging, with many parts of the city. Authorities are working to manage the flooding, but residents are urged to stay cautious as more rain is expected. Image Courtesy : Vikatan

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதேபோல், தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், விருதுநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கனமழை தொடர்கிறது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் நிலை கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு தினங்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி, வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோரம் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

Also Read : முடிவு பெறாமல் உள்ள மழைநீர் வடிகால் பணிகள்! அரசின் செயலற்ற தன்மையால் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கப்போகும் சென்னை?

சென்னையில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவில் நல்ல மழை பெய்தது. இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்கிறது. தாம்பரம், பல்லாவரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் காலை முதல் மழை தொடர்கிறது.

சோழிங்கநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக புறநகர் பகுதிகளான மேடவாக்கம், வேளச்சேரி பிரதான சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கின்றது, குறிப்பாக பள்ளிக்கரணை பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி வடியாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல் ஓஎம்ஆர் சாலை, துரைப்பாக்கம், கந்தன்சாவடி, எம்ஜிஆர் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.


சென்னையில் மேடவாக்கத்தில் தேங்கியுள்ள மழை நீர்


சென்னையில் பேசின் பிரிட்ஜில் தேங்கியுள்ள மழை நீர்


சென்னையில் வியாசர்பாடியில் தேங்கியுள்ள மழை நீர்

திருவள்ளூரில் விடியவிடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை, கும்மிடிப்பூண்டியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதியான திருஆயர்பாடியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீரால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

வழக்கமாக அதிகமாக மழைநீர் தேங்கும் வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட தாழ்வான இடங்களில் படகுகள் இப்போதே தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதற்காக, 36 படகுகளை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது. பொதுமக்கள் உதவிக்கு 1913 என்ற கட்டணமில்லா எண்ணுக்கும், 9445551913 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அனுப்பி வரும் வானிலை அறிக்கையின் அடிப்படையில், விமான சேவைகளை பாதுகாப்பாக இயக்குவது குறித்து சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில், இதுவரையில் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் கனமழை எச்சரிக்கை காரணமாக, பயணிகள் பலர் தங்களுடைய விமான பயணங்களை ரத்து செய்து விட்டதால், இன்று (அக்டோபர் 15) சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது.

போதிய பயணிகள் இல்லாமல் பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் விமான நேரங்களில் மாற்றங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதால், பயணிகள் அனைவரும் தாங்கள் பயணம் செய்யும் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமானங்கள் புறப்படும் நேரங்களை விசாரித்து, அதற்கு ஏற்றபடி தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

கோவை மாநகரில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் இருந்து பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. காந்திபுரம், சித்தாபுதூர், சாய்பாபா காலனி, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிவானந்த காலனியில் இருந்து சாய்பாபா காலனி செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் தேங்கிய மழை நீரில் அரசு பேருந்து மாட்டிக் கொண்டது. அதில் பயணித்த பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்ட நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கழித்து கிரேன் மூலம் அந்த பேருந்து மீட்கப்பட்டது.

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தைப் பொருத்தவரை, புதுச்சேரி காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry