Tamil Nadu Rains: 13 மாவட்டங்களில் கன மற்றும் மிகக் கனமழைக்கு வாய்ப்பு! தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! 

0
77
The Meteorological Department has predicted heavy to very heavy rainfall in 13 districts of Tamil Nadu.

வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணிக்குத் தொடங்கி அடுத்த 24 மணி நேரத்துக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடலில், இன்று காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெற்று, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் நிலவக்கூடும். இது வரும் 16-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடகிழக்கு திசையில் நகர்ந்து வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், ஒடிசா கடற்கரைப் பகுதியில் நிலவக்கூடும்.

தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், மற்றுமொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாய் கிழமை(இன்று) காலை 8.30 மணிக்கு முந்தைய 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 7 இடங்களில் மிக கனமழையும், 31 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 17 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Also Read : வினாத்தாள்களை காப்பியடித்துப் பிடிபட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம்..! என்ன செய்யப்போகிறது உயர் கல்வித்துறை?

அடுத்துவரும் இரண்டு தினங்களைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில், செவ்வாய் கிழமை(இன்று) காலை 8.30 மணிக்கு தொடங்கி 24 மணி நேரத்துக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மன்னார் வளைகுடா, குமரிக் கடல், தமிழக கடற்கரைப் பகுதிகளில் இன்றும், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேலும், ஆந்திர கடற்கரைப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று முதல் 16-ம் தேதி வரை, பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Also Read : மாணவர்களுக்கு APAAR ID CARD! ‘ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை’! மத்திய அரசின் திட்டத்திற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை, நகரின் பல பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்யலாம். நாளை மிதமான மழை பெய்யும். வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அக்டோபர் 1ம் தேதி முதல் இன்றுவரை பதிவான மழையின் அளவு 23 செ.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பான அளவு 27 செ.மீ. இது இயல்பைவிட 4 சதவீதம் குறைவு” என்று பாலச்சந்திரன் கூறினார்.

இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry