
அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியச் செயலாளரும் (AIFETO – ஐபெட்டோ), தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் திங்கள் கிழமையன்று (28.04.2025) ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வண்ணம் 110 விதியின் கீழ் ஒன்பது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். முதல் 8 அறிவிப்புகள் பணப்பயன் பெறக்கூடிய அறிவிப்புகள் ஆகும். வரவேற்று பாராட்டுகிறோம்.
நமது தொடர் போராட்டங்களின் வாயிலாகவும், ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் என்ற முறையில் அன்றாட புலனப் பதிவுகளின் மூலம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவும் ஈட்டிய விடுப்பு நாட்களில், 15 நாட்கள் வரை 1.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம், 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்வு என்பது உள்பட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இதில், “திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாத காலமாக இருந்த விடுப்பை 01.07.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது உள்ள விதிகளின்படி, மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு (Probation period) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
இதன் காரணமாக அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான பெண் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்” என்ற எட்டாவது அறிவிப்பு பெரிதும் வரவேற்று பாராட்ட வேண்டியதாகும்.
ஒன்பதாவதாக, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், இந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மட்டுமே அமல்படுத்த வேண்டும், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதை உறுதியாக வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உள்பட ஏனைய கூட்டமைப்புகள் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
நம்மைப் பொறுத்த வரையில் தொடர்ந்து போராடுவதன் மூலமாகத்தான் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளோம். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல், மாநில அளவிலான ஆசிரியர்கள் முன்னுரிமை அரசாணை 243ஐ திரும்ப பெறுதல், மேற்படிப்பிற்கான ஊக்க ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியிடுதல், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தேர்வு நிலை தர ஊதியம் தணிக்கை தடை நீக்குதல், முதுகலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த அரசிடம் இருந்து பெற முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Contact AIFETO Annamalai @ 94442 12060 / 9962222314. annamalaiaifeto@gmail.com
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry