ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை வசதி கொண்ட மருத்துவமனை! சோழர்களின் அசத்தலான ஆட்சி முறையை பகிரும் கல்வெட்டு!

0
192
Inscription on the walls of a Chola temple show how the visionary kings had operated a hospital more than 1000 years ago.The 15-bed establishment had doctors and surgeons who performed procedures and prescribed herbal medicines | Image Credit BBC

ஆயிரம் ஆண்டுகளுக்கு தற்போது இருப்பது போன்ற வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் இருந்தனவா? மக்கள் நோய்வாய்ப்பட்ட போது என்ன செய்தார்கள்? என்பன போன்ற கேள்விகள் நமக்குள் அவ்வப்போது எழுவதுண்டு. அதற்கு விடையாகவே, காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் பகுதியில் உள்ள ஆதுலர் சாலை இருக்கிறது.

செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில், பாலாற்றின் கரையில் உள்ளது திருமுக்கூடல். பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் கலக்கும் இடம் என்பதால் இந்த ஊர் திருமுக்கூடல் என பெயர் பெற்றது . இங்குள்ள வெங்கடேச பெருமாள் கோவிலானது 950 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் ஆட்சியில் ஆதுலர் சாலை என்று அழைக்கப்படும் மருத்துவமனை செயல்பட்டுள்ளது.

Also Read : குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவழைக்கும் சக்தி வாய்ந்த முறை! குலதெய்வம் வீட்டில் தங்க சிம்ப்பிள் பரிகாரம்!

இதுபற்றி பிபிசிக்கு விளக்கம் அளித்துள்ள இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணைக் கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம், திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோவிலின் முதல் பிரகாரத்தின் கிழக்குப் பக்கச் சுவரில், ராஜகேசரி வீரராஜேந்திர சோழனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1068) பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டானது ஆதுலர் சாலையை பற்றி விரிவாக தெரிவிக்கின்றது.

திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் | Image Credit BBC
இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம்

ஆதுலர் என்பதற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டவர் என்றும், சாலை என்பதற்கு மருத்துவ நிலையம் எனவும் பொருள்படும். அதாவது, உடல்நிலை பாதித்தவர்களுக்கான மருத்துவ நிலையம் என்று ஆதுலர் சாலையை பொருள் கொள்ளலாம். வைத்திய சாலையை நிர்வாகம் செய்வதற்கும், பராமரிப்பதற்கும், அங்கே பணியாற்றுகின்ற மருத்துவர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கும், வைத்திய விருத்தி, வைத்திய பாகம், வைத்திய போகம், வைத்தியக்காணி, ஆதுலர் சாலைபுரம் போன்ற பெயர்களில் நிலம் தானமாக கொடுக்கப்பட்டுள்ளன.

கோவிலில் உள்ள கல்வெட்டின்படி, ராஜேந்திர சோழர் மாவலிவானராசன் என்ற சிம்மாசனத்தில் இருந்து கொண்டு ‘வீரசோழன்’ என்ற மருத்துவமனையை உருவாக்கி அதை நிர்வாகம் செய்வதற்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளார். கோவிலின் ஒரு பகுதியான “ஜனநாத மண்டபம்” என்ற இடத்தில் மருத்துவனை செயல்பட்டு வந்துள்ளது. அந்த மருத்துவமனையில் திருக்கோவில்களில் பணியாற்றியவர்களுக்கும், வேத பாடங்களை பயில்கின்ற மாணவர்களுக்கும் வைத்தியம் பார்க்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 15 படுக்கைகள் இருந்துள்ளன. இதில் மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், மூலிகை மருந்துகளை தயார் செய்கின்ற மருந்தாளுநர்கள் இரண்டு பேர், செவிலியர் இருவர், பொதுப் பணியாளர் ஒருவர் ஆகிய 7 பேர் பணி செய்துள்ளனர்.

திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் | Image Credit BBC

அறுவை சிகிச்சை மருத்துவம், சல்லியக்கிரியை என்ற பெயரில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், மனித உடலில் ஏற்படும் பெரிய காயங்களை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளனர். மருந்தாளுநர்கள் ஓராண்டு காலத்திற்கு நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை இருப்பு வைத்து, பராமரித்தும் பாதுகாத்தும் அவற்றின் அளவுகளை சரிபார்த்தும் கணக்கிட்டும் வந்துள்ளனர். ஏறக்குறைய தற்பொழுது செயல்படும் மருத்துவமனை போலவே இந்த சோழர் கால மருத்துவமனையும் செயல்பட்டு வந்ததை கல்வெட்டு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. வீரசோழன் மருத்துவமனையில் நாடி பாா்த்து சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவர் மற்றும் உதவியாளா்கள் பணிபுரிந்த விபரமும், அவா்களின் ஊதிய விவரம் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட உணவு வகை குறித்தும் கல்வெட்டு விளக்குகிறது.

மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட கீழ்க்கண்ட மருந்துகளின் பெயா்கள் இந்த கோயில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு உள்ளன. 1.பிரம்மயம் கடும்பூரி, 2.வாஸாரிதகி, 3.கோமூத்திர கரிதகை, 4.தஸமூல ஹரிதகி, 5.பல்லாதக ஹரிதகி, 6.கண்டிரம், 7.பலாகேரண்ட தைலம், 8.பஞ்சாக தைலம், 9.லசுநாகயேரண்ட தைலம், 10.உத்தம கரிநாடி தைலம், 11.ஸுக்ல ஸிகிரிதம், 12.பில்வாதி கிரிதம், 13.மண்டுகரவடிகம், 14.த்ரவத்தி, 15.விமலை, 16.ஸுநோரி, 17.தாம்ராதி, 18.வஜ்ரகல்பம், 19.கல்யாணலவனம், 20.புராணகிரிதம்.

திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் கல்வெட்டு | Image Credit BBC

இந்த மருந்துகளில் ஒன்றிரண்டு நீங்கலாக மீதமுள்ள அனைத்தும் தற்காலத்திலும் பயன்பாட்டில் உள்ளன. இந்த மருந்துகளைப் பற்றிய விரிவான குறிப்புகளும் அவை தீா்க்கும் நோய் பற்றிய விபரங்களும் “சரஹா் சம்ஹிதை” என்னும் ஆயுா்வேத நூலில் காணப்படுகின்றது. இதுபோல், சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோழர்கள் மிகச் சிறப்பாக ஆதுலர் சாலை என்று அழைக்கப்படக் கூடிய மருத்துவமனைகளை நடத்தி வந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகே கோயில் தேவராயன் பேட்டையில் உள்ள மத்தியபுரீஸ்வரர் திருக்கோவிலிலும், நன்னிலம் அருகே திருப்புகலூரில் உள்ள அக்னிபுரீஸ்வரர் திருக்கோவிலிலும் ஆதுலர் சாலை செயல்பட்டு வந்திருப்பதாக கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.” என்று வஞ்சியூர். க.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry