கடவுளுடனான தொடர்பை உருவாக்கிக்கொள்ள, தொடர்பை உணர பிரார்த்தனை செய்கிறோம்.(தேவைகளை நிறைவேற்றுமாறு செய்யும் பிரார்த்தனைகள், விரலுக்கு முத்தம் கொடுக்கும் பிரார்த்தனைகள் வேறு) பிரார்த்தனை செய்யும் போது ஒருவரது மூளைக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து பல ஆய்வுகள்(Neurotheology) நடத்தப்பட்டுள்ளன.
பிரார்த்தனையில் பல வகைகள் உள்ளன. அது ஒரு கணத்தின் அமைதியில் நிகழலாம், வார்த்தைகளற்றதாக இருக்கலாம். முன்னர் சொன்னதுபோல, பிரார்த்தனை, மூளை மற்றும் மனநலம் மூன்றுக்கும் உள்ள தொடர்பு என்ன? இவை மூன்றும் எப்போது ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும், அப்போது நிகழும் மாற்றங்கள் என்ன..?
நாம் பிரார்த்தனை செய்யத் தொடங்கும்போது மூளையின் முன்மடல் (ஃப்ரண்டல் லோப்) ஒளிர்கிறது. ஆழ்ந்த பிரார்த்தனையில் அதன் செயல்பாடு மீண்டும் குறைகிறது. அமெரிக்காவில் உள்ள நரம்பியல் விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க்,(Neuroscientist at the University of Pennsylvania and author of several books, including How God Changes Your Brain) பிரார்த்தனை செய்யும்போது மூளையின் பகுதிகள் செயல்படத் துவங்குவதை எம்ஆர்ஐ மூலம் கண்டறிந்துள்ளார். மந்திரம் அல்லது ஜெப வரிகளை ஜபிக்கும்போது மூளையின் முன்பகுதி அதாவது ஃப்ரண்டல் லோப் செயல்பட ஆரம்பிப்பதாக அவர் கூறுகிறார்.
மத மற்றும் ஆன்மீக நடைமுறைகளின் நரம்பியல் உடலியலைப் பார்க்க, ஒற்றை ஃபோட்டான் எமிஷன் கம்ப்யூட்டட் டோமோகிராபி (Single Photon Emission Computed Tomography (SPECT)) எனப்படும் மூளை இமேஜிங் தொழில்நுட்பத்தை நியூபெர்க் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் இரத்த ஓட்டத்தை அளவிட முடியும். மூளைப் பகுதியில் அதிக இரத்த ஓட்டம் இருந்தால், அது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். (சிவப்பு > மஞ்சள் > பச்சை > நீலம் > கருப்பு).
நாம் ஒரு செயலில் ஆழ்ந்த கவனம் செலுத்தும்போது மூளையின் முன் மடல் செயல்பட முனைகிறது. பிரார்த்தனையின் ஆழம் அதிகரிக்கும்போது மூளையின் முன் மடலின் செயல்பாடு குறைகிறது. பிரார்த்தனையின் ஆழம் மேலும் அதிகமாகும்போது, மூளையின் பின்பகுதியில் உள்ள பரைட்டல் லோபில் செயல்பாடு குறைவதற்கு வழிவகுக்கிறது என்று நியூபெர்க் கண்டறிந்துள்ளார். பரைட்டல் லோபில் செயல்பாடு குறைவது, ஆழ்ந்த பிரார்த்தனை செய்பவர்களால் வெளிப்படுத்தப்படும் ‘ஆழ்நிலை உணர்வுகளை’ விளக்குகிறது. அதாவது, நாம் தனிப்பட்ட சுய உணர்வை இழக்கிறோம்.
பிரார்த்தனை என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். முழுமையான மௌனம் அல்லது மந்த்ரா முறை பிரார்த்தனை மூலம் இது நிகழலாம். பிரார்த்தனை மீதான நம்பிக்கை என்பது நிச்சயமாக மத நம்பிக்கைக்கு உட்பட்டதே. இதில் மாறுபடுவோருக்கு கடவுளுடன் நெருக்கமான உறவை உருவாக்கிக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். பிரார்த்தனை செய்யும்போது தங்களைத் தாண்டிய ஏதோ ஒன்றின் அங்கமாக தாங்கள் இருப்பதாக பலரும் உணருகிறார்கள். தியானம் செய்பவர்களும் இதையே உணருகின்றனர். ஆழமான பிரார்த்தனையில் இருக்கும்போது, தனிப்பட்ட சுய உணர்வை இழப்பார்கள் அல்லது அந்த உணர்வை, கடவுளுடனான தொடர்பு என்று கருதுவார்கள் என நியூபெர்க் கூறுகிறார்.
பிரார்த்தனை மற்றும் ஒருமுகப்படுத்தல் ஆகிய இரண்டும் ஒரு நபரை அமைதிப்படுத்த உதவுகின்றன. மேலும் அவர்களால் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தையும் தூண்ட முடியும் என்று தியானம் மற்றும் ஒருமுகப்படுத்தல் நடைமுறைகளில் நிபுணரான டெஸ்ஸா வாட் விளக்குகிறார். ஒரு அச்சுறுத்தலை எதிர்கொள்ள உடலில் இருந்து விரைவான எதிர்வினைகள் தேவைப்படுகின்றன. அதை ஓர் அமைப்பு கட்டுப்படுத்துகிறது. மறுபுறம், உடலின் ‘ஓய்வு மற்றும் செரிமானம்’ தொடர்பான பணிகள் பாராசிம்பேடிக் அமைப்பால் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் பொருள் என்னவென்றால், ஆழ்ந்து பயிற்சி செய்வதன் மூலம் பதில் வினைகளை அமைதிப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் திறமையுள்ளவர்களாக ஆகிறீர்கள் என்று வாட் தெரிவித்துள்ளார்.
பிரார்த்தனைகள் கண்டிப்பாக பலனளிக்கும். ஆனால், வெவ்வேறு காரணிகளை குறிப்பாக, உணர்ச்சிப்பூர்வமாக கடவுளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் போன்றவற்றை கணக்கில் கொள்ள வேண்டும். மற்றவர்களை நீங்கள் எளிதில் நம்பமாட்டீர்கள் என்றால், பிரார்த்தனை உங்களுக்கு கடினமானதாக இருக்கும். குழந்தையாக இருக்கும்போது பெற்றோர் உள்ளிட்ட உறவுகளுடன் பேணப்படும் உறவு அல்லது அவர்கள் உங்களிடம் காட்டிய அன்புதான் எதிர்காலத்தில் உங்களது உறவுகளின் வகையை வரையறுக்கிறது.
இசையும் பிரார்த்தனைக்கு ஒப்பானதுதான். இசையானது மூளையின் முன் மடலில் செயல்பாட்டைக் குறைக்கிறது என்பதை சில ஆய்வுகள் காட்டுகின்றன. மிகவும் பயிற்சி பெற்ற இசைக்கலைஞர்கள் இசையின் ஆழத்திற்குள் செல்லும்போது தங்கள் மூளையின் முன் மடல்களின் செயல்பாட்டை மெதுவாக்குகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் ஆய்வுகளும் உள்ளன. கடவுள் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும், படைப்பாற்றல் என்பது பலருக்கு ஆழ்ந்த ஆன்மிகப் பயிற்சியாக இருக்கிறது.கடவுளுடன் பேசுவது அல்லது இசை கேட்பது போன்ற ஆழ்நிலை அனுபவங்கள் மூலம் நமது மூளையின் உணர்ச்சி மையங்கள் தூண்டப்படுகின்றன.
இறுதியாகப் பார்த்தோமேயானால், பிரார்த்தனை மிகவும் சக்தி வாய்ந்தது. அதில் ஆச்சரியம் இல்லை. ஆன்மிக நாட்டமுள்ளவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மந்த்ரா(தந்த்ரா, யந்த்ரா, மந்த்ரா முறைகள்) வல்லமைக்கு சாட்சியமாக இருந்து வருகின்றனர். இப்போது அறிவியலும் அதை நிரூபித்து வருகிறது. நரம்பியல் இறையியலாளர்கள்(Neurotheologist) மத மற்றும் ஆன்மிக அனுபவத்தின் பின்னால் மூளை செயல்பாடுகளை பல படிநிலைகளில் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். இதன் முடிவுகள் பிரமிக்க வைக்கின்றன. பிரார்த்தனை மற்றும் தியானத்தில் பல மணி நேரங்களை செலவிடும் மக்களின் மூளை வித்தியாசமானது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பிரார்த்தனை நம்பமுடியாத அளவிற்கு ஆரோக்கியமானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில், சரியான உணவை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்வதும் மூளையை புத்துணர்ச்சி பெற வைக்கிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry