உலகளவில், சுற்றுச்சூழல் நாளுக்குநாள் மோசமாகி வருகிறது. மனித சமுதாயத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பருவநிலை மாற்றம் உருவாகி, அதன் தாக்கங்களை பிற உயிரினங்களும் அனுபவிக்க நேரிடுகிறது. அந்த வகையில் உலகின் குப்பைத் தொட்டியாக கடல் மாறிக் கொண்டே இருக்கிறது. கடலில் எண்ணற்ற கழிவுகள் கலந்து வருவதால், கடல்வாழ் உயிரினங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான மூலங்களிலிருந்து பிளாஸ்டிக் கசிவு கடலில் கசிகிறது. பல நாடுகளில் முறையற்ற கழிவு மேலாண்மையுடன், அதிகரித்து வரும் பிளாஸ்டிக் நுகர்வு, பிளாஸ்டிக் மாசுபாட்டை உலகளாவிய பிரச்சினையாக மாற்றியுள்ளது, இது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, மனித ஆரோக்கியத்திற்கும், பொருளாதாரத்திற்கும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
Also Read : தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! Microplastics Found in Human Breast Milk!
மனிதர்கள் ஆண்டுதோறும் 400 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறார்கள். இது பூமியில் உள்ள அனைத்து மனிதர்களின் எடைக்கு நிகரானது. இதோடு நிற்கப்போவதில்லை, பிளாஸ்டிக் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 400 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக்கில் 0.5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே கடலில் கலக்கப்படுகிறது. இது குறைவான அளவு என நினைத்துவிட வேண்டாம். கிட்டத்தட்ட 1 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கு மேல் பிளாஸ்டிக்குகள் கடலில் கலப்பது என்பது கவலைக்குரியதே.
புயல் மற்றும் பிற கனமழை நிகழ்வுகளின் போது, நீர்வழிகளில் உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், ஆறுகள் மூலம் நிலத்திலிருந்து கடலுக்கு சென்று சேர்கின்றன. நடுத்தர வருமான நாடுகளில் உள்ள கடலோர நகரங்கள் உலகின் பிளாஸ்டிக் உமிழ்வு ஹாட்ஸ்பாட்களாக உள்ளன. பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் கழிவு மேலாண்மை உள்கட்டமைப்புகள் உலகம் முழுவதும் வேறுபடுகின்றன. 9% பிளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது, உலகளவில் சுமார் 22% பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுவதில்லை, முறையற்ற முறையில் அகற்றப்படுகின்றன அல்லது குப்பைகளாக கிடக்கின்றன.
தரவுகளின்படி, 2050-ம் ஆண்டுகளில் கடலில் உள்ள மொத்த மீன்களின் எடையைவிட, பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும். கடல் உணவுகள், குடிநீர், உணவு, காற்றின் மூலம் ஒரு சராசரி மனிதன் வாரந்தோறும் ஒரு கிரெடி கார்டு அளவிற்கு பிளாஸ்டிக் உட்கொள்கிறான் என்று தகவல் வெளியாகி உள்ளது.
2050-ம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த கடல் பறவை இனங்களில் 99% கடலில் உள்ள பிளாஸ்டிக்கை உட்கொண்டிருக்கும் என்று, ஓஷன் கிளீன்அப் (Ocean CleanUp) அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தான், பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் கடலை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. கடலை சுத்தம் செய்வது என்பது 2 வகையான நடவடிக்கைகளை உள்ளடக்கியது. ஒன்று, கடலில் ஏற்கெனவே இருக்கும் கழிவுகளை அகற்றுவது; மற்றொன்று கடலில் கழிவுகளை கொண்டு சேர்க்கும் நதிகளை தூய்மைப்படுத்துவது.
இந்நிலையில், இரண்டாவதாக உள்ள நதிகளை தூய்மைப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. நம் நாட்டில் உள்ள நதிகள், முக்கிய நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணியில், பாரத் கிளீன் ரிவர்ஸ் அறக்கட்டளை (BCRF), ஓஷன் கிளீன்அப் (Ocean CleanUp) ஆகிய அமைப்புகள் இணைந்துள்ளன. அதன் தொடக்கமாக மகாராஷ்டிராவின் மும்பையில் நீர்நிலைகளை தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை பெருநகரப் பிராந்தியத்தில் பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்கவும், புதிய திட்டங்களை உருவாக்கவும், DialESG மற்றும் West Coast Marine Yacht Services ஆகிய அமைப்புகள், பாரத் க்ளீன் ரிவர்ஸ் அறக்கட்டளைக்கு பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளன. இதுதொடர்பான ஒப்பந்தம், 2024 ஜனவரியில் கையெழுத்தாகின. ஒப்பந்த காலமான 10 ஆண்டுகளில், இந்தியா முழுவதும் உள்ள நதிகளில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் பாரத் கிளீன் ரிவர்ஸ் அறக்கட்டளையின் பணிகளில், ஓஷன் க்ளீன் அமைப்பின் பிளாஸ்டிக் கலப்பு தொடர்பாக ஆராய்ச்சிகளும் நிபுணத்துவமும் கைகொடுக்கும்.
ஓஷன் கிளீன் ஆராய்ச்சி தரவுகளின்படி, மாசுபட்ட 1,000 நதிகளில் 144 இந்தியாவில் உள்ளன. அதில் 47 மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கின்றன. அவற்றில் 13 நதிகள் மும்பை மற்றும் அதைச் சுற்றி இருக்கின்றன. பாரத் கிளீன் ரிவர்ஸ் அறக்கட்டளை கடல் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
இதன்மூலம், கழிமுகங்கள் பழைய நிலைக்கு திரும்புவதோடு, நிலையான மீன்பிடித்தலுக்கும் வழிவகுக்கும். கடலிலிருந்து பிளாஸ்டிக்கை ஒழிப்பதே தங்களது நோக்கம்; மிகவும் மாசுபடுத்தும் நதிகளிலிருந்து பெருங்கடல்களில் பிளாஸ்டிக் உமிழ்வைக் குறைப்பது அதில் ஒரு முக்கிய பகுதி என்கிறது பாரத் க்ளீன் ரிவர்ஸ் ஃபவுண்டேஷன். இந்த பூமியில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நதிகளை மாசுபடுத்துதல் இங்கு அதிகம். எனவே, அதை தூய்மைப்படுத்தும் பணியை இங்கு தொடங்குவது மிக அத்தியாவசியமானது; வரவேற்கத்தக்கது என்று சூழல் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
சூழலியலின் முக்கியத்துவத்தை கிராமங்கள் வரை கொண்டு செல்வதன் அவசியத்தை உணர்ந்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, கிராமப்புற தன்னார்வலர்களுக்கான பயிற்சி திட்டம் என்ற பெயரில் வரும் 27ந் தேதி சென்னையில் ஒரு நாள் முகாம் நடத்த உள்ளது. (விண்ணப்பிக்க: https://bit.ly/4cQPLXt) காலநிலை மாற்ற பாதிப்புகளை மட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டாலும் உள்ளூர் மக்களை ஈடுபடுத்துவது மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது.
இந்நிலையில் கிராமப்புற தன்னார்வலர்களுக்கான காலநிலை பயிற்சி திட்டத்தை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வடிவமைத்துள்ளது. இந்த பயிற்சி திட்டமானது, கிராமங்களில் காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட ஆர்வமுள்ள தன்னார்வலர்க்கு திறனை மேம்படுத்துவதற்க்காக நடத்தப்படும் ஒரு நாள் பயிற்சி திட்டமாகும். அனுபவம் வாய்ந்த காலநிலை ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்களின் உதவியுடன், உள்ளூர் காலநிலை பிரச்சினைகளை ஆராய்ந்து, அப்பிரச்சனைக்கான நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகளை மேற்கொள்வதற்கான நோக்கமே இந்தப் பயிற்சி திட்டம் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த பொறியாளர் பிரபாகரன் வீர அரசு.
Summary :
அடுத்த 10 ஆண்டுகளில் பிளாஸ்டிக் உற்பத்தி 40% அதிகரிக்கும். பிளாஸ்டிக் சூப் (The plastic soup refers to the litter floating in the oceans and affecting the marine life, the environment and our health) தொடர்பாக நாம் எதுவும் செய்யாவிட்டால், 2050 ஆம் ஆண்டில் கடல்கள் மீன்களின் எடையைவிட பிளாஸ்டிக் அதிகாமாக இருக்கும். கடல்வாழ் உயிரினங்கள் மீள முடியாத அளவிற்கு அழிக்கப்படும். பவளப்பாறைகள் பிளாஸ்டிக் மாசுபாட்டால் பாதிக்கப்டுகிறது. பிளாஸ்டிக் சூப் மில்லியன் கணக்கான மக்களின் உணவு விநியோகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry With Input Vikatan.