ஜீன்ஸ் பேன்ட் வரலாறு! தொழிலாளர்களின் ஆடை பணக்காரர்களின் உடை ஆனது எப்படி? சின்னஞ்சிறிய பாக்கெட்டின் பின்னணி!

0
38
Jeans evolved from being sturdy workwear to becoming a global fashion staple. Originally designed for labourers, jeans have transformed through the ages into an essential part of modern style. Getty Image.

ஜீன்ஸ் பேன்ட்கள், பணக்காரர்களுக்கும் சமூகத்தில் உச்சத்தில் இருக்கும் மனிதர்களுக்கும் தயாரிக்கப்பட்டது அல்ல. ஆனால் இன்று சமூக அந்தஸ்து, பாலினம் என எந்தவித வேறுபாடுமின்றி அனைத்து தரப்பினரும் ஜீன்ஸ் பேன்ட்டை விரும்பி அணிகிறார்கள். ஜீன்ஸ் பேன்ட் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? முதன்முதலில் ஜீன்ஸ் பேன்ட்கள் யாருக்கு தைக்கப்பட்டது? அது எப்படி உலகம் முழுக்க பிரபலமானது?

டென்ட் கொட்டகைகள், கம்பளிப் போர்வை போன்றவைகளை தைத்துக் கொடுக்கும் ஒரு சாதாரண தையல்காரர் தான் ஜேகப் டேவிஸ் (Jacob Davis). இவர் அமெரிக்காவில் உள்ள நெவாடா மாகாணம் ரெனோ என்கிற ஊரில் ஒரு தையல் கடையை நடத்தி வந்தார். 1873 மே மாதம், உள்ளூரில் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஒருவரின் மனைவி, தையல்காரர் ஜேகப்பிடம் ஒரு வித்தியாசமான கோரிக்கையோடு வந்தார்.

Also Read : ஆடைகளில் உள்ள கறைகளை நீக்க சூப்பர் டிப்ஸ்! துணியை நினைத்து இனி வேண்டாம் கவலை!

“என் புருஷனுக்கு ஒரு ஜோடி பேன்ட் தச்சி கொடுங்க. அந்த பேண்ட் எளிதில் கிழியக் கூடாது. என் புருஷன் கடுமையாக உழைக்கக் கூடிய தொழிலாளிங்குறதால, அந்த அளவுக்கு பேன்ட்டும் கடுமையா உழைக்கணும்” என்று கேட்டுக்கொண்டார். அந்தப் பெண்மணியின் கோரிக்கை ஜேகப்பை சிந்திக்க வைத்தது. அப்போது டெனிம் என்கிற துணியை வியாபாரம் செய்துவந்த லெவி ஸ்ட்ராஸ் அன்ட் கோ (Levi Strauss & Co) நிறுவனத்திலிருந்து துணியை வாங்கினார். (டெனிம் என்பது ஜீன்ஸ் தயாரிக்கப் பயன்படும் ஒரு ட்வில் பருத்தி துணி ஆகும். இது பிரெஞ்சு நகரமான நைம்ஸில் கண்டுபிடிக்கப்பட்டது. டெனிம் முன்பு செர்ஜ் டி நிம்ஸ் என்று அழைக்கப்பட்டது.)

Jacob Davis & Levi Strauss

எந்த பகுதி எல்லாம் எளிதில் கிழிந்துவிடும் என்று தோன்றுகிறதோ அந்த இடங்களில் எல்லாம் இரும்பு ரிவிட்டுகளைப் பயன்படுத்தினார். உதாரணத்துக்கு பேண்டிலுள்ள பாக்கெட்டுகளை குறிப்பிடலாம். தையல்காரர் ஜேகப் டேவிஸ் கருதியது போலவே, அவர் தைத்த பேண்ட் பல்வேறு கடினமான சூழ்நிலைகளை தாண்டியும் உறுதியாக நின்றது. உலகப் புகழ்பெற்ற ஜீன்ஸ் பேன்ட் அனாயாசமாகப் பிறந்தது. சுரங்கத்தில் கடின வேலை பார்க்கும் தொழிலாளிகளின் சீருடையாக ஜீன்ஸ் மாறியது.

தொடக்கத்தில் டெனிம் துணிகளில் ஜீன்ஸ் பேன்ட் தைக்கப்பட்டாலும், காலப்போக்கில் இத்தாலியில் ஜெனோவா (Genoa) என்கிற நகரத்தில் விளைந்த பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஜெனெ (Gene) துணிகளில் தொழிலாளிகள் பயன்படுத்தும் ரஃப் & டஃப் பேன்ட்டுகள் தயாரிக்கப்பட்டன. எனவே, காலப்போக்கில் ஜெனேவிலிருந்து தயாரிக்கப்பட்ட பேன்ட்டுகள், ஜீன்ஸ் பேன்ட்டுகள் என்று அழைக்கப்படத் தொடங்கின.

Getty Image

தன்னுடைய உறுதியான பேன்ட்டுகள் சந்தையில் சக்கை போடு போடும் என்று நம்பிய தையல்காரர் ஜேகப் டேவிஸ், டெனிம் துணிகளை விற்று வந்த லெவி ஸ்ட்ராஸ் என்பவரோடு இணைந்து 1873 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி ஆண்கள் வேலைக்காக பயன்படுத்தும் பேன்ட்டில் ரிவிட்டுகளைப் பயன்படுத்தி தயாரிக்கும் செயல் முறைக்கு காப்புரிமைப் பெற்றார். இன்றுவரை உலக ஜீன்ஸ் ரசிகர்களால் மே 20ம் தேதி ஜீன்ஸின் பிறந்த நாளாக கருதப்பட்டு வருவதாக, லெவி ஸ்ட்ராஸ் அண்ட் கோ வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.

Late 1800’s Levi advertisement.

ஒரு துணியை எடுத்துக் கொண்டால் அதில் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் நூல் இழைகள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். டெனிம் துணி வகைகளில் செங்குத்தாக இருக்கும் நூல்களில் ஒன்று இண்டிகோ வண்ணத்தால் சாயம் ஏற்றப்பட்டதாகவும் மற்றொன்று வெள்ளை நிறத்தில் அல்லது வேறு ஏதாவது ஒரு நிறத்தில் இருந்தது. எனவே பொதுவாக அப்போது டெனிம் துணிகள் நீல நிறத்தில் வந்தன. எனவே தொடக்க காலத்தில் நீலநிறத்தில் இருந்த ஜீன்ஸ்கள் பிரபலமாக, இன்றுவரை ஜீன்ஸ் என்றால் நீல நிறம் தான் என்பது போல மனதில் பதிந்து விட்டது.

முன்பே கூறியது போல ஜீன்ஸ் பேன்ட் கடுமையான உடல் பணிகளைச் செய்யும் சுரங்கப் பணி ஊழியர்கள் போன்ற தொழிலாளிகளின் ஆடையாக மட்டுமே இருந்தது. இந்த உறுதியான கால்சட்டை மெல்ல பலதரப்பட்ட மக்களிடம் பரவத் தொடங்கியது. மறு பக்கம், ஜீன்ஸ் பேன்ட் குறித்து என்னவென்று தெரியாத மக்கள் மத்தியிலும் ஹாலிவுட் ஃபேஷன் என்கிற பெயரில் பிரபலமானது.

1930கள் வரைக்கும் ஜீன்ஸ் பேண்ட், வேலைக்கான ஆடை மட்டுமே. குறிப்பாக சுரங்கத் தொழிலாளிகள், மாடுகளை மேய்க்கும் கௌபாய்கள் மற்றும் இதர தொழிலாளிகளின் உடையாக அது பயன்பட்டது. பிறகு ஹாலிவுட் ஸ்டூடியோக்களின் “வெஸ்ட்டர்ன்” எனப்படும் கௌபாய் படங்களின் நாயகர்கள் ஜீன்ஸ் பேண்டை அணியத் துவங்கினர். 1953ஆம் ஆண்டு வெளியான ‘தி வைல்ட் ஒன்’ என்கிற படத்தில் அமெரிக்காவின் பிரபல நடிகர் மார்லன் பிராண்டோ படம் முழுக்க ஜீன்ஸ் பேண்டில் வலம் வந்தார்.

Farmers wearing denim jeans in the 1930’s.

1955 ஆம் ஆண்டு ‘Rebel without a Cause’ என்கிற படத்தில் ஜேம்ஸ் டீன், ஜீன்ஸ் பேண்ட் அணிந்து நடித்தார். ஹாலிவுட் மூலம் ஆண்கள் அனைவரும் ஜீன்ஸ் ஜுரம் பிடித்து அலைந்தனர். 1961 ஆம் ஆண்டு ‘தி மிஸ்ஃபிட்ஸ்’ என்கிற படத்தில் ஜீன்ஸ் பேன்ட்டில் வலம் வந்து பெண்களை பெருவாரியாக ஈர்த்தார் மர்லின் மன்றோ. ஜீன்ஸ் பேன்ட் உலகுக்கு பெண்களை அழைத்து வந்த பெருமை நடிகை மர்லின் மன்றோவையே சேரும். 1960களில், தி பீட்டில்ஸ் இசைக்குழுவினர் தொடர்ந்து ஜீன்ஸ் அணிந்து, ஜீன்ஸ் பேன்ட்டுக்கு இலவச விளம்பரம் செய்தனர்.

ஆரம்பத்தில் லீவைஸ் நிறுவனம் ஜீன்ஸ் பேண்டின் வெளிப்புறத்தில் Levi’s® எனும் தனது முத்திரையை சிவப்பு பட்டையில் பதித்து வெளியிட்டது. இன்றுவரை இந்த முத்திரையை லீவைஸ் ஜீன்ஸ் பேண்டின் பின்புறத்தில் பல வண்ணங்களில் நீங்கள் காணலாம். இளையோர் விரும்பும் ஜீன்ஸ் உடைகளை 1980களில் கால்வின் கிளின், ஜோர்டாச் மற்றும் குளோரியா வாண்டர்பில்ட் உள்ளிட்ட பிராண்டுகள் தயாரித்தன. ஸ்டோன் வாஷ், ஆசிட் வாஷ், கிழிந்த ஜீன்ஸ், கணுக்கால் தெரியும் படியான ஜீன்ஸ் என்று பல வகைகள் தயாரிக்கப்பட்டன.

Close-up image of Levi’s red branding label. Levi Strauss is one of the world’s oldest and most well known jeans manufacturers. Getty Image.

ஜீன்ஸ் பேன்ட்டின் பாக்கெட்டிற்குள் ஒரு சிறிய பாக்கெட் தைக்கப்பட்டிருக்கும். தொழிலாளர்களுக்காக ஜீன்ஸ் பேன்ட் தைக்கப்பட்டபோது, அவர்கள் பணியின்போது கைக் கடிகாரம் அணிந்தால் அது சேதமானது. எனவே கடிகாரத்தை வைத்துக்கொள்வதற்காக அந்த சிறிய பாக்கெட் தைக்கப்பட்டது. அந்த டிசைன் தற்போதும் நீடிக்கிறது.

Getty Image

பல தசாப்த காலமாக பிரபலமடைந்த ஜீன்ஸ் ஆடைகள், 21ஆம் நூற்றாண்டில் பலதரப்பு மக்களின் அன்றாட ஆடைகளில் ஒன்றாகிப் போய்விட்டது. இன்று ஏழையோ, பணக்காரனோ, உலகத்தின் எந்தக் கண்டத்தில் வாழ்பவராக இருந்தாலும் குறைந்தபட்சமாக ஜீன்ஸ் பயன்களை குறித்து அறிந்திருப்பர் என உறுதியாக கூறலாம்.

19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஜீன்ஸ் பேன்ட் என்பது கரடுமுரடான வேலை பார்க்கும் தொழிலாளிகளின் உடையாக மட்டுமே இருந்தது. இன்று அது நவநாகரீக சின்னமாக அனைவருக்குமான உடையாக மாறிவிட்டது. அதற்கு சமூகவியல், அரசியல், பாப் கலாச்சாரம் என பல காரணங்கள் இருக்கின்றன. இந்த மாற்றத்திற்காக வரலாறு எடுத்துக் கொண்ட ஆண்டுகள் 150.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry