
மதிய வேளையில் சீக்கிரமா சமையலை முடிக்கனுமா? வீட்டில் தயிரும், பூண்டும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் 5 நிமிடத்தில் குழம்பு செய்யலாம். முக்கியமாக இந்தக் குழம்பு, சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- பூண்டு – 20 பல்
- உப்பு – சிறிது
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- சீரகத் தூள் -1/4 டீஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் – சிறிது
- கறிவேப்பிலை – 1 கொத்து
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- கெட்டித் தயிர் – 200 மிலி
- உப்பு – சுவைக்கேற்ப
பூண்டு மோர் குழம்பு செய்முறை:
- முதலில் இடி உரலில் பூண்டு பற்களை சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
- தட்டிய பூண்டு பற்களை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள், சீரகத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
- அதன் பின் தட்டி வைத்துள்ள பூண்டு கலவையை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் 200 மிலி தயிரை எடுத்து, சிறிது நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி அடித்துக் கொள்ள வேண்டும்.
- அந்த தயிரை வதக்கி வைத்துள்ள பூண்டுடன் சேர்த்து கலந்து, உப்பு சுவை பார்த்தால், சுவையான பூண்டு மோர் குழம்பு தயார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry