இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி அபாரமாகக் கைப்பற்றிய நிலையில், கேப்டனாக இருக்க விரும்பவில்லை என்று சூர்யகுமார் யாதவ் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய டி20 அணிக்கு முழுநேர கேப்டன் பொறுப்பை ஏற்ற சூர்யகுமார் யாதவுக்கு(ரசிகர்களால் செல்லமாக SKY என அழைக்கப்படுகிறார்) முதல் தொடர் வெற்றி இதுவாகும். அது மட்டுமல்லாமல் புதிய தலைமைப் பயிற்சியாளராக வந்துள்ள கெளதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி வெளிநாட்டில் வென்ற முதல் டி20 தொடர் இதுவாகும். இந்திய அணி குறைந்த ஸ்கோர் எடுத்திருந்த போதிலும் வெற்றிகரமாக அதை டிஃபெண்ட் செய்துள்ளது. இந்திய அணியின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல், கடந்த 2 போட்டிகளைப் போன்றே, இந்த ஆட்டத்திலும் இலங்கை அணி நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்கள் திணறினர்.
ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ் இருவரும் முன்னெப்போதும் இல்லாமல் முதல்முறையாக கடைசிக் கட்டத்தில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினர். இதனால், ஆட்டம் டையில் முடிந்தது. சூப்பர் ஓவரிலாவது இலங்கை சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 2 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கவே இந்திய அணி தொடரை கைப்பற்றியது. 3 போட்டிகளில் 92 ரன்களும், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால் தொடர் நாயகனாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரை எந்த சர்வதேச டி20 போட்டியிலும் பந்துவீசாத சூர்யகுமார் இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரை வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
முதல் தொடரிலேயே முத்திரை பதித்த சூர்யகுமார் யாதவ், “இந்த ஆடுகளத்தில் 140 ரன்களே வெற்றிக்கான ஸ்கோர்தான். பேட்டிங்கிலும் கடைசி வரிசைவரை எங்கள் வீரர்கள் சிறப்பானவர்கள் என்பதை நிரூபித்தனர். இதுபோன்ற ஆட்டங்களை பார்த்திருக்கிறேன். முழுமனது வைத்து கடைசி வரை போராடினால் ஆட்டத்தை திருப்ப முடியும் என்று சக வீரர்களிடம் கூறினேன்.
அதிகமான திறமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் அனைத்தையும் எளிதாக்க முடியும். ஒவ்வொரு வீரரும் சக வீரரை கவனித்துக் கொண்டதும், உதவியதும் நம்ப முடியாததாக இருந்தது. நான் பேட் செய்ய வந்தபோது எனக்கு சற்று அழுத்தம் இருந்தாலும், என்னை மட்டுமே வெளிப்படுத்தினேன். என் பணியை சக வீரர்கள் எளிதாக்கினர். நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை, தலைவனாக இருக்கவே விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry