ரஷ்யாவில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி! சலுகை விலையில் பெற இந்தியா முயற்சி!

0
204

உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்தது. மலேசியோ, இந்தோனேசியா என பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

பாமாயிலை அதிகளவு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடான இந்தோனேசியா, உள்நாட்டில் அதிகரித்து வரும் பாமாயிலின் விலையை கட்டுப்படுத்த ஏப்ரல் 28 அன்று ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

இதன் பாதிப்பு இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலும் கடுமையாக எதிரொலிக்கிறது. பெருமளவு பாமாயில் இறக்குமதி செய்யும் நாடான இந்தியா இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும் இந்தோனேசிய பாமாயிலுக்கு மாற்றாக வேறு பல நாடுகளில் இருந்து இந்தியா சமையல் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. மலேசியா, தாய்லாந்து மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகஅளவு பாமாயில் இறக்குமதியாகியுள்ளது.

இதன் மூலம் கடந்த மே மாதத்தில் ஏழு மாதங்களில் மிக அதிகமாகவும், ஏப்ரல் மாதத்தில் 15% அதிகமாகவும் பாமாயில் இறக்குமதி இருந்துள்ளது. உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, மலேசியாவில் இருந்து அதிகமாக கொள்முதல் செய்துள்ளது.

மே 23 முதல் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க இந்தோனேசியா அனுமதித்துள்ளது. ஆனால் உள்நாட்டு விநியோகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கினாலும் மலேசியா கடும் போட்டியை அளித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க சோயா எண்ணெய் இறக்குமதி ஏப்ரல் மாதத்தில் 315,853 டன்னிலிருந்து 352,614 டன்னாக உயர்ந்துள்ளது. வரவிருக்கும் மாதங்களில் இது மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியும் மே மாதத்தில் 67,788 டன்னிலிருந்து 123,970 டன்னாக உயர்ந்துள்ளது. அர்ஜென்டினா மற்றும் பிரேசில் ஆகிய வற்றிலிருந்து சோயா எண்ணெயையும், ரஷ்யாவிலிருந்து சூரியகாந்தி எண்ணெயையும் இந்தியா வாங்கியுள்ளதாக தெரிகிறது. அதுவும் குறிப்பாக ரஷ்யாவில் இருந்து அதிகமான சூரிய காந்தி எண்ணெய் இறக்குமதிக்கு வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் 45,000 டன் ரஷ்ய சூரியகாந்தி எண்ணெய் இந்தியா வந்துள்ளது. தொடர்ந்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வருவதால் வரும் நாட்களில் இறக்குமதி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெயை போலவே சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் சலுகைகளைப் பெற ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆகஸ்ட் 31 வரை ரஷ்யா சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதிக்கு சிறப்பு சலுகை விலைகளைப் பெற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஏனெனில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி ஆகஸ்ட் 31 வரை 1.5 மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சூரியகாந்தி எண்ணெயின் தேவை குறித்து இந்திய முன்பே ரஷ்யாவிடம் தெரிவித்திருந்தது. ஆனால் உக்ரைனுடனான போர் காரணமாக அந்த பேச்சுவார்த்தை மேற்கொண்டு நடைபெறவில்லை. தற்போது கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் அதனைத் தொடர்ந்து சூரிய காந்தி எண்ணெய் பெறுவதிலும் சலுகைகளை இந்தியா எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. தற்போது தடையை தாண்டி சமையலுக்கு பயன்படும் சூரிய காந்தி எண்ணெயும் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry