பிரிட்டன் பிரதமர் பதவிக்கு நாராயணமூர்த்தி மருமகன் போட்டி! டிவிட்டர் பிரச்சாரத்தை தொடங்கினார் ரிஷி!

0
267

பிரிட்டனில் அமைச்சர்கள் 40-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்து, இதற்கு முன் இல்லாத வகையில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Boris Johnson, Rishi Sunak

கன்சர்வேட்டிவ் (பழமைவாத) கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் அவர், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை காபந்து அரசை நிர்வகிப்பார். இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போட்டியில் தானும் உள்ளதாகக் கூறி, அதற்கான அறிவிப்பை ரிஷி சுனக் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

“நான் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்காகப் போட்டியிடுகிறேன். நாம் நம்பிக்கையை மீட்டெடுப்போம். பொருளாதாரத்தை மீள் கட்டமைப்போம். நாட்டை மீண்டும் ஒன்றுபடுத்துவோம்” என்று டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவுடன் 3 நிமிட வீடியோ ஒன்றும் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் ரிஷி சுனக், அவரது பெறோர் எப்படி தங்களை நிரூபிக்க போராடினார்கள், எப்படி திருமணம் செய்து கொண்டனர், எப்படி பிரிட்டன் நல்லதொரு எதிர்காலத்தை அவர்களுக்கு உறுதி செய்தது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

ரிச்மாண்ட் தொகுதி எம்.பி.யான ரிஷி சுனக், “இந்தத் தருணத்தைப் பற்றிக் கொண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும். அதனால்தான் நான் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமர் போட்டியில் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Rishi Sunak and Akshata Murthy

‘டிசி’ என செல்லமாக அழைக்கப்படும் ரிஷி சுனக்கின் தாத்தா, பாட்டி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்திதான், ரிஷி சுனக்கின் மனைவி. இருவரும் கலிபோர்னியாவில் படித்தவர்கள் ஆவர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry