
திருவண்ணாமலை, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் (Geological Survey of India) தெரிவித்தது. ஆனால், அது இரு தனித்தனி பகுதிகள் இல்லையென்றும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதி என்றும் புவிவியல் ஆய்வு நிறுவனத்தின் தென் மண்டல இயக்குநர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் 175வது ஆண்டு விழா சென்னையில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் கடந்த 4ந் தேதி நடைபெற்றது. விழாவில் பேசிய அந்நிறுவன இயக்குநர் எஸ்.பி. விஜயகுமார் “திருவண்ணாமலை ராஜபாளையம் பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. அதேபோல, மின்கலங்கள் தயாரிக்கப் பயன்படும் லித்தியம் என்ற கனிமமும் தமிழக நிலப்பரப்பில் இருக்கின்றன,” என்றார்.

தமிழ்நாட்டில் தங்கம், லித்தியம் உள்ளதா?
இது குறித்து பிபிசியிடம் பேசிய இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் தமிழ்நாடு, புதுச்சேரிக்கான தென் மண்டல இயக்குநர் எஸ்.பி. விஜயகுமார், தான் சொன்ன தகவல்கள் அளவுக்கு அதிகமாகப் பெரிதுபடுத்தப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.
அந்த விழாவில் பேசும்போது, “இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம்தான் இந்தியாவில் பூமிக்கு அடியில் உள்ள கனிமங்களைத் தனது ஆய்வுகளின் மூலம் அறிந்து சொல்கிறது என்று குறிப்பிட்டேன். தமிழ்நாட்டில் தங்கம் சில இடங்களில் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தேன். அது மிகவும் பெரிதுபடுத்தப்பட்டு விட்டது.
இந்தச் செய்தியைப் படித்த பலரும் திருவண்ணாமலை மாவட்டத்திலும், ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்) பகுதியிலும் தங்கம் கிடைப்பதாகப் புரிந்துகொண்டனர். ஆனால், இங்கு குறிப்பிடப்படும் ராஜபாளையம் என்பது திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் வட்டத்துக்கு உள்பட்ட கட்டமடுவு ஊராட்சிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம்.
Also Read : மூக்கை சிந்துவதில்கூட இவ்வளவு பிரச்சனை இருக்கா..? Dangers of Forceful Nose Blowing!
கடந்த 2022-23இல் திருவண்ணாமலை மாவட்டம் ராஜபாளையத்தில் இரும்புடன் சேர்த்து தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வை நிலவியலாளர்களான ஆர். ராம்பிரசாத், சுபா ராய் ஆகியோர் மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் 2024 பிப்ரவரியில் வெளியிடப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகளில்தான், அந்தப் பகுதிகளில் தங்கம் இருப்பது தெரிய வந்தது.” என்றார்.
திருவண்ணாமலையில் உள்ள ராஜபாளையத்தில் எளிதாகப் பிரித்து எடுக்கக்கூடிய வகையிலான தங்கமாக, பிற உலோகங்களுடன் கலந்து என இரு வகைகளில் தங்கம் கிடைக்கிறது. இந்த தங்கத் தாதுக்கள் பெரும்பாலும் இரும்புக் கல் எனப்படும் Banded Magnetite Quartzite (BMQ) பாறைகளிலேயே கிடைக்கின்றன. சில இடங்களில் வேறு உலோகங்களுடன் கலந்தும் கிடைக்கின்றன.

பொதுவாக தங்கச் சுரங்கங்கள் லாபகரமாக இருக்க வேண்டுமெனில், தோண்டி எடுக்கப்படும் தாதுக்களில் 500ppb (parts per billion) அளவுக்கு தங்கம் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு தங்கத் தாதுக்கள், அதாவது 554ppb – 24,293ppb தரமுள்ள தங்கத் தாதுக்கள் கிடைக்கக்கூடிய இடங்கள் ராஜபாளையம் பகுதியில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. இங்கு ஒட்டுமொத்தமாக 3.2 டன் அளவுக்குத் தங்கம் கிடைக்கலாம். ஆனால், இதை உறுதி செய்ய மேலும் சில ஆய்வுகளைச் செய்ய வேண்டும்.
‘ஆறுகளிலேயே கிடைக்கும் தங்கம்’
தமிழ்நாட்டின் சில இடங்களில் தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவற்றை எடுப்பது பொருளாதார ரீதியில் பலனளிக்குமா என்பதில்தான் அதன் முக்கியத்துவம் இருக்கும் என்று எஸ்.பி. விஜயகுமார் கூறுகிறார். பல இடங்களில் தங்கத்தைத் தோண்டியெடுத்து அவற்றைச் சுத்திகரிக்கும் செலவு, தங்கத்தின் மதிப்பைவிட அதிகமாக இருக்கும். அம்மாதிரி இடங்களில் யாரும் தங்கத்தை எடுக்க மாட்டார்கள்.
“கோலார் தங்க வயல் பகுதியில் இன்னும் தங்கம் கிடைக்கும். ஆனால், வெளியில் ஒரு கிராம் தங்கத்தை வாங்க செலவு செய்யும் தொகையைவிட அங்கு தங்கம் எடுக்க அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால்தான் அங்கிருக்கும் தங்க வயல் கைவிடப்பட்டது.
ஆகவே ஓரிடத்தில் தங்கம் கிடைக்கிறதா என்பது முக்கியமல்ல. மாறாக, அதை எடுப்பது லாபகரமாக இருக்குமா என்பதுதான் மிகவும் முக்கியம். அதற்குச் சில இடங்களில் வாய்ப்புள்ளது. அங்கு தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்” என்று விஜயகுமார் விளக்கினார்.
“நான் இயக்குநர் ஜெனரலாக இருக்கும்போது இந்தப் பகுதிக்குச் சென்றுள்ளேன். அப்போது அங்குள்ள ஆறுகளிலேயே சிலர் சலித்து தங்கத் தாதுக்களை பிரிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆகவே, தங்கம் கிடைக்க வாய்ப்புள்ள பகுதிதான் அது. கூடுதல் ஆய்வுகளில் இதை உறுதி செய்ய வேண்டும்” என்றார் இந்திய நிலவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஜெனரலான எஸ். ராஜு.
Also Read : உஷார்..! நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்! புளூடூத் ஹெட்போன் பயன்படுத்துவது பாதுகாப்பானதா..?
தமிழ்நாட்டில் லித்தியம் கிடைக்க வாய்ப்புள்ளதா?
தமிழ்நாட்டில் லித்தியம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று எஸ்.பி. விஜயகுமாரிடம் கேட்டபோது, “லித்தியம் தற்போது மிக முக்கியமான உலோகம் என்ற மதிப்பைப் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் லித்தியம் கிடைக்கிறதா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதுபோல தமிழ்நாட்டிலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதில் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை,” என்று தெரிவித்தார்.
Image Source : Getty Image. Input : BBC
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry