பாலஸ்தீனத்தின் காசா முனைப் பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிக் குழுக்கள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக போர் தொடங்கியதாக இஸ்ரேல் அறிவித்தது.
காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழியாக 7-வது நாளாக இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமானதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்தச் சூழலில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்த உள்ளது. இந்தப் போரினால் காசாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இந்நிலையில் வியாழக்கிழமை பின்னிரவு நிலவரப்படி காசா பகுதியில் இருந்து 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா.வின் அங்கமான, மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (Office for the Coordination of Humanitarian Affairs) அறிக்கை வெளியிட்டுள்ளது. காசா பகுதியில் குடியிருப்புகள், பள்ளிகள், மசூதிகள், மருத்துவமனைகள் என எதையும் விட்டுவைக்காமல் இஸ்ரேலியப் படைகள் தாக்கிவருகின்றன. 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலில் குடியிருப்புப் பகுதிகள் பல சேதமடைந்துள்ளன. உயிருக்கு அஞ்சி லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர்.
Also Read : இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சனையின் பின்னணி! ஹமாஸ் இயக்கம் தோன்றிய வரலாறு! The Israeli-Palestinian conflict!
கடைசித் தகவலின்படி காசாவிலிருந்து 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.
காசாவில் இருந்து இதுவரை வெளியேறியவர்களில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாலஸ்தீனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஐ.நா.வின் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 27 ஆயிரம் பேர் பாலஸ்தீன அரசு ஏற்படுத்தியுள்ள நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். சுமார் 1.50 லட்சம் பேர் காசாவின் தெற்கில் மைதானங்களில், பொது கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 752 குடியிருப்புக் கட்டிடங்களும், பிற கட்டிடங்களும் தரைமட்டமாகியுள்ளன. 1948-க்குப் பின்னர் இதுவே இந்தப் பிராந்தியத்தின் மிக மோசமான தாக்குதலாகும் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் தண்ணீர், சுகாதார வசதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் தொடங்கியதிலிருந்து இப்போது வரை அங்கே 6 கிணறுகள், 3 நீரேற்று நிலையங்கள், ஒரு தண்ணீர் ஊற்று மற்றும் ஒரு நீர் சத்திகரிப்பு நிலையம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீர் வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே உணவு, நீர், எரிபொருள் போன்றவற்றை காஸா பகுதிக்குள் அனுப்ப இஸ்ரேல் தடை விதித்திருக்கிறது. மேலும் காசாவுக்கான மின்சாரம், எரிவாயு, மருந்து பொருட்கள் போன்ற அடிப்படை தேவைகளையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. 50000 கர்ப்பிணி பெண்கள் காஸா பகுதிக்குள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி சிரமப்படுவதாக ஐ.நா. அறிவித்திருக்கிறது.
Also Read : டெங்கு காய்ச்சலுக்கு ஏற்ற மருத்துவம் எது? Medicine & Treatment for Dengue Fever!
காசாவில் தீவிர தாக்குதல் பகுதிகளில் 11 லட்சம் பேர் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களை உடனடியாக மீட்காவிட்டால் அத்தனை பேரும் பட்டினியாலேயே உயிரிழக்க நேரிடும் என்றும் ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது. இதுவரை இருதரப்பிலும் அப்பாவி மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 2,400-ஐ தாண்டியுள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் நுக்பா படைகளின் இருப்பிடங்களை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இவர்கள்தான் கடந்த வாரம் ராக்கெட்குண்டு தாக்குதல் நடத்தியவர்கள்.
இந்நிலையில், இன்னும் 24 மணி நேரத்தில் வாடி காஸா பகுதியிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் வெளியேற வேண்டுமென இஸ்ரேல் அரசு அறிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளுடன் வடக்கு காஸா ஸ்டிரிப்பில் 10 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்கள் வசித்து வருகிறார்கள்.
பள்ளிகள், மருத்துவமைகளில் ஐக்கிய நாடுகள் சபை சார்பாக தங்கவைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன மக்களையும் அப்புறப்படுத்துமாறு இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. 24 மணி நேரத்திற்குள் எப்படி 11 லட்சம் மக்களை வேறு இடத்துக்கு அனுப்ப முடியும் இஸ்ரேலிடம் ஐ.நா. அமைப்பு கேள்வி எழுப்பியிருப்பதுடன், அவகாசம் தருமாறும் கோரியுள்ளது. இஸ்ரேலிய அரசு காஸாவில் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இந்தப் பகுதிகளில் தரை வழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டிருக்கிறது.
காசா எல்லை அருகே முகாமில் நுழைந்த இஸ்ரேல் ராணுவம், அதிரடி துப்பாக்கிச்சூடு நடத்தி அங்கு பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 250 இஸ்ரேலியர்களை உயிருடன் மீட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் எரிசக்தி துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடத்தப்பட்டுள்ள அனைத்து இஸ்ரேலியர்களும் திரும்பும் வரை காசாவுக்கு மனிதாபிமான உதவி கிடைக்காது என்றும், மின்சாரம் சுவிட்ச் ஆன் செய்யப்படாது, குழாய்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது, எரிபொருள் டிரக் நுழைய முடியாது என தெரிவித்துள்ளார்.
காசா பகுதி முழுவதும் ஹமாஸ் அமைப்பின் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதுவரை 4 ஆயிரம் டன் எடையிலான 6 ஆயிரம் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதில், ஹமாஸ் அமைப்பினரின் 3 ஆயிரத்து 600 இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வரும் ரகசிய சுரங்கப்பாதைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் குழுவினருக்கு எதிரான வேட்டை என்ற பெயரில், அப்பாவி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் படைகள் குண்டுகளை வீசுகின்றன.
⚡️Supposedly from the airstrikes on Gaza tonight pic.twitter.com/yk0WoyZT9A
— War Monitor (@WarMonitors) October 12, 2023
காஸாவில் இஸ்ரேல் அரசு தரைவழி தாக்குதல் நடத்த முற்பட்டால், அதை தங்களால் திறம்பட தடுக்க முடியும் என ஹமாஸ் ஏற்கெனவே அறிவித்திருந்தது. “ஒருவேளை இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த ஆயுத்தமானால் , அடுத்தக்கட்ட ஆப்பரேசனில் இறங்குவோம். அது இஸ்ரேலுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்” என ஹமாஸின் ராணுவ அதிகாரியான அபு ஒபைதா வீடியோ வெளியிட்டிருக்கிறார் .
இந்நிலையில், மக்கள்தொகை அதிகம் உள்ள காசா பகுதி மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியிருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது. காசா மற்றும் லெபனானில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் வெடிப்பது தொடர்பான வீடியோக்களைப் பெற்று ஆய்வு செய்ததாகவும், அதில், சர்வதேச விதிகளை மீறி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பது உறுதியாகி இருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry