
“கரூர் விவகாரம் பற்றி பேசினால், ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம். இந்த விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு பாதுகாப்புக் குறைபாடே காரணம்.” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (அக்.15), கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர், “செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு தவெக தலைவர் கரூர் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம்.” என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். கரூருக்கு முன்னதாகவே திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் என்று 4 மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் செய்திருக்கிறார்.
அப்போது கூடிய கூட்டத்தை வைத்தே கரூரில் விஜய் பிரச்சாரத்துக்கு எவ்வளவு கூட்டம் கூடும் என்பது குறித்து காவல்துறை, உளவுத்துறை அரசுக்கு தகவல் தெரிவித்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கியிருந்தாலே, அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.
வேலுச்சாமிபுரத்தில் அதிமுக கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று காரணம் கூறப்பட்டது. எங்களுக்கு அப்படிச் சொல்லிவிட்டு தவெகவுக்கு மட்டும் அனுமதி அளித்தது எப்படி?. அது சந்தேகத்தை எழுப்புகிறது. அதேபோல், ஒரே நாளில் 39 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி. உடற்கூராய்வு செய்வதில் அவசரம் காட்டப்பட்டது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், விவாதத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டு இபிஎஸ் மீது அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் குற்றச்சாட்டு வைத்தார். இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையின் முன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள், அரசுக்கு எதிராக முழுக்கமிட்டபடி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். செங்கோட்டையன் இபிஎஸ் பேசுவதற்கு முன்பே சென்றுவிட்டார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்யவில்லை.
Also Read : விஜய் கூட்டத்தில் திட்டமிட்ட சதி! கரூர் விவகாரம் குறித்து எடப்பாடியார் அளித்த பகீர் தகவல்!
பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “முதலமைச்சர் பேசியதை நாங்கள் அமைதியாக கேட்டோம். ஆனால் சாபாநாயகர் நாங்கள் பேச உரிய அனுமதி கொடுக்கவில்லை. எதிர்க்கட்சியினர் பேசிய பிறகு, முதலமைச்சர் பதில் அளிப்பது தான் மரபு.
கரூரில் தவெக தலைவர் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பத்து நிமிடம் தான் பேசியிருப்பார், அப்போது ஒரு செருப்பு வந்து அங்கு விழுகிறது. இது குறித்து அரசு ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. கரூரில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக ஏடிஜிபி கூறினார். 660 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக முதல்வர் கூறுகிறார். இதிலேயே முரண்பாடு; இதனால்தான் கரூர் சம்பவத்தில் அரசின்மீது சந்தேகம் எழுகிறது. கரூர் சம்பவத்துக்கு அரசின் அலட்சியமே காரணம். எவ்வளவு பேர் கூடுவார்கள் என உளவுத்துறைக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை.
சட்டப்பேரவையில், பேச முடியாததை இப்போது செய்தியாளர்களிடம் பேசுகிறேன். ஜனவரியில் அதிமுக கூட்டம் நடத்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு சென்ற பிறகே எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எங்களுக்கு நிராகரித்த இடத்தை தவெகவுக்கு எதற்காக அரசு கொடுத்தது?; கரூர் சம்பவத்தில் அசம்பாவிதம் நடக்க வேண்டும் என திட்டமிட்டு அவ்விடத்தை கொடுத்ததாக மக்களும் சந்தேகிக்கின்றனர். ஏதோ உள்நோக்கத்தோடு தான் இந்த இடம் கொடுக்கப்பட்டது. போலீஸாரின் கவனக்குறைவே கூட்ட நெரிசலுக்கு காரணம். எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திருந்தால், இப்படி நடந்திருக்காது.
கரூர் சம்பவத்தில் வேகம் காட்டும் முதல்வர், கிட்னி திருட்டு விவகாரத்தில் ஏன் வேகம் காட்டவில்லை. கரூர் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. மக்களுக்காகவே பேசுகிறோம். கரூர் விவகாரம் பற்றி பேசினால், ஆளுங்கட்சிக்கு ஏன் இவ்வளவு பதற்றம்?. இந்த விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. அதனால் தான் நான் பேசும்போது, ஒவ்வொரு அமைச்சரும் எழுந்து பதில் சொல்கிறார்கள். கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை நினைத்து ஆளும்கட்சி பயப்படுகிறது. எல்லா விஷயத்திலும் அரசியல் செய்யும் கட்சி திமுகதான்.
ஒரு அரசியல் கூட்டத்தில் 41 பேர் இறந்தது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. அவசர அவசரமாக ஒரு நபர் ஆணையத்தை எப்படி அமைக்க முடியும். உடற்கூராய்வு செய்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உண்மை சம்பவத்தை மறைக்க அரசு நினைக்கிறது. ஒரு நபர் ஆணையம் என்பது உண்மையை மறைக்கும் முயற்சி” இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry