
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் கறைபடிந்த ஒரு கருப்பு அத்தியாயமான கீழ்வெண்மணி படுகொலை, 1968-ல் நடந்த ஒரு கொடூரச் சம்பவம். இது இன்றும் தமிழக வரலாற்றில் நீதிக்கான போராட்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், நெற்களஞ்சியமாகத் திகழ்ந்தது. ஆனால், பெரும்பாலான நிலங்கள் நிலவுடைமையாளர்களிடமே(மிராசுதார்கள்) இருந்தன. நிலமற்ற பட்டியலின விவசாயத் தொழிலாளர்கள் மிகக் குறைந்த கூலிக்கு வேலை வாங்கப்பட்டனர்.
இவர்களை ஒன்றிணைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‘விவசாயத் தொழிலாளர் சங்கத்தை’ உருவாக்கியது. அறுவடை செய்யும் கூலியில் அரைப்படி நெல் கூடுதலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்குப் போட்டியாக மிராசுதார்கள் (நிலவுடைமையாளர்கள்) ‘நெல் உற்பத்தியாளர் சங்கத்தை’ தொடங்கினர். இதன் தலைவராக கோபாலகிருஷ்ண நாயுடு என்பவர் இருந்தார்.
நிலவுடைமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதல் முற்றி, 1968 டிசம்பர் 25 இரவு கலவரமாக வெடித்தது. கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் ஒரு கும்பல் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் கீழ்வெண்மணி கிராமத்திற்குள் புகுந்தது.
தாக்குதலில் இருந்து தப்பிக்க குழந்தைகள், பெண்கள் என 48 பேர் ராமையா என்பவரது சிறிய ஓலைக்குடிசைக்குள் புகுந்து கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டனர். ஆனால், கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையிலான கும்பல் குடிசையை வெளிப்புறமாகப் பூட்டித் தீ வைத்தது. தீயில் இருந்து தப்பி வெளியே ஓடிவந்த குழந்தைகளும், பெண்களும் மீண்டும் நெருப்புக்குள் தூக்கி வீசப்பட்டனர். முடிவில் 23 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.

இந்தப் படுகொலை நடந்தபோது தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தச் சம்பவத்தை ஒட்டி ஈ.வெ. ராமசாமி நாயக்கர் எடுத்த நிலைப்பாடு இன்றும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. படுகொலை நடந்த சில நாட்களுக்குப் பிறகு ‘விடுதலை’ இதழில் எழுதிய ஈவெரா, கம்யூனிஸ்டுகள் அப்பாவித் தொழிலாளர்களைத் தூண்டிவிட்டு வன்முறையில் ஈடுபடுத்துவதாகக் குற்றம்சாட்டினார்.
“கூலி உயர்வு கேட்டால் நிலத்துக்காரன் ஆளை மாற்றுவான் அல்லது வேறு வழி தேடுவான், அதற்குப் போய் வன்முறையில் இறங்குவது சரியல்ல” என்ற தொனியில் அவர் கருத்து தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட கோபாலகிருஷ்ண நாயுடுவை நேரடியாகக் கண்டிக்காமல், “கம்யூனிஸ்டுகள் தங்கள் அரசியலுக்காக விவசாயத் தொழிலாளர்களைப் பலிகடா ஆக்குகிறார்கள்” என்றும் அவர் வாதிட்டார்.
நீதிமன்ற நடவடிக்கைகள் படுகொலையை விடப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தின. 1973-ல் சென்னை உயர்நீதிமன்றம் மிராசுதார்கள் அனைவரையும் விடுதலை செய்தது. “பணக்கார மிராசுதார்கள் நடந்து வந்து குடிசையைத் தீ வைப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை” என்று நீதிபதிகள் தர்க்கம் செய்தனர். இந்தத் துயரத்திற்குப் பிறகு 1969-ல் விவசாயிகளுக்கு நியாயமான கூலியை உறுதி செய்யும் ‘நியாய ஊதியச் சட்டம்’ இயற்றப்பட்டது.
கீழ்வெண்மணி படுகொலை என்பது வெறும் கூலி உயர்வுக்கான போராட்டம் மட்டுமல்ல; அது ஜாதிய ஒடுக்குமுறை மற்றும் வர்க்கப் போராட்டத்தின் சாட்சி. பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்காமல், நிலவுடைமையாளர்களுக்கு சாதகமாகப் பேசியதாக ஈவெரா மீது இன்றும் வைக்கப்படும் விமர்சனங்கள், சமூக நீதி விவாதங்களில் ஒரு தீராத சர்ச்சையாகவே நீடிக்கிறது.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
