தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் (மழலையர் வகுப்புகள்) கைவிடப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில், நடப்பாண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 2,381 அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்காக அங்கன்வாடி மையங்களும் இருக்கின்றன. இங்கு குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும், தனியார் பள்ளிகளில் இருப்பதை போல இதற்கென பிரத்யேக வகுப்புகள் இல்லாமல் இருந்தது.
Also Read : மழலையர் வகுப்புகளை சிறப்பாக நடத்துவது எப்படி? ஆசிரியர் கூட்டணியின் அடுக்கடுக்கான யோசனைகள்!
இதனால் தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் படிக்கும் குழந்தைகளை ஒப்பிடும் போது, அங்கன்வாடி குழந்தைகளின் கல்வித் திறன் குறைவாக இருந்தது தெரியவந்தது. எனவே, தனியார் பள்ளிகளில் நடத்தப்படுவதை போல அரசுப் பள்ளியிலும் ‘கிண்டர் கார்டன்’ எனப்படும் மழலையர் வகுப்புகளை அரசு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கடந்த 2018-ம் ஆண்டில் அங்கன்வாடி மையங்கள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளாக பரிசோதனை அடிப்படையில் மாற்றப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு பெற்றோர் மத்தியிலும், கல்வியாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.
இந்தச் சூழலில், கொரோனா ஊரடங்கு, பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்தது. இதனால் எல்கேஜி, யுகேஜிக்கு நியமிக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டனர். எனவே அப்போதே அரசுப் பள்ளிகளில் இருந்து கிண்டர் கார்டன் வகுப்புகள் நீக்கப்படும் என தகவல்கள் வெளியாகின.
Also Read : 10 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் ஆபத்து! தமிழக அரசை எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்!
ஆனால், அரசுப் பள்ளிகளில் கிண்டர் கார்டன் வகுப்புகள் தொடரும் என அப்போதைய அதிமுக அரசு அறிவித்தது. இந்தச் சூழலில், நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, இதுதொடர்பாக எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தான், நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக தொடக்கக் கல்வித் துறை சார்பில் திங்கள் கிழமை(29/MAY/2023) ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், “வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறந்த பிறகு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்துவது தொடர்பான அறிவுறுத்தல் ஏதும் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு ஜுன் மாதம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட அறிக்கையில், LKG, UKG, வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, தமிழக முதல்வரின் அறிவுரைக்கிணங்க, அரசுப் பள்ளிகளில் LKG, UKG, வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்” என்று கூறியிருந்தார்.
Also Read : LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்! கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய அமைச்சர்!
ஆனால், மழலையர் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. இதுவரை கூடுதல் ஆசிரியர்கள் யாரும் கிண்டர் கார்டன் வகுப்புகளுக்கு நியமிக்கப்படவில்லை. இதை வைத்து பார்க்கும் போது, நடப்பாண்டில், அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடருமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கல்வியாளர்கள், பள்ளிகளை தரம் உயரத்துவதில் உறுதியாக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வருகிறார். இதுமட்டும் போதாது, அடிப்படை கல்வியில் இருந்தே மாணவர்களை செம்மைப்படுத்த வேண்டும். அதை விடுத்து, அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நீக்கினால் மாணவர்களின் தொடக்கக்கல்வி திறன் பெருமளவில் பாதிக்கப்படும். இதுதொடர்பாக நல்ல முடிவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry