
இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் ப்ராஸ்டேட் கேன்சர் முக்கியமானதாக உருவெடுத்து வருகிறது. உலகளவில் இதன் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிலும் கடந்த 25 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் 75% முதல் 85% வரை அதிகரித்துள்ளதாகவும் லான்செட்(The Lancet Medical Journal) அறிக்கை தெரிவிக்கிறது. தேசிய அளவில் 30% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
புராஸ்டேட் புற்றுநோய் – உலகளாவிய மற்றும் இந்திய நிலை
2020-இல் உலகம் முழுவதும் 14 லட்சம் ஆண்கள் புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2040-க்குள் இந்த எண்ணிக்கை இரட்டிப்பு ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 33,000 முதல் 42,000 பேர் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு 1 லட்சம் ஆண்களுக்கும் 4-8 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
Also Read : அதிர்ச்சித் தகவல்! சென்னை உள்ளிட்ட தென் மாநில நகரங்கள் மூழ்கும் அபாயம் – சென்னை தரமணியின் நிலை..?
ப்ராஸ்டேட் என்றால் என்ன?
புராஸ்டேட் என்பது ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் சிறுநீர்ப்பைக்கு அடியில் உள்ள சுரப்பியாகும். வயது அதிகரிக்க அதிகரிக்க அது பெரிதாகும். 45-50 வயதிற்கு மேல் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகும்.
புராஸ்டேட் புற்றுநோய் – அறிகுறிகள்
மற்ற நோய் போல அல்லாமல், ப்ராஸ்டேட் புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் தெளிவான அறிகுறிகள் தெரியாது. இருப்பினும், நோய் அதிகரிக்கும்போது பின்வரும் அறிகுறிகள் காணப்படலாம்.
* அடிக்கடி சிறுநீர் கழித்தல்
* இரவில் மெதுவாக சிறுநீர் கழிவது
* சிறுநீர் தானாக வெளியேறுதல்
* சிறுநீரில் ரத்தம்
* சிறுநீரில் சக்தி குறைவு
* இடுப்பு, கீழ் முதுகு, தொடைகளில் வலி
* எலும்புகளில் வலி, முறிவு (நோய் பரவியிருந்தால்)
அபாயக் காரணிகள்
* வயது (65க்கு மேல் அதிகம்)
* குடும்ப வரலாறு, மரபணு
* உடல் பருமன்
* புகைபிடித்தல், மது அருந்துதல்
* அசைவ உணவு அதிகம் உண்ணுதல்
* பாலியல் நோய்த்தொற்றுகள் (எ.கா. கிளமிடியா, கோனோரியா)
சுற்றுச்சூழல் நச்சுகள், குறிப்பாக தொழிற்சாலை மற்றும் அது சார்ந்த பகுதிகளில் வேலை பார்க்கும் ஆண்களுக்கு கூடுதல் அபாயம் உள்ளது.

வயது, மரபணு மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பு
புராஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் மெதுவாக வளர்கிறது. ஆனால், சில சமயங்களில் தீவிரமாகவும், உடல் முழுவதும் பரவக்கூடும். குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால், 45 வயதுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நபர் இரு வருடங்களுக்கு ஒரு முறை PSA பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பிரதான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை
* PSA (Prostate Specific Antigen) இரத்த பரிசோதனை
* அல்ட்ராசவுண்ட், MRI
* ஆரம்ப கட்டத்தில் ரோபோடிக் அறுவை சிகிச்சை
* தீவிர நிலையில் ஹார்மோன் சிகிச்சை, கதிர்வீச்சு
* நோய் கட்டுப்பாட்டில் இருந்தால், 5-15 ஆண்டுகள் வரை உயிர்வாழ முடியும்
சிக்கலாகும் சிகிச்சை
பெரும்பாலான, குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில், விழிப்புணர்வு குறைவும், பரிசோதனை வசதிகள் இல்லாமையும் காரணமாக, நோய் தாமதமாக கண்டறியப்படுகிறது. இதனால், சிகிச்சை சிக்கலாகிறது.
முடிவுரை
புராஸ்டேட் புற்றுநோய் ஆண்களுக்கு ஒரு முக்கிய சவாலாக இருந்தாலும், ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும். 45 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள், குறிப்பாக குடும்ப வரலாறு உள்ளவர்கள், தவறாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி, புகைபிடித்தல், மது அருந்தல் ஆகியவற்றை முறைப்படுத்துவதும் முக்கியம்.
முக்கிய குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. மற்ற மருத்துவ காரணங்களாலும் இந்த அறிகுறிகள் ஏற்படலாம். சரியான காரணத்தை மருத்துவரால் மட்டுமே கண்டறிய முடியும். ஏதேனும் சந்தேகம் இருந்தால், மருத்துவரை அணுகுவது அவசியம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry