“பாஜக – திமுக என ‘டபுள் கேம்’ ஆடும் வைரமுத்துக்கு ஞானபீட விருது! தமிழுக்கே அவமானம் என்கிறார் ஜெயமோகன்! வெடிக்கும் சர்ச்சை!”

0
6
news/vairamuthu-jnanpith-disgrace-to-tamil-jeyamohan-article/
Writer Jeyamohan criticizes Vairamuthu's Jnanpith award attempt, calling it a disgrace to Tamil literature. Read the full analysis of the controversy.

2025ம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு பாடலாசிரியர் வைரமுத்து தேர்வாகி இருப்பது குறித்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையான கண்டனங்களை முகநூலில் பதிவு செய்துள்ளார். ஒரு கீழ்த்தரக் கவிஞர் என்ற வகையில் வைரமுத்து மேல் ஒரு மதிப்பின்மையே இதுவரை இருந்தது. இப்போது அவர் மேல் ஆழ்ந்த அருவருப்பே அடைகிறேன் என்று ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தனது பதிவில், “சென்ற ஓராண்டாகவே செய்திகள் காதில் விழுந்துகொண்டிருந்தன. பாரதிய ஜனதாவின் சிலருடன் வைரமுத்து மிக அணுக்கமாகச் செயல்பட்டு ஞானபீடத்திற்கு மீண்டும் முயல்கிறார் என்று. ஆனால் விசாரித்தபோதெல்லாம் அப்படியில்லை என அவர்களில் சிலர் ஆக்ரோஷமாக மறுக்கவும் செய்தனர்.

வைரமுத்து ஒரே சமயம் திமுகவுக்கு வேண்டியவர், கருணாநிதியின் நண்பர், மோடி கவிதைகளை மொழியாக்கம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.அனுதாபி, பாரதிய ஜனதாவின் கலாச்சாரத்துறை முகவர்களின் அணுக்கர். எல்லாமும்தான். அது ஒரு தனிக்கலை. தமிழ்நாட்டில் இந்த தலைமுறையில் அவர் அதில் மாபெரும் நிபுணர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஞானபீடத்தை அணுகிவிட்டார் என்பதை உள்வட்டம் வழியாகவே அறிந்தேன். கடுமையான கண்டனத்தை பதிவுசெய்தேன். நண்பர்களும் திரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது அந்த விருதை வைரமுத்துவுக்காகப் பரிந்துரைத்தவர் வெங்கையா நாயுடு. ஞானபீட நிறுவனம் அப்போது மறுத்தது.

வைரமுத்துவுக்கு பின்னடைவு உருவானது. பிறகு அவர்மேல் வந்த பாலியல் குற்றச்சாட்டுக்களால் மேலும் பின்னடைவு. ஆனால் கல்வித்துறையிலுள்ள தன் நண்பர்கள் (பெரும்பாலானவர்கள் சாதி ஆதரவாளர்கள்) வழியாக கி.ராஜநாராயணன் போன்று ஞானபீடத்திற்கு முற்றிலும் தகுதியானவர்களுக்கு அது கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்.

இந்திய துணைஜனாதிபதிக்கு ஞானபீடப் பரிசில் பெரும் பங்களிப்புண்டு என அறிந்திருக்கலாம். இந்த தேர்தலை ஒட்டியும் ஏதேதோ கணக்குகள் இருந்திருக்கலாம். இந்த ஞானபீட விருது அந்த அமைப்பு தமிழ் நவீன இலக்கியத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தமைக்குச் சமம். நீ என்னவாக வேண்டுமென்றாலும் இரு, நீ என்னென்ன சாதனைகளை வேண்டுமென்றாலும் செய், நாங்கள் உன்னை தெருப்புழுதியின் தரத்தில்தான் மதிப்பிடுவோம், உங்களில் சிறந்தவர் என உங்களில் கடையரைத்தான் நாங்கள் ஏற்போம், பிறர் அனைவரையும் அவரைவிட கீழேதான் வைப்போம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த அவமதிப்புக்கு தமிழர்களாகிய நாம் பொறுப்பேற்கவேண்டும். எந்த பேரிலக்கியவாதியையும் நாம் ஏற்றுக்கொண்டு முன்னிறுத்தியதில்லை. அவர்களை அவமதிக்கும் தருணங்களை தவறவிட்டதுமில்லை. ஞானபீடப்பரிசு என்பதை தீர்மானிப்பதில், பரிந்துரை முதல் இறுதிவரை தமிழகக் கல்வித்துறையினர் ஒரு பங்களிப்பாற்றுகின்றனர். அவர்களில் இலக்கியமறிந்தவர்கள், அடிப்படை அறிவுத்திறன் கொண்டவர்கள் அரிதினும் அரிது.

பெரும்பாலும் சாதிக்கணக்குகள், அரசியல் கணக்குகள் கொண்டவர்களே மிகுதி. ஒவ்வொரு இடத்திலும் எந்த தகுதியுமற்றவர்களை, வெற்றுச் சூழ்ச்சியாளர்களை மேலே தூக்கி வைத்திருக்கிறோம். கொண்டாடுகிறோம். அப்போது அவர்களில் ஒருவரைத்தான் அவர்கள் முன்னிறுத்துவார்கள். அது நிகழ்ந்துள்ளது. தமிழ் தனக்குரிய அவமதிப்பையே ஈட்டிக்கொண்டிரள்ளது.

இந்த விருதை ஏன் இப்படிக் கண்டிக்கிறோம்? அகிலனுக்கு அளிக்கப்பட்ட் ஞானபீடம் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலம் தமிழ் நவீன இலக்கியத்தையே இந்திய இலக்கியச் சூழலில் இருட்டடிப்பு செய்தது. அகிலனே இந்த தரம் என்றால் தமிழில் என்ன நவீன இலக்கியம் இருக்கப்போகிறது என்று சொல்லப்படுவதை ஏறத்தாழ இருபது மேடையிலாவது நானே என் காதால் கேட்டிருப்பேன்.

தமிழில் நவீன இலக்கியமே இல்லை என்றுதான் இன்றும் இந்தியச்சூழலில் பிற மொழியினரில் கணிசமானவர்கள் எண்ணுகிறார்கள். ஆங்கில மொழியாக்கங்கள் வழியாக மெல்ல மெல்ல அந்தச் சித்திரம் ஒரு சிறு வட்டத்தில் மாறுகிறது. ஆனால் இந்திய மொழிகளுக்கு செல்லும் மொழியாக்கங்களே இந்திய இலக்கியங்கள் பற்றிய சித்திரங்களை இந்தியச் சூழலில் உருவாக்குகின்றன. இங்கிருந்து செல்பவை நாம் பரிசளிக்கும் படைப்புகளே. வைரமுத்துவுக்கு கிடைத்த இந்த விருது தமிழுக்கு அளிக்கும் சிறுமை இன்னும் நம்மை முப்பதாண்டுகள் பின்னடைவுக்கு உள்ளாக்கும். ஒவ்வொரு மேடைகளிலும் நாம் இளம்கேலியுடனும் அதன் விளைவான பரிந்துநோக்கும் மேட்டிமைப்பார்வையுடனும் அணுகப்படுவோம்.

இச்சூழலில்தான் தரமான தமிழ்ப்படைப்பாளிகளை முன்வைக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா போன்ற எங்கள் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகாரபீடங்கள் நம்மை தொடர்ச்சியாக சிறுமைசெய்துகொண்டே இருக்கின்றன. அடிவிழுந்தோறும் நாம் நிமிர்ந்தாகவேண்டும். நம் முன்னோடிகளை, நம்மை முன்வைக்கவேண்டும். நாம் மனம் தளராமலிருக்கவேண்டிய சூழல் இது. வைரமுத்து போன்ற சிறுமையாளர்கள் வருவார்கள் போவார்கள், சூழ்ச்சிகள் வழியாக அற்ப விருதுகளை ஈட்டுவார்கள், இலக்கியம் என்றும் வெல்லும்.

தமிழ் இலக்கியத்திற்கு எல்லாவகையிலும் அவமதிப்பு இச்செய்தி. இந்த அவமானத்தை செயல்வழியாகக் கடந்துசெல்வோம். இனி இதைப்பற்றி விவாதிக்கவேண்டியதில்லை. அருவருப்பும், கூச்சமும் நிறைகிறது உள்ளத்தில். ஒரு கீழ்த்தரக் கவிஞர் என்ற வகையில் வைரமுத்து மேல் ஒரு மதிப்பின்மையே இதுவரை இருந்தது. இப்போது அவர் மேல் ஆழ்ந்த அருவருப்பே அடைகிறேன். அவர் தன் நாலாந்தரச் சூழ்ச்சிகள் வழியாக தமிழுக்கு தலைமுறைகளுக்கு நீளும் இழிவை சேர்த்தளித்துவிட்டார்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா, “17 பெண்களால் பாலியல் வன்கொடுமை புகார் சுமத்தப்பட்ட ஒரு நபர், அரசியல் செல்வாக்கு இருந்தால் இன்னும் ஒரு கவிஞராகவோ அல்லது மாபெரும் கவிஞராகவோ கொண்டாடப்பட முடியும். இது இலக்கியத்திற்கான விருது அல்ல; இது ஒரு வேட்டையாடுபவனின் (Predator) வெற்றி ஊர்வலம்” என்று கூறியுள்ளார்.

விருது பெற்ற எழுத்தாளர் மீனா கந்தசாமி, கவிஞர் வைரமுத்துவுக்கு உயரிய விருதுகள் வழங்கப்படுவதைக் குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். பின்னணி பாடகி சின்மயி, தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும், மற்ற பெண்களின் புகார்களுக்குக் குரல் கொடுத்ததற்காகவும் திரைத்துறையால் எப்படிப் புறக்கணிக்கப்பட்டார் என்பதை மீனா கந்தசாமி சுட்டிக்காட்டியுள்ளார். புகார்களுக்கு உள்ளான நபர் கௌரவிக்கப்படும் நிலையில், குரல் கொடுத்தவர் தண்டிக்கப்படுவதைச் சாடியுள்ளார்.

“எழுதும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அதிகார பீடங்கள் தங்களுக்குள் கைகோர்த்துக்கொண்டு ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்ளும் என்பதுதானா? திறமையை விட அரசியல் பயன்பாடும், வெட்கமற்ற லாபி (Lobbying) செய்வதுமே முதன்மையானது என்பதுதானா?” எனவும் மீனா கந்தசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ் என்பது இரண்டாயிரம் ஆண்டுகால இலக்கியப் பாரம்பரியம் கொண்டது. 17 பெண்களால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபருக்கு இப்படிப்பட்ட அங்கீகாரம் கிடைக்கிறது என்றால், இலக்கியத் துறையில் இருக்கும் பெண்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன?

இந்த மொழியைப் பிரதிநிதித்துவப்படுத்த, இந்தத் தருணத்தில், இந்த மனிதரையா ஞானபீடக் குழு தேர்வு செய்ய வேண்டும்? எழுதும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அதிகார வர்க்கம் தங்களுக்குள் கைகோர்த்துப் பாதுகாப்பாக இருக்கும் என்பதுதானா? திறமை என்பதைவிட, அரசியல் தேவைகளும் வெட்கமற்ற அதிகாரத் தரகு வேலைகளுமே மேலானது என்பதுதானா?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் மிக உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது, பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருப்பது சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடையேயும், முக்கிய ஆளுமைகளுக்கிடையேயும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமர்சனங்களுக்கு முக்கியக் காரணம், 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற #MeToo இயக்கமாகும். அப்போது, பிரபல பின்னணிப் பாடகி சின்மயி ஸ்ரீபாதா உட்பட 17 பெண்கள், வைரமுத்து மீது “பாலியல் துன்புறுத்தல் மற்றும் தவறான நடத்தை” குறித்த புகார்களை முன்வைத்திருந்தனர்.

குறிப்பு: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் எழுத்தாளர்களின் தனிப்பட்ட பார்வையாகும். தமிழ் இலக்கியச் சூழலில் எழுந்துள்ள இந்த விவாதம் குறித்த மாற்றுக் கருத்துக்களுக்கும் ‘வேல்ஸ் மீடியா’ களம் அமைத்துக் கொடுக்கும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry