வாச்சாத்தி வழக்கில் 215 பேரும் குற்றவாளிகள்! தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்! 18 பெண்களுக்கு நிவாரணம் வழங்க அதிரடி உத்தரவு!

0
150
Justice Velmurugan of the Madras High Court directed Tamil Nadu government to pay a compensation of ₹10 lakh each to the 18 rape victims and recover 50% of the amount from those who had been convicted for the charge of rape.

1990களில் சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடி வந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும், பெ.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வாச்சாத்தி கிராம‌‌த்தைச் சேர்ந்த மக்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாக தமிழக வனத்துறையினர் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதியன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து பல மணி நேர தேடுதல் வேட்டையை நடத்தினர்.

இதன் முடிவில், வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 133 பேரை கைது செய்தனர். அவர்களில் 90 பேர் பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் ஆவர். சந்தனக் கட்டை கடத்தலுக்கும் தங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்த வாச்சாத்தி கிராமத்தினர், இந்த விசாராணை மற்றும் தேடுதல் நடவடிக்கையின்போது கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தனர்.

கிராம மக்கள் அனைவரும் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களின் குடிசைகள் தகர்க்கப்பட்டு, வீட்டிலிருந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டதாகவும்  குற்றம்சுமத்தினர். இதுதொடர்பாக 1992 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி முறையான புகார் பதிவுசெய்யப்பட்டது. இதன் மீதான விசாரணையை தமிழக காவல்துறை முறையாக நடத்தவில்லை என்கிற புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

Also Read : தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! Microplastics Found in Human Breast Milk!

வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் என்று 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என 2011ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் மொத்தம் 269 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. வழக்கு நடந்த 19 ஆண்டுகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். இந்தப் பின்னணியில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவர்களில் 126 பேர் தமிழக அரசின் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் தமிழக காவல்துறையினர். மீதமுள்ள ஐந்து பேர் தமிழக வருவாய்த் துறை ஊழியர்கள். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில், 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஏனையோர் வாச்சாத்தி மக்களை பல்வேறு வழிகளில் துன்புறுத்தியதாகவும் அவர்கள் உடைமைகளை சூறையாடியதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இப்படிப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

கடந்த மார்ச் 4-ம் தேதி வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களிடையே உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் விசாரணை செய்தார். (கோப்புப் படம்)

இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வாச்சாத்தி மலை கிராமத்தில் நீதிபதி வேல்முருகன் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களான கிராமத்தில் உள்ள ஆலமரம், மாரியம்மன் கோவில், குடிநீர் தொட்டி, ஏரி, அருகில் உள்ள அரசநத்தம், கலசப்பாடி மலை கிராமங்களில் நேரடியாக ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட கிராம மக்களைச் சந்தித்துப் பேசினார். அப்பொழுது வழக்குகள் தொடர்பாக எதையும் அவர்களிடம் பேசாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளதா?

இந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் இன்று (செப்டம்பர் 29) நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்து உள்ளார். இதில் குற்றவாளிகளின் மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்படுவதாக அவர் தீர்ப்பளித்துள்ளார். மேலும், பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவும்(ரூ.5 லட்சம் அரசாங்கமும், ரூ 5.லட்சம் பாலியல் வன்கொடுமை செய்தவர்களிடமிருந்து வசூலித்தும் தர வேண்டும்), பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை அல்லது சுய தொழிலுக்கு உதவ வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அப்போதைய தருமபுரி ஆட்சியர், எஸ்.பி., வன அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry