திடீரென வேகம் பிடித்திருக்கிறது கேரளா கொட்டிவரும் மருத்துவக் கழிவுகள் தொடர்பான விவகாரம். எங்கு பார்த்தாலும் அது குறித்த செய்திகள் அனல் பறக்கிறது. முன்னணி தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், யூடியூப் சேனல்கள், சமூக வலைதளங்களில் எல்லாம், மருத்துவக் கழிவுகள் தொடர்பான விவாதங்களை கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடத்தி வருவதை பார்க்கும் போது, இனியாவது விடிவு பிறக்குமா என்கிற கேள்வி எழுகிறது.
Also Read : கேரளா பறித்துக்கொண்ட நெய்யாறு நீர் உரிமை! என்னதான் செய்வான் இந்தத் தமிழ் நிலத்து அப்பாவி.?
மருத்துவக் கழிவுகள், கோழி கழிவுகள், மின்னணு சாதனக் கழிவுகள், மாட்டுக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், அழுகிய காய்கறிகள் என தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கேரளா கொட்டி வரும் கழிவுகள், அபாயகரமானவை என்பதை விட, தமிழ் நிலத்தில் வாழும் அப்பாவிகளின் வாழ்வாதாரத்திற்கு சவால் விடும் ஒரு செயலாகும். ஈவு இரக்கமின்றி தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மலையாளிகள் அல்ல, தமிழர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கடவுளின் தேசம் என்று 1992 ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய பதாகையை தூக்கி தன் மாநிலத்தின் பெயருக்கு முன்னால் நிறுத்திக் கொண்ட கேரளா, அபாயகரமான கழிவுகளை முறைப்படி எரிக்கவும், புதைக்கவும் ஒரு ஏற்பாட்டை செய்யாதது வருத்தம் அளிப்பதோடு, அந்தக் கடவுளின் தேசம் என்கிற பெயரின் மீதும் நமக்கு இயல்பான கோபம் எழுகிறது.
Bio Medical Waste Plant எனப்படும் நவீன அலகுகளை கூடுதலாக உருவாக்கி, தன் மாநிலத்தில் உற்பத்தியாகும் கழிவுகளை அங்கேயே எரிப்பதற்கு முறையான ஏற்பாடுகளை செய்யாமல், மொத்த கழிவுகளையும் தமிழகத்தின் பக்கம் திருப்பி விடுவது என்பது ஏற்புடைய செயல் அல்ல. 2021 ஆம் ஆண்டு வரை கேரளாவில் இருந்த ஒரே ஒரு மருத்துவக் கழிவு எரிக்கும் நிறுவனம் IMAGE என்கிற பெயரில் பாலக்காட்டில் மட்டுமே இருந்தது. அதுவும் வெறும் 58.8 டன் கழிவுகளை மட்டுமே எரிக்கும் திறன் கொண்டது.
திருவனந்தபுரத்தில் மூட்டை கட்டப்பட்ட கழிவுகளை, பாலக்காட்டிற்கு ஒரு மருத்துவ நிறுவனம் கொண்டு செல்ல வேண்டுமானால், 320 கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டும். அத்தனை தூரம் செல்வதற்கு பெரும் போக்குவரத்து செலவு ஏற்படும் என்பதால், அருகாமையில் 50 கிலோ மீட்டரில் இருக்கும் குமரி மாவட்டத்தை தேர்ந்தெடுத்து கழிவுகளை கொட்டக்கூடிய வேலைகளை செய்து வருகிறார்கள்.
Also Read : மண் இழந்த கதைகள் – 1. கேரளத்தால் ‘தேவிகுளம்’ பறிக்கப்பட்ட கொடுங்கதை!
கோட்டயம், பத்தனம்திட்டா, கொல்லம் ஆகிய மாவட்டத்தில் உருவாகும் மருத்துவக் கழிவுகள், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மானாவாரியாக 25 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வருகிறது. பாலக்காட்டை அடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு எர்ணாகுளம் நகருக்கு அருகே, வெறும் 16 டன் மருத்துவ கழிவுகளை எரிக்கும் திறன் கொண்ட KEIL என்ற பெயர் கொண்ட அலகு ஒன்றை உருவாக்கியது கேரளா.
நெருக்கடிகள் முற்றியதை அடுத்து பத்தினம் திட்டா மாவட்டத்தில் அடூர் அருகே இன்னொரு அலகை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது பாலக்காட்டில் செயல்படும் இமேஜ் நிறுவனம். இப்படி மொத்தமே 74.8 டன் கழிவுகளை மட்டுமே எரிக்கும் திறன் கொண்ட கேரளா, மீதம் இருக்கும் 500 டன் வரையிலான கழிவுகளை, தமிழகத்தின் பக்கம் கொண்டு வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இப்படி மானாவாரியாக தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டப்படும் அபாயகரமான கழிவுகளை தடுப்பதற்கு தமிழகம் என்ன செய்திருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்கு என்னுடைய பதில், இதுவரை ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான். ஒரு நாடு என்பது ஆட்சியாளர்களுடைய வீடு என்பதை கவனமாக மறந்து விட்டார்கள் நம்மவர்கள். இந்த நிலம் நம்முடைய சொந்த நிலம் என்கிற உணர்வு நம்முடைய ஆட்சியாளர்களுக்கு இருந்திருக்கும் என்று சொன்னால், கேரளாவிலிருந்து ஒரு கழிவு வண்டி தமிழகத்திற்குள் நுழைந்திருக்க முடியுமா..?
மருத்துவக் கழிவு மேலாண்மை விதி 2016ன் கீழ், பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவது சட்டவிரோதம் என்று அறிவிப்பு செய்திருக்கிறோம். மீறி மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதம் என்கிறதும் நம்முடைய சட்ட திட்டங்களில் ஒன்று. இந்தச் சட்டங்களின் கீழ் இதுவரை கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் கொண்டு வந்து அபாயகரமான கழிவுகளை கொட்டியவர்கள் எத்தனை பேர் மீது வழக்கு போட்டிருக்கிறோம், எத்தனை பேருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கிறோம்?
Also Read : சிவப்பு அவல்! ஆச்சரியப்படும் அளவுக்கு கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!
கடந்த 2021 ஆம் ஆண்டு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இப்படி கழிவுகளை கொட்டுவது குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, கேரளாவில் உள்ள ஏழு மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தது. ஆனால் பசுமை தீர்ப்பாயத்தின் நோட்டீஸிற்கு இதுநாள் வரை எந்த பதிலும் அளிக்கவில்லை கேரளாவைச் சேர்ந்த ஏழு மாவட்ட ஆட்சியர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு மறுபடியும் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறது தென்மண்டல பசுமை தீர்ப்பாயம். 2021 ஆம் ஆண்டை விட இப்போது கொஞ்சம் கடுமை காட்டுகிறது தீர்ப்பாயம்.
ஆனால் கேரளா கவனமாக இந்த விடயத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள பார்க்கிறது. திருவனந்தபுரத்தில் இருக்கும் புற்றுநோய் மையத்தில் இருந்து வந்த கழிவுகள் தான், திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூரிலும், கோடகநல்லூரிலும் கிடக்கிறது. ஆனால் அதை தனியார் மருத்துவ நிறுவனத்தில் இருந்து வந்த கழிவு என்கிறார் கேரளாவின் அரசு வழக்கறிஞர்.
கூடுதலாக அது அபாயகரமான கழிவு இல்லை என்கிறது அவரது கூற்று. இதை இவர்கள் காசர்கோடு தாண்டி கர்நாடகாவில் இருக்கும் மங்களூர் அருகே கொண்டு கொட்ட முடியுமா..? தமிழர்கள் இளிச்சவாயர்கள் என்பதால் மட்டுமே எல்லையோர மாவட்டங்களில் இருக்கும் மருத்துவ நிறுவனங்கள், தமிழகத்திலிருந்தே ஆட்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பெரும்பணம் கொடுத்து இந்த கழிவுகளை, லாவகமாக தமிழகத்திற்குள் அனுப்பி கொட்ட வைக்கிறார்கள்.
கடந்த 2023ஆம் ஆண்டு மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் கொடுத்த விளக்கம் உண்மையா? இல்லையா? என்று நமக்கு தெரிய வேண்டும். கொச்சியில் உள்ள கழிவுகளை பொள்ளாச்சியில் வீசி எறிந்தது போல, இனியும் ஒரு செயல் நடவாமல் பார்க்க வேண்டியது தமிழ்நாடு அரசினுடைய கடமை.
நீலகிரி மாவட்டம் நாடுகாணி மற்றும் தாளூர் வழிகளின் வழியாக, உள்ளே நுழைந்து வயநாடு மாவட்ட கழிவுகளை வீசி எறிந்தவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார்கள் நீலமலை மாவட்டத்து மக்கள். அரசு வேடிக்கை பார்க்குனானால், இனி குமரியிலும், தென்காசியிலும், திருநெல்வேலியிலும், தேனியிலும், கோவையிலும், நீலமலை மாவட்டத்தில் நடந்ததுதான் நடக்கும். தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் 2021 ல் நடந்து கொண்டது போல, இப்போது நடக்காமல் நிலைமையை தீவிரப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்கிற துறையில் பணிபுரியும் துறை சார் அதிகாரிகள் வாங்கும் சம்பளத்திற்கு முறையாக வேலை செய்ய வேண்டும் என்பது நம்முடைய ஆசை. எல்லையோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்து துறை சோதனை சாவடிகளுடைய முக்கியமான கடமைகளில், கழிவுகளை தடுப்பது தான் முதன்மையான கடமை என்பதை உணர்ந்து பணி செய்யுங்கள் என்று தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
இதனிடையே, இன்று காலையில் கேரளாவில் இருந்து வந்த அதிகாரிகள் நெல்லை மாவட்டத்தில் மருத்துவ கழிவுகள் கிடக்கும் இடத்தில் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து அங்கு கிடந்த மருத்துவ கழிவுகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எங்கிருந்து கொண்டு வரப்பட்டதோ, மீண்டும் அங்கேயே அள்ளி செல்லுவதற்காக 10க்கும் மேற்பட்ட லாரிகள் வந்தன. கழிவுகள் அள்ளப்பட்டு மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்லப்படுகின்றன.
கட்டுரையாளர் : எழுத்தாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம். ஒருங்கிணைப்பாளர்-பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம். மாநில செயலாளர்-தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry