”அமைச்சர் K.N. நேரு ராஜினாமா?” ஜாப் ராக்கெட் ஊழல் நெருக்கடி! – மோசடியை விரிவாக விளக்கியுள்ள அமலாக்கத்துறை!

0
63
tn-cash-for-job-scam-minister-kn-nehru-ed-report-vels-media.
Enforcement Directorate (ED) submits a 232-page dossier to TN police detailing alleged role of Minister K N Nehru, his brothers, and associates in the MAWS cash-for-job scam. Bribery up to ₹35 lakh alleged.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றுள்ள பணி நியமன முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை(பொறுப்பு) தலைவருக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள 232 பக்க ஆவணத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (MAWS) அமைச்சர் கே.என்.நேரு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், பணி நியமன மோசடியில் கே.என். நேருவின் சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என். ரவிச்சந்திரன் மற்றும் அவர்களது நெருங்கிய கூட்டாளிகளான டி.ரமேஷ், டி.செல்வமணி, கவிபிரசாத் ஆகியோர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 2,538 பேர் பணி நியமனத்தில் பங்கு வகித்ததை அமலாக்கத்துறை (ED) விரிவாக விளக்கியுள்ளது.

Also Read : நகராட்சி நிர்வாகத் துறையில் பெரும் ஊழல்! ஒரு பணி நியமனத்துக்கு ₹35 லட்சம் வரை வசூல்! முதலமைச்சரே நியமன ஆணைகள் வழங்கிய அவலம்!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) பிரிவு 66(2)-இன் கீழ், அக்டோபர் 27 அன்று நான்கு பக்க கடிதத்துடன் இந்த ஆவணம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பணி நியமன மோசடியில் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள், நகரத் திட்டமிடல் அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்ட சுமார் 150 விண்ணப்பதாரர்களை மோசடியாக தேர்வு செய்தது தொடர்பான ஆதாரங்களை தாங்கள் பகிர்ந்துள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த முறைகேட்டை வெளிக்கொண்டு வந்த “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்“ நாளிதழ் சார்பில் புதன்கிழமையன்று அமைச்சர் நேருவைத் தொடர்பு கொண்டபோது, அவர் ஒரு கூட்டத்தில் இருப்பதாகக் கூறி பதிலளிக்க மறுத்துள்ளார்கள். கவிபிரசாத், மணிவண்ணன் ஆகியோர் இந்த வழக்கோடு தாங்கள் எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்கள் என்று கூறியுள்ளனர். ரமேஷ், ரவிச்சந்திரன் மற்றும் செல்வமணி ஆகியோர் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை.

மோசடி எப்படி நடந்தது என்பதை விவரித்து, அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருப்பதாவது: பணி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, வேலைக்காக விண்ணப்பித்தவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள், அமைச்சரின் ஐந்து நெருங்கிய கூட்டாளிகளை (ரமேஷ், செல்வமணி, கவிபிரசாத், மணிவண்ணன் மற்றும் ரவிச்சந்திரன்) அணுகியுள்ளனர். அவர்கள், வேலைக்கு விண்ணப்பித்தவரிடமோ அல்லது உறவினர்களிடமோ பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களிடமிருந்து எவ்வளவு லஞ்சம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானித்துள்ளனர்.

Also Read : நகராட்சி நிர்வாகத்துறை வேலை நியமன ஊழல்: ₹800 கோடி பணப் பரிமாற்றம் – வழக்கு பதிய EPS வலியுறுத்தல்!

ரூ. 25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை லஞ்சம் கொடுக்க முடிந்தவர்களை இவர்கள் உறுதி செய்வார்கள். இந்த நடவடிக்கைகள் அமைச்சர் நேருவுக்கு முழுமையாகத் தெரியும் என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை வலுப்படுத்த, 2025 ஏப்ரலில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட இந்த 5 பேரின் தொலைபேசிகளில், வாட்ஸ்அப் உரையாடல்களில் இருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை ஆவணத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகஸ்ட் 2024 மற்றும் பிப்ரவரி 2025-க்கு இடைப்பட்ட காலத்தில், இந்த மோசடியைச் செயல்படுத்துவதற்காக ரமேஷ், செல்வமணி, கவிபிரசாத் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பிற தரகர்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஜூன் 2024 இல் எழுத்துத் தேர்வுகளை நடத்தி, பிப்ரவரி 17, 2025 அன்று முடிவுகளை அறிவித்தது, அதன் பிறகு வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களிடம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. முடிவுகள் ஜூலை 4 அன்று அறிவிக்கப்பட்டன.

முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, சம்பந்தப்பட்ட 5 பேரின் தொலைபேசிகளிலிருந்து தரகர்களால் அனுப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மற்றும் கலந்தாய்வு அழைப்புக் கடிதங்களை அமலாக்கத்துறை மீட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே, தரகர்களால் குறிப்பிடப்பட்ட வேட்பாளர்களின் தேர்வை இவர்களால் உறுதிப்படுத்த முடிந்தது என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தொடர்பாக ரவிச்சந்திரன், செல்வமணி மற்றும் பிறரின் உள்ளீடுகளைக் கொண்ட ஒரு முன்னுரிமைப் பட்டியல் ரமேஷின் தொலைபேசியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறியுள்ள அமலாக்கத்துறை, இவர்களை அணுகிய விண்ணப்பதாரர்களில் பலருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளது.

Also Read : பள்ளிக்கரணை சதுப்பு நிலம் – தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக இயங்கும் திமுக! – விளக்கம் விவகாரமானதால் தமிழக அரசு பதற்றம்!

நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் கூட்டாளியாக அடையாளம் காணப்பட்ட செல்வமணி, கலந்தாய்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே தரகர்களிடமிருந்து விண்ணப்பதாரர்களின் விவரங்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அந்தத் தேர்வுக்காக செல்வமணிக்கு நன்றி தெரிவித்த ஒரு தரகரிடமிருந்து வந்த உரையாடலையும், மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு பணியாளர்களை நியமிக்க உதவுமாறு கோரியதையும் அமலாக்கத்துறை மேற்கோள்காட்டியுள்ளது.

28 ஆண்டுகளாக ரவிச்சந்திரனுடன் தொடர்புடைய கவிபிரசாத்தால், ஆரம்ப சுற்றுகளில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு விண்ணப்பதாரரை இறுதி தகுதிப் பட்டியலுக்கு கொண்டுவர முடிந்தது என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. தொழில்துறை இணை இயக்குநர் மகளின் தேர்வை ரவிச்சந்திரன் உறுதி செய்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

வேட்பாளர்கள் விவரங்கள் தரகர்களால் பகிரப்பட்ட பிறகு, அந்தக் கூட்டாளிகளுக்கு இடையேயான வாட்ஸ்அப் உரையாடலில் ஹவாலா பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட ரூ. 10 நோட்டின் படங்கள் பகிரப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

“மறைமுக அரசியல் நோக்கம்” என்று அமைச்சர் நேரு அளித்துள்ள மறுப்பு, ஆதாரங்களுடன் வெளிவந்துள்ள 232 பக்க அமலாக்கத்துறை ஆவணத்தின் நம்பகத்தன்மையை ஒருபோதும் அசைக்காது. பழைய வங்கிக் கேஸ் முதல் பணம் வாங்கிக்கொண்டு பணி வழங்குவது வரை, ஊழல் மட்டுமே இந்த ஆட்சியின் முகவரியாக மாறியுள்ளதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

லஞ்சம், நியமனங்கள், ஹவாலா பரிவர்த்தனைகள் என அனைத்து விவரங்களையும் ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள நிலையில், அமைச்சர் கே.என்.நேரு பதவி விலகுவதே அறம். ஆதாரங்கள் கண்முன் இருந்தும், தமிழக காவல்துறை இன்னும் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யத் தயங்குவது ஏன்?

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry