
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சராக இருந்துவரும் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சிக் காலத்தில் அதிமுக அமைச்சரவையில் இருந்தார். அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அவர் மீது பண மோசடி புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை, அவரை சிறையில் அடைத்தது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி, நீதிமன்றங்களில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட நிலையில், இறுதியில் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
உச்சநீதிமன்ற ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜி மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம் பெற்றார். முதலமைச்சர் ஸ்டாலின் அவரை தியாகி எனவும் புகழ்ந்தார். இந்நிலையில், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்தது.

இந்த மனு மீதான விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு மெரிட் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறியதன் காரணமாகவே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. சாட்சிகளின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய அதிகாரத்தை எடுத்துக்கொள்ள உரிமம் வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
அப்போது, இந்த விவகாரத்தில் முடிவெடுக்க அவகாசம் வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கேட்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் திங்கட்கிழமை வரை அவகாசம் கொடுத்து, அன்றைய தினம் அமைச்சர் பதவியா, ஜாமினா என்பதை தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. அந்தக் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.

இதனிடையே, சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடியின் சர்ச்சை பேச்சை சுட்டிக்காட்டி, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். 5 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புகாரின் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஏப்ரல் 23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் அமைச்சருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் அதனை முடித்து வைத்து விட்டதாக தெரிவித்ததை ஏற்றுக் கொண்டு அந்த வழக்கை மதுரை அமர்வு முடித்து வைத்துள்ளது,” என்று தெரிவித்தார்.
அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங், “இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், முதன்மை அமர்வு மீண்டும் அதே விவகாரத்தை எடுக்க அவசியம் இல்லை. அமைச்சரின் முழுமையான பேச்சை கேட்காமல் நடவடிக்கை எடுக்கக் கூடாது. 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு குறித்து அமைச்சர் உள் அரங்கத்தில் பேசிய விவகாரம் தான் இது” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “தமிழகத்தின் முக்கிய சமயங்களான சைவ மற்றும் வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியின் கருத்துகள், இரு சமயத்தினரின் மனதை புண்படுத்தியுள்ளது. அவரது பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருகிறது. இந்தப் பேச்சுக்காக அவர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என காவல்துறை தெரிவித்து இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் செயல் துரதிஷ்டவசமானது.
வெறுப்பு பேச்சை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஏற்கெனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மூலம் சலுகை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி, அதனை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். வெறுப்பு பேச்சு தொடர்பாக அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.” என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
திமுக அரசுக்கு அடுத்த பேரிடியாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 60 மணி நேரம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றம் என்பது நாட்டு மக்களுக்கு எதிரான குற்றம். நாட்டின் நலன் கருதியே சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பொருளாதார நீதியை வழங்கியிருக்கிறது.
அரசியல் பழிவாங்கும் நோக்கு, அரசியல் உள்நோக்கம் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் விசாரிக்க முடியாது, அது நீதிமன்றத்தின் வேலையும் அல்ல. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் மற்றொரு கட்சி ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டு கூறுவது வழக்கமானதுதான். ஆனால் நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் நீதியை உறுதி செய்யவே முடியும் எனக் கூறி, தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், அமலாக்கத் துறை சட்டப்படி தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry